நினைவு கூரப்பட்ட நாசிப்படுகொலைகளும்- மறக்கப்பட்ட கிழக்கு படுகொலைகளும்- இரா.துரைரத்தினம்

Home » homepage » நினைவு கூரப்பட்ட நாசிப்படுகொலைகளும்- மறக்கப்பட்ட கிழக்கு படுகொலைகளும்- இரா.துரைரத்தினம்

Sathurukondanஜேர்மன் ஜனாதிபதி Joachim Gauck இரண்டாம் உலகப்போரின் போது நாசிப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டின் Oradour-sur-Glane கிராமத்திற்கு அண்மையில் விஜயம் செய்து கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஜேர்மன் நாட்டின் நாசிப்படைகளால் 1944ஆம் ஆண்டு யூன் 10ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த படுகொலையில் 247 சிறுவர்கள் உட்பட 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

படுகொலை நடந்த பின்னர் இந்த பகுதிக்கு செல்லும் முதலாவது ஜேர்மன் அரசுத்தலைவர் இவராகும். இவருடன் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஹொய்ஸ் ஹொலண்டே (François Hollande) யும் அந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்த படுகொலையிலிருந்து தப்பி இன்றும் வாழும் சிலரையும் அவர்கள் சந்தித்தனர்.

தனது நாட்டு நாசிப்படைகள் பிரான்ஸ் கிராமம் ஒன்றில் நடத்திய கோரக்கொலைகளை நினைவு கூர்ந்து முதல் தடவையாக ஜேர்மன் ஜனாதிபதி அந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இது வரலாற்றில் மிகப்பெரிய வடு என்று அந்த இடத்தில் வைத்து ஜேர்மன் ஜனாதிபதி வருத்தம் தெரிவித்திருந்தார்.

இப்படி ஒரு வருத்தத்தை எப்போது இலங்கை தலைவர்கள் தெரிவிக்கப்போகிறார்கள். தற்போதைய ஜேர்மன் ஜனாதிபதி இரண்டாம் உலக போருடனோ அல்லது நாசிப் படைகளுடனோ தொடர்புடையவர் அல்ல. ஆனாலும் தனது நாட்டை சேர்ந்த நாசிப்படைகள் செய்த படுகொலைக்காக அவர் வருத்தம் தெரிவித்தார்.

இந்த செய்தியை பார்த்த போது எனக்கு நினைவுக்கு வந்தது இலங்கையில் நடந்த படுகொலைகள் தான். மிகப்பெரிய அவலம் என்ன என்றால் இலங்கையில் போரில் கொல்லப்பட்ட எவருக்கும் அஞ்சலி செலுத்துவதற்கோ ஒரு விளக்கை ஏற்றி வணங்குவதற்கோ உரிமை கிடையாது. அது சாதாரண அப்பாவி மக்கள் தொடக்கம் உலகின் அதி உயர் ஜனநாயக மனித உரிமை பீடத்தில் இருக்கும் நவநீதம்பிள்ளை வரை யாருக்கும் அந்த உரிமை கிடையாது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உரிமை மறுக்கப்பட்ட உலகத்தில் ஒரே நாடு இலங்கையை தவிர வேறு நாடு இருப்பதாக நான் அறியவில்லை.

இது நவநீதம்பிள்ளைக்கு முதல் அனுபவமாக இருக்கலாம். ஆனால் ஈழத்தமிழர்களை பொறுத்தவரை அவர்கள் இந்த அடக்குமுறைக்குள் தான் தினம் தினம் வாழ்கிறார்கள். நவம்பர் மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றுவதற்கோ அல்லது வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கோ உரிமை மறுக்கப்பட்டவர்களாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற உண்மையை நவநீதம்பிள்ளை அறிந்திருப்பாரோ தெரியவில்லை.

பலரும் இன்று இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற போர்க்குற்றம் பற்றியே பேசுகின்றனர். போர்க்குற்றமும் இனப்படுகொலையும் முள்ளிவாய்க்காலில் மட்டும் நடந்த ஒன்று அல்ல. அது வடக்கு கிழக்கின் ஒவ்வொரு கிராமங்களும் இதன் அடையாளங்களாகவே காணப்படுகின்றன.

கிழக்கில் 1990ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் நடந்த இனப்படுகொலைகள் பற்றி இப்போது தமிழ் தலைவர்கள் என கூறிக்கொள்பவர்கள் கூட பேசுவதில்லை

1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரும், இராணுவத்தினருடன் இணைந்து செயல்பட்ட புளொட் போன்ற ஒட்டுக்குழுக்களும், ஜிகாத் பயங்கரவாத அமைப்பும் முஸ்லீம் காடையர்களும் நடத்திய கோரப்படுகொலைகளை நினைவு கூருமுகமாக செப்டம்பர் 5ஆம் நாளை தமிழின உயர்கொலைநாள் என பிரகடனப்படுத்தி வருடாந்தம் அதனை நினைவு கூர்ந்து வந்தனர். ஆனால் அது கூட தடைசெய்யப்பட்டு விட்டது.

கிழக்கு மாகாணத்தில் நடந்த படுகொலைகளின் உச்சக்கட்ட படுகொலையாக கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாம் படுகொலை கருதப்படுகிறது. கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் இருந்த 158 இளைஞர்கள் இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தினமான செப்டம்பர் 5ஆம் திகதியை தமிழின உயிர்கொலை நாளாக பிரகடனப்படுத்திய மட்டக்களப்பின் பொது அமைப்புக்களான கிழக்கு பல்கலைக்கழக சமூகம், மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், தமிழர் மறுமலர்ச்சி கழகம் வருடாந்தம் இத்தினத்தை அனுட்டித்து வந்தன. ஆனால் தங்கள் உறவுகளுக்காக வழிபாடு நடத்தும் உரிமையை கூட கிழக்கில் உள்ள மக்கள் இழந்து விட்டார்கள்.

கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாம் படுகொலையின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் கடந்த வியாழக்கிழமையாகும். ஆனால் அதனை அனுட்டித்தால் தாமும் காணாமல் போய்விடுவோமோ என்ற அச்சமே அந்த மக்களிடம் எழுந்திருக்கிறது.
1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமிலிருந்து 158இளைஞர்களும், செப்டம்பர் 23ஆம் திகதி 16 இளைஞர்களும் சிறிலங்கா இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டனர். இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்ட இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பபடுகின்ற போதிலும் இவர்களின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

கப்டன் முனாஸ் என்ற இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரி தலைமையில் புளொட் மோகன், முஸ்லீம் ஜிகாத் குழுவைச்சேர்ந்த மஜீத் உட்பட இராணுவ குழு ஒன்றே இவர்களை 11 பேருந்தில் கொண்டு சென்ற போதிலும் இவர்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரை உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.
1990ல் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் போர் நிறுத்தம் முறிவடைந்து யுத்தம் ஆரம்பமானதை தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்து வாளைச்சேனை வரையான மக்கள் பாதுகாப்பு தேடி கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

இந்த அகதிமுகாமில் இக்கடத்தல் சம்பவம் நடைபெற்ற வேளையில் அம்முகாமுக்கு பொறுப்பாக இருந்த கலாநிதி ஜெயசிங்கம் அம்முகாமில் 55ஆயிரம் பொதுமக்கள் தங்கியிருந்ததாக தெரிவித்திருந்தார்.

1995ல் பதவிக்கு வந்த ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா வழக்கம் போல இலங்கையில் காணாமல் போனோரை விசாரிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். வடக்கு கிழக்கில் காணாமல் போனோரை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கி.பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். இந்த ஆணைக்குழு கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் வைத்து கடத்தி செல்லப்பட்டவர்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தியது.

அந்த ஆணைக்குழு விசாரணையின் அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவ தினம் கொம்மாதுறை இராணுவ முகாமைச்சேர்ந்த இராணுவத்தினருடன் மட்டக்களப்பு நகரில் இருந்த இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளான கப்டன் முனாஸ், கப்டன் பாலித, கப்டன் குணரத்னா, முஸ்லீம் ஜிகாத் குழுவைச்சேர்ந்த மஜீத், புளொட் மோகன் ஆகியோரும் வந்திருந்தனர். இவர்களுடன் முகத்தை மூடிக்கட்டிய தலையாட்டிகள் என கூறப்படும் 5பேரும் நிறுத்தப்பட்டிருந்தனர். இவர்களுடன் ஏறாவூரைச்சேர்ந்த 7 முஸ்லீம்களும் வந்திருந்தனர். வயது அடிப்படையில் மூன்று வரிசையாக நிறுத்தப்பட்டவர்களில் இளைஞர்கள் 158பேர் தெரிவு செய்யப்பட்டு பஸ்ஸில் ஏற்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழு பாதுகாப்பு அமைச்சு உட்பட பல மட்டங்களில் முறையிட்ட போது அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த எயர்மார்சல் பெர்னாண்டோ அனுப்பிவைத்த பதிலில் செப்டம்பர் 5ஆம் திகதி 32பேரை மட்டும் விசாரணைக்காக கைது செய்யததாகவும் அவர்கள் அனைவரும் 24மணிநேரத்திற்குள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என தெரிவித்திருந்தார்.

இந்த ஆணைக்குழு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே 5ஆம் திகதி 158பேரையும், 23ஆம் திகதி 16பேரையும் கைது செய்து கொண்டு சென்றனர் என தெரிவித்திருந்தது. இந்த கடத்தலில் ஈடுபட்ட இராணுவத்தினரும் புளொட் மற்றும் முஸ்லீம் ஜிகாத் குழுவும் பதில் கூற வேண்டும் என்றும் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலை அறியப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிழக்கு பல்கலைக்கழக சம்பவம் நடந்து சரியாக நான்கு தினங்களின் பின்னர் 1990 செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப்பில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றது.

சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்திருந்தார்.

இச்சம்பவத்தில் 8வயதுக்கு உட்பட்;ட 68 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் 80க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.
இந்த படுகொலையில் இராணுவத்துடன் முஸ்லீம் ஊர்காவல்படையும் இனப்படுகொலை புரிந்தனர் என்பது பின்னர் தெரியவந்தது.

காயங்களுடன் தப்பி சென்ற சிவகுமார் என்ற இளைஞரை இராணுவம் தேடிய போது மட்டக்களப்பு பிரஜைகள் குழுவும் ஆயர் இல்லமும் அவரை மறைத்து வைத்து வைத்தியம் செய்து காப்பாற்றியிருந்தனர். இதன் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் இந்த படுகொலைகள் பற்றி சாட்சியமளித்திருந்தார்.

இது போன்று கிழக்கில் பல படுகொலைகள் நடந்தன.

சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் பற்றி தமிழர் தரப்புக் கூட இப்போது பேசுவதை மறந்து விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

(இக்கட்டுரை கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ்தந்தி பத்திரிகையில் 08.09.2013 ஞாயிறு அன்று பிரசுரமானதாகும்.)

Comments Closed

%d bloggers like this: