த.தே.கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை ஒரு வரலாற்று ஆவணம்-போல் நியூமன்

Home » homepage » த.தே.கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை ஒரு வரலாற்று ஆவணம்-போல் நியூமன்

u1_paul-niyumanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையானது கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஆய்வாளர்களுக்கான ஆவணம் அல்ல. இது வேட்டையாடப்பட்ட, பாதிக்கப்பட்ட, அவமானப்பட்ட, பட்டினியால் வாடிய, விமானக் குண்டுகளால் அழிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான ஆவணம். இவ்வாறு Colombo Telegraph ஊடகத்தில் மனித உரிமை செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான Dr. Paul Newman எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள், தமது எதிர்காலத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாக தாக்கத்தை விளைவிக்கக் கூடிய முக்கிய இரண்டு விடயங்கள் தொடர்பில் தமது கவனத்தைச் செலுத்தியிருந்தனர்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவி பிள்ளை சிறிலங்காவுக்கு வருகை தந்தமை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டமை போன்ற இரண்டு முக்கிய விடயங்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் உற்றுநோக்கினர்.

இவ்விரு விடயங்கள் பெரும்பாலும் பாராட்டுக்குரியவையாக உள்ளன. இவ்விரு விடயங்களின் வருவிளைவுகள் சாதகமாகவே காணப்படுகின்றன.

அரசியற் கட்சி ஒன்றின் தேர்தல் அறிக்கையானது ‘அதன் வாக்காளர்களை முதன்மைப்படுத்துவதை நோக்காகக் கொண்டு’ வரையறுக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில், சிறிலங்காவில் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ‘வடக்கில் வாழும் தமிழர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்’ மிக முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிடத்தக்க சில சாதகமான விடயங்கள் பின்வருமாறு:

01. சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதனை உறுதிப்படுத்துதல்.

02. அனைத்துலக சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான கோரிக்கை.

03. இறுதித் தீர்வானது 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை நிராகரித்தல்.

04. தேர்தல் அறிக்கையில் ‘கொழும்பை மையப்படுத்தியது’ எனக் குறிப்பிடாது ‘தமிழர்களை மையப்படுத்தியது’ எனக் குறிப்பிட்டிருத்தல். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கொழும்பு, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஏனைய நாட்டு அரசாங்கங்களைக் கருவியாகப் பயன்படுத்துவதற்கான அரசியல் உரிமையைக் கொண்டிருத்தல்.

05. போரின் போது தமது கணவன்மாரை இழந்த பெண்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து முதன்மைப்படுத்துதல். இதன் மூலம் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் உணர்வுகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளை முதன்மைப்படுத்துதல்.

06. வடக்கை மீளக் கட்டுவதில் தமிழ் மக்களுடன் இணைந்து முஸ்லீம்களும் செயற்படுவதை வரவேற்றல். அத்துடன் முஸ்லீம் மக்களுடன் உறவைப் பேணுதல்.

07. சிறிலங்கா அரசாங்கத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்கு சுயாதீனமான அனைத்துலக விசாரணை ஒன்று தேவை எனக் கோருதல்.

போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன் மட்டுமல்லாது, தமிழ்நாடு உட்பட உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட ஆதங்கங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது தேர்தல் அறிக்கையில் பதிலளித்துள்ளது.

• தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 13வது திருத்தச் சட்டமானது இறுதித் தீர்வு என்பதை நிராகரிப்பதில் இந்தியாவின் விருப்பத்திற்கேற்ப நடக்கவில்லை.

• தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கொழும்பின் இராஜதந்திர அழுத்தத்திற்கு கட்டுப்பட்டு நடக்காது. அத்துடன் தமிழ் மக்களின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படும் விதமாக நடந்து கொள்ளாது.

தமிழர்களின் வரலாற்றுப் போராட்டமானது தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையானது சுட்;டிநிற்கிறது.

