புலம்பெயர்

பழி வாங்கப்பட்டாரா ராதிகா சிற்சபை ஈசன் !!

rathikaபொது நிகழ்ச்சிகளை நடத்தும் நம் அமைப்புக்கள் பிறரை அவமானப்படுத்த வேண்டும் , பழி வாங்க வேண்டும் உள்ளிட்ட பல சிந்தனைகளுடன் சமீப காலமாக செயல்பட்டு வருவது ஒரு மோசமான செயலாகவே தெரிகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நம்மவர் நினைவு நிகழ்விற்குச் சென்ற ராதிகா அவர்களுக்கு குயின்ஸ் பார்க் முன்றலில் நடந்த கனடியத் தமிழர் தேசிய அவையின் கூட்டத்தில் உரையாற்றுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவரும் , ஆசியாவுக்கு வெளியில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்க்கும் முதல் நபரான ராதிகா சிற்சபை ஈசன் அன்றைய தினம் நடைபெற்ற மூன்று நம்மவர் நினைவு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

குயின்ஸ் பார்க்கில் நடைபெற்ற நிகழ்வில் இவர் பேசுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக சம்பந்தப்பட்ட அமைப்பு ராதிகாவிடம் கூறிய விடயம் ஜெனீவாவில் இவ்வமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் ராதிகா கலந்து கொள்ளவில்லை என்பதும் , அங்கே இவ்வமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகளில் ராதிகா கைசாத்திடவில்லை என்பதும் தான். இதையெல்லாம் தகுதியாகக் கொண்டு தான் பிறருக்கு உரையாற்ற அனுமதி வழங்கியுள்ளோம் என்றும் இவ்வமைப்பினர் ராதிகாவிடம் கூறியுள்ளனர். உரையாற்ற வேண்டுமெனில் தீர்மானத்தில் கைசாத்திட வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் இருந்ததாகத் தெரிய வந்துள்ளது.

கனடிய பிரதான கட்சிகளில் ஒன்றான என்.டி.பியினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நிகழ்வுகளுக்கு செல்லும் போது அங்கு வைத்து பல பக்கங்களைக் கொண்ட தீர்மானங்களில் கைசாத்திடுவது எந்த அளவிற்குச் சாத்தியம் என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும்.

மேலும் இப்படியான் பழி வாங்கும் நோக்கத்துடனும் , அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நிகழ்விற்கு சம்பத்தப்பட்ட அமைப்பு அழைத்திருக்கவும் கூடாது.

இது வேண்டுமென்றே திட்டமிட்டு அவ்வமைப்பினால் செய்யப்பட்டதாகவே தெரிகிறது. இது போன்ற தவறுகளை ஒரு போதும் கனடியத் தமிழ் மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என்பதை கனடியத் தமிழர் தேசிய அவை புரிந்து கொள்ள வேண்டும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்த மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது

தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காகப் போராடியோரையும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும் இழந்த துக்க நாள் இது. தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு கனடா அரசாங்கத்தின் சட்டத்திற்கு அமைவாக நான் கைகோர்த்து நிற்பேன். கனடாவின் 307 நாடாளுமன்ற உறுப்பினர்களில் என்னையும் ஒருவராக மக்கள் தெரிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கனேடிய சட்ட திட்டங்களுக்கு அமைய நானும் தமிழ்மக்களின் உரிமைக்காக பாடுபடுவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.