மே 18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2013 – தமிழீழ விடுதலைப் புலிகள்

Home » homepage » மே 18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2013 – தமிழீழ விடுதலைப் புலிகள்
மே 18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2013 – தமிழீழ விடுதலைப் புலிகள்

“இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள். ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சி கொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.” இவ்வாறு இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் வருமாறு>>>>>

தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/01/13
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
18/05/ 2013.

மே 18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2013

அன்பான தமிழ்பேசும் மக்களே,

இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள்.

ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சிகொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.

எமது இனத்தின் மீதான அடக்குமுறைகளிலும் அழிப்பு நடவடிக்கைகளிலும் அதியுச்சமாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுநாளே தமிழர் இனவழிப்பைச் சுட்டும் பொதுநாளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த கொடூரமான இனவழிப்பை நினைவு கொள்வதென்பது அவ்வடுக்களையும் கொடுமைகளையும் நினைத்து அழுது புலம்பிச் சோர்ந்து போய் அடங்கி விடுவதில் முடிந்து விடுதல் கூடாது. மாறாக இவற்றின் வலிகளை உணர்ந்து, எமது இனம் தொடர்ந்தும் இவ்வலிகளைச் சுமக்கவிடாமல் எமக்கான விடுதலையை விரைந்துபெற முனைப்புடன் செயற்பட ஊக்கப்படுத்தும் ஒருநாளாக அமைய வேண்டும்.

இன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னான நான்காம் ஆண்டை நினைவுகொள்கின்றோம். இக்காலப்பகுதியில் எண்ணற்ற துயரங்களை எமது இனம் கடந்துவந்துள்ளது. போர் முடிந்ததாக அறிவித்து நான்காண்டுகளாகியும் எமது மக்களின் இன்னல்கள் தீர்ந்தபாடில்லை. தொடர்ந்தும் அவர்கள் படையினரின் கெடுபிடிகளுக்குள்ளேயே வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.

எங்கு பார்த்தாலும் படையினரின் இருப்பே எமது தாயகத்தில் நிரம்பியுள்ளது. தமிழ்மக்களின் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் அனைத்திலும் படைத்தரப்பினரின் தலையீடு இருந்தவண்ணமேயுள்ளது. படையினருக்காக எமது மக்களின் இருப்பிடங்கள் அபகரிக்கப்படுகின்றன. படையினரின் துணையோடு எமது நிலங்கள் கொள்ளையிடப்படுகின்றன. ஒரு படையாட்சியே அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எமது மண்ணினதும் மக்களினதும் வளங்கள் அன்னியரால் சூறையாடப்படுகின்றன.

எமது மக்களைத் தொடர்ந்தும் அச்சநிலைக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் வைத்திருக்கும் நோக்கோடு சிங்களப் பேரினவாத அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. தற்போதும் மீன்பிடித்தலுக்கான கட்டுப்பாடு, போக்குவரத்துக் கட்டுப்பாடு என்பன தொடர்ந்த வண்ணமேயுள்ளன.

எமது மக்களின் ஜனநாயகக் குரல்கள் நசுக்கப்படுகின்றன. சுதந்திரமாக தமது கருத்தைச் சொல்ல முடியாத அடக்குமுறைக்குள்ளேயே மக்கள் வாழ்கின்றார்கள். ஊடகங்களின் மீதான அடக்குமுறைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. தமிழ் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் அரச பயங்கரவாதத்தின் வன்மத்தைத் துல்லியமாகக் காட்டுகின்றது.

தனியே ஊடகங்கள் மீது மட்டுமன்றி அரசியல்வாதிகள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், மதகுருக்கள் என்று அரசாங்கத்தை விமர்சிக்கும், நபர்கள் மீது அரசவன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டு தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதுகூட வன்முறைகள் ஏவிவிடப்படுகின்றன. இந்நிலையில் சாதாரண மக்களுக்குரிய பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது? போர் ஓய்ந்ததாகச் சொல்லப்பட்டபின் இந்த நான்காண்டு காலத்தில் தமிழ்மக்களுக்கான உரிமைகளை வழங்கி அவர்களுக்கான நியாயத்தை வழங்குவதற்குப் பதிலாக மென்மேலும் தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஒட்டுமொத்தமாகவே தமிழினத்தைக் கருவறுப்பதையே சிங்கள பெளத்த பேரினவாதம் செய்துகொண்டுள்ளது.

உலகத்துக்கு தன்னை நல்லபிள்ளையாகக் காட்ட சில திருகுதாளங்களை சிங்களப் பேரினவாத அரசு செய்துகொண்டுள்ளது. தமிழர்களைத் தமது படைகளில் சேர்ப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தாம் தமிழர்களைச் சரிசமமாக நடாத்துவதாக உலகை ஏமாற்ற முனைகிறது. தமிழர்களுக்குரிய அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதே இனச்சிக்கலுக்கான தீர்வாக அமையுமேயன்றி படையில் தமிழர்களைச் சேர்ப்பது போன்ற நாடகங்கள் தீர்வாகா.

ஆயிரக்கணக்கில் எமது மக்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டு, எம்மினம் வதைக்கப்பட்ட நாட்களின் ஆண்டு நினைவில் எமது இனம் துக்கித்திருக்கையில் மிகப்பெரும் போர் வெற்றிவிழாவை சிங்கள தேசம் கொண்டாடுவது என்பது உண்மையில் சிங்கள இனமானது நல்லிணக்கத்துக்குத் தயாரில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது. அத்தோடு இந்த வெற்றி மமதைக் களியாட்டமானது இலங்கைத்தீவு இணைய முடியா இரு தேசங்களைக் கொண்டுள்ளது என்பதையும் சுட்டுகின்றது.

