இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

என்றும் தமிழர்களின் தானைத் தலைவன் பிரபாகரன் மட்டுமே: ஸ்கந்தபுர மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தவிசாளர் தனிநாயகம்

manthai_east_tna_020தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களின் தொடராக கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ம.அன்ரன் டானியல் (ஒஸ்மன்) தலைமையில் மங்கள விளக்கேற்றல் மற்றும் உயிர் நீத்தோர் அகவணக்கத்துடன் நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணிக்கு நிறைவடைந்தது.

இதன் போது சிறப்புரையாற்றிய மாந்தை கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தனிநாயகம்,

பிரபாகரன் என்னும் தானைத் தலைவனின் நல்லாட்சியிலே நள்ளிரவில் கூட ஒரு பெண் தன்னந்தனியாக நடமாடக் கூடிய சுதந்திரம் இருந்தது. இன்று அந்தச் சுதந்திரம் இங்கு இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

இன்று அரச சார்புப் பரப்புரைகளில் ஈடுபடுவோர் யாரெனப் பார்த்தால், அன்று பிரபாகரன் காலத்தில் களத்தில் நின்று போராடி மாவீரனாகியவனின் வித்துடலைச் சுமந்து சென்றவர்கள், அஞ்சலி செலுத்தியவர்கள் விதைகுழிக்கு மண் போட்டவர்கள்.

அந்த விதைகுழிகளைத் தோண்டி மண்ணோடு வீதிகளில் போட்டுப் பரவியதைப் பார்த்ததன் பின்னரும் அரச தரப்போடு சேர்ந்துள்ளார்கள் என்றால் இவர்கள் நிச்சயமாகத் தமிழர்களாக இருக்க முடியாது. இவர்கள் தமிழர்கள் தானாவென்று மரபணுப் பரிசோதனை செய்து பார்க்கவேண்டியுள்ளது.

எங்களுக்கு எறிகணைகளாக, துப்பாக்கி ரவைகளாக விமானக் குண்டுகளாக தந்தவற்றையெல்லாம் மறந்து விட்டு இப்போது அரசுடன் சேர்ந்து அபிவிருத்தியினைப் பற்றிப் பேச வருகிறார்கள். ஆனால் எங்கள் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

எதிர்வரும் 21ம் திகதி நடக்கப் போகும் தேர்தலின் நாம் அறுதிப் பெரும்பான்மையினைப் பெறவேண்டும். எங்கள் மாவட்டங்களில் புதிது புதிதாக சிங்களக் குடியேற்றங்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட விடயங்களைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் வட மாகாண சபையினை நாங்கள் கைப்பற்ற வேண்டியது அவசியமாகும். எங்கள் சந்ததி நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு இதன் மூலம் அடிகோலப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், சி.சிறீதரன், வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் நாவை குகராசா,உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன், உறுப்பினர்கள் சு.தயாபரன், மா.சுகந்தன், ப.குமாரசிங்கம், சி.தவபாலன், வி.சுவிஸ்கரன், மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தனிநாயகம், வலிகாமம் பிரதேச சபை உறுப்பினர் த.நடனேந்திரன், கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞரணித் தலைவர் சுரேன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கண்டாவளைப் பிரதேச அமைப்பாளர் காசி மணி, கட்சி செயற்பாட்டாளர்கள் தி.சிவமாறன், ஜெயக்குமார், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.