அனைத்துலகம்

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே, 8 மாடி பில்டிங் இடிந்து விழுந்தது! 90 பேர் பலி!!

bangaladesh-20130424-1பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் புறநகரான சவாரில் ரானா பிளாசா என்ற பெயரில் 8 மாடி கட்டிடம் ஒன்று இன்று காலை, இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தில் பல ரெடிமேட் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.

கட்டிடம் இடிந்து தரைமட்டமான போது அங்கு சுமார் 600 தொழிலாளர்கள் ஆடை உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரிய வருகிறது. சற்றும் எதிர்பாராத வகையில் அந்த பில்டிங் இடிந்து விழுந்ததில், விபத்தில் பலியானோர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 87 ஆக உள்ளது.

வேறு பலர், விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து தப்புவதற்காக குதித்தனர். இவர்களை மீட்கும் பணிகள் நடக்கின்றன.

இந்த விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு படையினரும், ராணுவத்தினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.விபத்து நடைபெறும் என்பது நேற்றே தெரிந்திருந்ததுதான் இதிலுள்ள பெரிய சோகம்.

ரானா பிளாசா பில்டிங் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக நேற்றே லோக்கல் டி.வி. சேனல்களில் கூறப்பட்டும், யாரும் கண்டு கொள்ளாத காரணத்தால் விபத்து நடந்ததாக தெரியவருகிறது.

பங்களாதேஷின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கும் 20 பில்லியன் டாலர் ஏற்றுமதி வர்த்தகம், ரெடிமேட் ஆடை தயாரிப்பில் இருந்து கிடைக்கிறது. தொழிளாளர்களின் ஊதியம் குறைவு என்பதால், உலக பாஷன் பிரான்ட் ஆடைகள் பல, பங்களாதேஷிலேயே தயாராகின்றன.

தற்போது விபத்துக்கு உள்ளான பில்டிங்கில், Phantom Apparels Ltd., New Wave Style Ltd., New Wave Bottoms Ltd. New Wave Brothers Ltd. ஆகிய ரெடிமேட் ஆடை தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் தயாராகும் ரெடிமேட் ஆடைகள்தான், உலகப் புகழ்பெற்ற பிரான்ட் நேம்களான Benetton, The Children’s Place, Dress Barn ஆகியவற்றின் லேபல்களுடன், உச்ச விலைகளில் வெளிநாடுகளில் விற்பனையாகின்றன!