1948லிருந்து உடல் ரீதியாக மட்டுமன்றி உளரீதியாகவும் பாதிக்கப்பட்டு குரல் கொடுக்க முடியாது தவிக்கும் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக த.தே.கூ செயலாற்றி வருகிறது. சிறிலங்காத் தீவானது 1948ல் கொலனித்து ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திரமடைந்ததிலிருந்து இன்று வரை இத்தீவில் பெரும்பான்மையாளர்களின் அதிகாரம் மிக்க ஆட்சியே நடைபெற்று வருகிறது.

இத்தீவில் தமிழ் மக்கள் மிகவும் மோசமாக நடாத்தப்படுகின்றனர் என்பதை வரலாற்றுச் சம்பவங்கள் ஆதாரப்படுத்துகின்றன. தமிழ் மக்கள் இவ்வாறு துன்பப்படுவதானது பிரித்தானியா விட்ட வரலாற்றுத் தவறு என்பதை பிரித்தானியா அங்கீகரித்து இதற்கேற்ப வருங்காலங்களில் அனைத்துலக அரங்கில் செயற்பட வேண்டும்.

இந்தப் பின்னணியில், சிறிலங்காத் தீவில் வாழும் தமிழ் மக்கள் தேசிய ரீதியாக சிங்களவர்களால் புறக்கணிக்கப்படுவதாகவும் இதனால் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கு வழிவகுக்கப்பட வேண்டும் எனவும் ஏப்ரல் 1951ல் இலங்கை தமிழரசுக் கட்சி தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் 1970களில் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்பதை இது மறுதலிக்கிறது.

முதலில் வெளிநாடுகளின் ஆதிக்கத்தாலும் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தாலும் தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை இழக்கவேண்டி நேரிட்டது. 1970களிலிருந்து இன்று வரை தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல்வேறு சமாதானப் பேச்சுக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத நிர்வாக முறைமையானது பெரும்பான்மை ஆட்சியாளர்களால் தொடர்ந்தும் சிறிலங்காவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தமிழ் மக்களின் நீதியான கோரிக்கைகளை சிறிலங்கா ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையிலும், சிங்கள தேசியவாதத்தை தமிழ் மக்கள் மீது பிரயோகித்து அவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்தியதன் காரணமாகவும் சிறிலங்காவில் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டியேற்பட்டது. இவ்வாறான யுத்தத்தின் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் போரின் பாதிப்புக்களைச் சந்தித்தனர்.

1948ல் சிறிலங்காத் தீவு சுதந்திரமடைந்ததிலிருந்து சிறிலங்கா அரசால் வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் குடிப்பரம்பலில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்குடன் திட்டமிட்ட ரீதியில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக, காலங் காலமாக வாழ்ந்து வரும் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

1881 லிருந்து இவ்வாறான குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது உண்மையான காரணி. ஆனால் 1948லிருந்தே சிறிலங்கா அரசின் உதவியுடன் வடக்கு கிழக்கு மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கும் மேலாக தமிழ் இளையோர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் கல்வித் தரப்படுத்தல் சட்டம், அரச துறையில் தமிழ் இளையோர் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதில் புறக்கணிப்புச் செய்தமை, 1956,1958,1961,1977,1981 மற்றும் 1983களில் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டமை உள்ளடங்கலாக தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கின்ற பல்வேறு பாரபட்சப்படுத்தல் சட்டங்களை சிங்கள அரசு அமுல்படுத்தியது. சிறிலங்கா அரசானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எவ்வித பாதுகாப்பையும் வழங்கவில்லை.