சிங்கள அரசின் இந்தக் கொடூரமான முகத்தை சில பன்னாட்டு ஊடகங்கள் ஓரளவாவது வெளிக்கொண்டு வருகின்றன. சில மனிதவுரிமை அமைப்புக்களும் தொடர்ச்சியாக அரசின் அடக்குமுறைகளைப் பதிவு செய்து வருகின்றன. தன்னலமற்றுப் பணியாற்றும் இவ்வமைப்புக்களின் நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு ஓரளவு ஆறுதலளிக்கின்றன. அதேவேளை, பன்னாட்டு அரசுகள் சில தமது சொந்த நலன்களுக்காகவே சிறிலங்கா அரசுமீது அழுத்தங்களைப் பிரயோகித்தாலும்கூட, பேரினவாத அரசின் தமிழர் மீதான விரோதப்போக்கை ஓரளவாவது ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளன.

ஆனால் இந்த மாற்றத்துக்காக எமது இனம் கொடுத்த விலை மிகப்பெரியது. கடந்த காலத்தில் எமது குரல்களைச் செவிமடுக்காது பாராமுகமாக இருந்துவிட்டு இப்போது மெல்ல மெல்ல, அதுவும் அரைகுறையாகக் குரல்கொடுப்பது என்பது தமிழ்மக்கள் தொடர்பில் உலகம் இன்னமும் முழுமையாக நியாயத்தின்பால் செயற்படத் தொடங்கவில்லையென்பதையே உணர்த்தி நிற்கின்றது.

தமிழ்மக்கள் குறித்த கரிசனை மேலெழும்போதெல்லாம் விடுதலைப் புலிகள் அமைப்பைக் காரணம் காட்டியே எமது மக்களின் அவலங்களும் அபிலாசைகளும் முடக்கப்பட்டன. ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்மக்களுக்கான நியாயத்தை வழங்க யார் தடைநிற்பதாக பன்னாட்டுச் சமூகம் சாட்டுச் சொல்லப் போகின்றது?

நியாயமற்ற முறையில் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டு எமது மக்களின் நியாயமான போராட்டத்தை நசுக்குவதில் குறியாக இருந்த உலகநாடுகளே எமது மக்களின் பாதுகாப்பற்ற தன்மைக்கும், இன்று அவர்கள் எதிர்கொள்கின்ற இனவழிப்புக்கும் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளவர்கள். உருப்படியான ஒரு பாதுகாப்புப் பொறிமுறையைக்கூட எமது மக்கள்சார்ந்து ஏற்படுத்தாமல் வெறும் காகித அறிக்கை விட்டுக்கொண்டிருப்பது விளலுக்கு இறைத்த நீரே என்பதை உலகநாடுகள் உணரவேண்டும்.

சிங்களப் பேரினவாதத்தின் கோரக்கரங்களில் எமது மக்களைச் சரணாகதியாக்கி, மக்களை அழிப்பவர்களிடமே அவர்களின் பாதுகாப்பையும், குற்றச்செயல்களை விசாரிக்கும் பொறுப்பையும் கொடுத்துவிட்டு வாளாவிருக்கும் பன்னாட்டுச்சமூகம் மிகவிரைவில் விழித்துக்கொள்ள வேண்டும். படிப்படியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் இனவழிப்பை நிறுத்தி உரிய தீர்வைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியைத் தொடங்க வேண்டும்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்திருந்த எமது மக்கள் படிப்படியாகப் போராடத் தொடங்கிவிட்டார்கள். மண் அபகரிப்புக்கு எதிராக தாயகத்தில் அறவழிப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்தவண்ணமுள்ளன. தமிழகத்தில் மாணவர்களின் போராட்டங்கள் என்றுமில்லாத வகையில் புத்துணர்வோடு புதிய தடம் பதித்துள்ளன. தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் எம்மினம் இன்றில்லை.

இனியும் காலந்தாழ்த்தாது பன்னாட்டுச் சமூகம் எமது மக்களுக்கான தீர்வைப் பெற்றுத்தர முயல வேண்டும். உரிய தீர்வை உரிய நேரத்தில் பெற்றுத்தர வகைசெய்யாவிடத்து நாம் தொடர்ந்தும் எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு தெரிவில்லை.

அன்பான தமிழ்பேசும் மக்களே,

விடுதலைக்காக எத்தகைய அர்ப்பணிப்பையும் செய்யத் துணிந்த மக்கள் கூட்டத்தை எந்த அடக்குமுறைச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது. அளவிட முடியாத அர்ப்பணிப்புக்களைப் புரிந்து போராடிய நாம் எமது இலட்சியத்தை அடையும் வரை ஓய்ந்துவிட முடியாது.

உலக அரங்கில் எமது நியாயமான போராட்டம் ஒருநாள் அங்கீகரிக்கப்படும். எமக்கான விடுதலை ஒருநாள் நிச்சயம் கிடைத்தே தீரும். அதுவரை ஓய்ந்துவிடாமல் போராடுவோம் என இந்நாளில் நாம் உறுதிபூணுவோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

இவ்வறிக்கை வழமைபோல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Comments Closed

%d bloggers like this: