இலங்கை

முன்னாள் விடுதலைப்புலி கே.பி.: முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா..

KP-LTTE“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆயுத வழங்கல் பொறுப்பாளர் கே.பி. என்கிற கே.பத்மநாதன் விரைவில் இலங்கை அரசியலுக்குள் வருவார்” என்று ஊகம் தெரிவித்துள்ளார், “இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

இலங்கையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில், விடுதலைப் புலிகளின் முன்னாள் செய்தி தொடர்பாளர் தயா மாஸ்டர் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், சரத் பொன்சேகா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, “இலங்கை அரசு, முன்னாள் விடுதலைப் புலிகளை தம் பக்கம் இணைத்துக் கொண்டு வருகிறது. தீவிரவாதிகளுக்கு தண்டனை விதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் இவ்வாறு செயற்பட்டு வருகிறது.

இந்த வகையில் தற்போது தயா மாஸ்டர், வடக்கு மாகாண முதல்வர் வேட்பாளராக களம் இறக்கப்படுகிறார். அடுத்த கட்டமாக, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய கே.பி.யை அரசியலில் இறக்குவார்கள். அல்லது தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜபக்ஷே அரசு வழங்க திட்டமிடும்” என்று தெரிவித்தார்.விடுதலைப் புலிகள் ராணுவத்துக்கு எதிராக போர் புரிந்தபோது, புலிகளுக்கு தேவையான ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் அனுப்பி வைத்தவர் கே.பி… சரி. அந்த ஆயுதங்களை வைத்து விடுதலைப் புலிகள் ராணுவத்தை தாக்கியபோது, அந்த ராணுவத்துக்கு தலைமை தாங்கியவர், சரத் பொன்சேகா.

இலங்கை அரசு சார்பில் அப்போது ராணுவத்துக்கு தலைமை தாங்கிய சரத் பொன்சேகா, இப்போது, அரசின் நெம்பர்-1 எதிரி. அரசு ராணுவத்துக்கு எதிராக புலிகள் போர் புரிய அப்போது ஆயுதம் கொடுத்த கே.பி., இப்போது அரசு சார்பில் எம்.பி. ஆக்கப்படுவார் என்கிறார் அவர்.