இவ்வாறான பின்னணியில், நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்த பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சிறிலங்கா அரசால் வடக்கு கிழக்கிற்கு விரட்டியடிக்கப்பட்டனர். இதன்மூலம் வடக்கு கிழக்கானது தமிழ் மக்களின் தாயகப் பிரதேசம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சிறிலங்கா அரசானது தனது சொந்த மக்களான தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தவறியதுடன், இந்த மக்கள் தமிழர்களின் வரலாற்று ரீதியான வாழிடமான வடக்கு கிழக்கிற்கு துரத்தப்பட்டமை போன்றன சிறிலங்கா அரசானது தமிழ் மக்கள் மீதான தனது இறையாண்மையை இழந்தது. இவ்வாறு துரத்தியடிக்கப்பட்ட மக்கள் மீண்டும் அவர்களது சொந்த இடத்தில் மீளக் குடியேற்றப்பட வேண்டும்.

இறையாண்மை என்பது மக்களுடன் தொடர்புபட்டது எனவும் அரசுடன் தொடர்புபட்டதல்ல எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் உறுதியாக நம்புகிறது. கொழும்பிலுள்ள சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களை ஆள்வதற்கான உரிமையைக் கொண்டிருக்கவில்லை. தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையைக் கொண்டுள்ளனர் என்பது கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகில் மனித உரிமை என்பது புதியதொரு விடயமாக மாறிவருகிறது. மக்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு சேவை ஆற்றுவதற்காகவுமே அரசுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கே மக்களின் அரசியல் அவாக்கள் என்பது மத்திய மயப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் இறையாண்மை என்பது கோட்பாடாக காணப்படுகிறது. அரசாங்கத்தின் அதிகாரமானது உருவாக்கப்பட்டு, மக்களால் நிலையாகப் பேணப்படுவதே இறையாண்மை எனக் கூறப்படுகிறது. இந்த மக்கள் எல்லாவிதமான அரசியற் சக்தியின் ஊடகமாகக் காணப்படுகின்றனர்.

“சுதந்திரமான அரசாங்கங்களில், ஆட்சியாளர்கள் சேவகர்களாகவும் மக்கள் அவர்களின் மேலதிகாரிகளாகவும் ஆட்சியாளர்களாகவும் காணப்படுகின்றனர்” என பென்ஞமின் பிரான்கிளின் குறிப்பிட்டுள்ளார். பிரபலமான இறையாண்மை என எதுவுமில்லை. ஆனால் மக்களின் குரல்கள் முக்கியமானவை. இங்கே தமிழ் மக்களின் குரல்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.

இந்நிலையில், சிறிலங்கா அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 13வது திருத்தச் சட்டமானது தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இறுதிப் பொறிமுறை அல்ல. இதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இதில் பெரும்பாலான அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடமும் அதன் முகவரான ஆளுநரிடமும் கையளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது முதலாவது விடயமாகும். இந்த உடன்படிக்கையின் பகுதியாகவே 13வது திருத்தச் சட்டம் வரையப்பட்டது. சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்படும் ஆளுநரின் கைகளில் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் முதலமைச்சர் போன்று ஆளுநரை ஏற்றுக்கொள்ள முடியாது.

எமது அரசியல் தத்துவம் என்பது அதிகாரம் மிக்க சிறிலங்க அரசிற்கான அடிப்படை ஜனநாயக சவாலுக்கு வழிகோலுகிறது. இதனால் எமது அரசியல் நிகழ்ச்சித் திட்டமானது நீதி மற்றும் சமவுரிமையைக் கோரும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அவாக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

2009லிருந்து, சிறிலங்காவை ஆளும் தற்போதைய அரசாங்கமானது உள்நாட்டில் போதியளவில் சவால்களை ஏற்றுச் செயற்படவில்லை. இதன் போர் வெற்றிக் கதாநாயகனான ஜெனரல் சரத் பொன்சேகாவை தற்போதைய அரசாங்கம் சிறையிலடைத்தமை, சிறிலங்காவின் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளடங்கலாக பல்வேறு சவால்கள் நாட்டில் இடம்பெற்ற போதும், ராஜபக்ச அரசாங்கம் போதியளவில் இவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.

