இந்தியா தமிழ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்

THirumavalavan-இலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என ஈழத் தமிழர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத் துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’உலகநாடுகளின் வற்புறுத்தல் காரணமாக இலங்கை அரசு தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்த முன்வந்துள்ளது. மாகாணசபை அமைவ தால் தமிழர்களின் பிரச்சனைகள் முற்றாகத் தீர்ந்துவிடப் போவதில்லை எனினும் அவர்களது உரிமை மீட்புப் போராட்ட பயணத்தில் இதுவும் பயன்கொடுக்கும். எனவே ஈழத் தமிழ் உறவுகள் அனைவரும் எதிர்வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தவறாமல் பங்கெடுக்கவேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்குப் பெருமளவில் வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண் டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

வடக்கு மாகாணத் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் போட்டியிடுகின்றன என்றாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழர் பிரச்சனை குறித்த தொலைநோக்குப் பார்வையோடு உள்ளது.

’தமிழரின் பாரம்பரிய பிரதேசமாகிய வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து தன்னாட்சி கொண்ட தமிழ் மக்களின் ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்துவது, வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் சிவில் செயற்பாடுகளில் நிலவுகின்ற இராணுவ தலையீட்டை இல்லாமல் செய்து சுதந்திரமான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவது, மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது’ என்று பல்வேறு வாக்குறுதிகளை அது தனது தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளது.

தமிழர் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் வடக்கிலும் கிழக்கிலுமாகப் பிரிந்துகிடக்கும் தமிழர்களையும் தமிழ்பேசும் முஸ்லிம் களையும் ஒருங்கிணைப்பதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகநாடுகளின் ஆதரவு அதிகரித்துவரும் வேளையில் ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒற்று மையோடு இருப்பதை உலகுக்கு உணர்த்தவேண்டியது அவசியம். அதற்கு இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

வடக்கையும் கிழக்கையும் இணைப்பதென்பது முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு இருந்தால்தான் சாத்திய மாகும். அதுபற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைபாடு குறித்து இதுவரை எந்தவொரு முஸ்லிம் கட்சியும் கருத்து கூறவில்லை. அவர்களும் சிங்களப் பேரினவாதத்தின் தாக்குதலுக்கு ஆளாகிவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒருங்கிணைந்து தமது உரிமைகளைப் பாதுகாக்க அவர்கள் முன்வரவேண்டும் என வேண்டுகிறேன்’’என்று கேட்டுக்கொண்டுள்ளார்.