அனைத்துலக ஆதரவையும் வடக்கு மாகாண சபையைக் கட்டுப்படுத்தும் என எதிர்வுகூறப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. ஏனெனில் தமிழ் மக்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் கூட்டமைப்பு தேர்தல் மூலம் வெற்றி பெறுவதானது அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக காணப்படும்.

1991லிருந்து இந்தியாவின் தமிழ்நாட்டில் அடிப்படை வசதிகள் கூடப் பூர்த்தியாக்கப்படாத அகதி முகாங்களில் வாழும் சிறிலங்காவைச் சேர்ந்த தமிழ் அகதிகள் தொடர்பாக தமிழர்களின் தாய்நாடான ஈழத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதானது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் அவாக்களைப் பூர்த்தி செய்து இதன்மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கேற்ப சிறிலங்கா அரசு தனது கட்டமைப்பை மீளவும் கட்டியெழுப்புவதானது இயலாத காரியம் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்ட விரும்புகிறது. இவ்வாறான இயலாமையின் காரணத்தால் சிறிலங்கா அரசானது தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றது. இது தொடர்பில் அனைத்துலக அரங்கானது சிறிலங்காவுக்கு எதிராக தனது அழுத்தத்தை முன்வைத்து வருகின்றது. இவ்வாறான மனித உரிமை மீறல்களுக்கு அனைத்துலக சமூகம் பதிலளிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

ஒரு நாடானது தனது சொந்த மக்களைப் பாதுகாக்கத் தவறும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட சமூகத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்துலக சமூகத்திற்கு உரித்தானதாகும். இந்நிலையில் சிறிலங்கா அரசால் பாதுகாக்கத் தவறிய தமிழ் மக்களை அனைத்துலக சமூகம் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமான மீறல்களை விசாரணை செய்வதற்கு அனைத்துலக ரீதியில் சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும். இதன்மூலம் போரின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படுவதுடன், அவர்களுக்கான நட்டஈடும் வழங்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன் மூலம், புலிகள் அமைப்பால் இழைக்கப்பட்ட மீறல்களுக்கு பொறுப்பளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுவதில் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அமைதி காத்து வருகின்றனர் என்கின்ற குற்றச்சாட்டு முறியடிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவானது இறையாண்மை அரசு என்ற வகையிலும், ஐ.நா அனைத்துலக சாசனத்தின் கீழ் கையெழுத்திட்ட நாடு என்ற வகையிலும் சிறிலங்கா அரசாங்கமானது தனது மக்கள் மீது இழைத்த மீறல்களுக்கு பொறுப்பளிக்க வேண்டும் என 2010 ஜனவரியில் டப்ளினில் இடம்பெற்ற நிரந்த மக்கள் நீதிமன்றில் கட்டளையிடப்பட்டது. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை நிரூபித்துள்ளது. இந்தச் சவாலை சிறிலங்கா அரசு ஏற்றுக்கொண்டு நேர்மறையாகப் பதிலளிக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தை விட்டு வெளியேறிய அனைத்து முஸ்லீம்களும் மீண்டும் அவர்களது சொந்த இடங்களிவல் குடியேறுவதற்கும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு வெளியேறிய முஸ்லீம் மக்கள் மீண்டும் வடக்கு மாகாணத்தில் குடியேறுவதற்கு வடக்கு மாகாண சபையானது உந்துதலை அளிப்பதுடன், இந்த மக்கள் மீண்டும் தமது வாழ்வை ஆரம்பிப்பதற்கான உதவிகளை வழங்குவதும் உறுதிப்படுத்தப்படும்.

முஸ்லீம் மக்கள் தொடர்பில் எழுப்பப்படும் பல்வேறு சந்தேகங்களை கூட்டமைப்பின் இந்த அறிக்கையானது முடிவுக்கு கொண்டுவரும். தமிழ் மக்களால் முஸ்லீம்கள் அடக்கப்பட்டனர் என்பதை மீண்டுமொரு தடைவ கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் வரலாற்று ரீதியாக ஏற்பட்ட இவ்வாறான தவறுகளைத் திருத்தி முஸ்லீம்களின் நலன்களை முதன்மைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பு தயாராக உள்ளது. முற்போக்கான முஸ்லீம்கள் இதனை வரவேற்று, காலத்தை விரயமாக்காது தமது சொந்த நலனுக்காக கூட்டமைப்புடன் இணைந்து செயலாற்றி பொதுபல சேனவின் வன்முறைகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

ஜெனீவாவில் ராஜபக்ச அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகச் செயற்பட்ட சிங்களப் பேரினவாதிகள் கூட்டமைப்பின் இந்த ஆவணத்தை விமர்சித்துள்ளனர். படுகொலைகளைப் புரிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக செயற்படும் சிங்களப் பேரினவாதிகள் உண்மை வெளிக்கொணரப்படும் போது தமது செயல்களை நினைத்து வெட்கப்படுவர். இவ்வாறானவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு மற்றும் இந்தியாவைச் சமாதானப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது எனக் கூறுவதற்கு எவ்வித அருகதையும் அற்றவர்கள். பயனுள்ள ஜனநாயக நடவடிக்கைகளைப் பாதுகாப்பதற்கான பலத்தை கூட்டமைப்பு கொண்டுள்ளது என்பது போதியளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துலக சமூகத்தின் தலையீடின்றி சிறிலங்கா அரசாங்கங்களில் நம்பிக்கை கொள்வதில் பயனில்லை என்பது அனைத்து தமிழ் மக்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக உள்ளது.

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமது கருத்துக்களை வெளிப்படுத்தி தமது நிலைப்பாட்டைச் சரியாக முன்வைக்கவில்லை என நான் விமர்சித்துள்ளேன். 1976ல் எடுக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பாக தேர்தல் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் திரு.கஜன் பொன்னம்பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பார் என நான் நம்புகிறேன். திரு.சுமந்திரன் மற்றும் ஏனையவர்கள் திறம்படச் செயற்படுகின்றனர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நம்பிக்கைகளை நீங்கள் மீளவும் பெற்றுக்கொள்ள வேண்டும். இது வடக்கில் பெறும் வாக்குகள் எனத் தற்போது மொழிபெயர்க்கப்பட வேண்டியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையானது கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஆய்வாளர்களுக்கான ஆவணம் அல்ல. இது வேட்டையாடப்பட்ட, பாதிக்கப்பட்ட, அவமானப்பட்ட, பட்டினியால் வாடிய, விமானக் குண்டுகளால் அழிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான ஆவணம். போர் தவிர்ப்பு வலயங்களில் வேட்டையாடப்பட்ட, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான ஆவணம்.

பாலில்லாது அல்லது கொடுப்பதற்கு மருந்தின்றி தமது கைகளில் பிள்ளைகள் இறப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கான ஆவணமே இதுவாகும். மெனிபாம் முகாங்களில் நித்திரையின்றி இரவுகளைக் கழித்த மக்களுக்கான ஆவணமாகும். காணாமற் போனவர்களின் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சித்திரவதைப்படுத்தப்படுவோரின் பெற்றோர்கள், மனைவிகள், பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் போன்றோருக்கான ஆவணம் இதுவாகும்.

தமிழர்களாகப் பிறந்த காரணத்திற்காக அகதிகளாகி, கசப்பான வடுக்களைச் சுமந்து வாழுவோருக்கான ஆவணமாகும். முஸ்லீம்கள் துன்பப்பட்டுள்ளனர் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்: ஆனால் தமிழ் மக்கள் 1948லிருந்து அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வாழும் சமூகமாகும். பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு நீதி மற்றும் அமைதியைப் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

நன்றி- புதினப்பலகை
மொழியாக்கம்-நித்தியபாரதி.

Comments Closed

%d bloggers like this: