“தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தாதீர்” முன்னாள் போராளிகள்

Home » homepage » “தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தாதீர்” முன்னாள் போராளிகள்

tna-ex-ltte-meetதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறிதரன் அண்மையில் நடைபெற்ற கூட்டமைப்பின் வவுனியாக் கூட்டத்தில் விடுதலைப் புலிகள் குறித்தும் போராளிகள் குறித்தும் வெளியிட்டவை எனக் கூறப்படும் கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்தை முன்னோக்கி நகர்த்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட குப்பி கடித்துத் தற்கொடையாவது என்ற விவகாரத்தை கையில் எடுத்து, அதனை முள்ளிவாய்க்கால் பேரவலத்தோடு பிணைத்து, அதைத் தமது அரசியல் பிழைப்புக்குப் பயன்படுத்தும் வகையில் அவர் கருத்து வெளியிட்டமையும் அதன் மூலம் ஜனநாயகப் போராளிகளைக் கொச்சைப்படுத்த முயன்றமையும் கண்டிக்கத்தக்கவை.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தோடு ஆயுதங்கள் மௌனிக்கின்றன எனத் தீர்மானிக்கப்பட்ட நிலையில் சரணடைந்த பன்னிரெண்டாயிரத்துக்கும் அதிகமான போராளிகளும் வானத்தில் இருந்து திடீரென்று குதித்தவர்கள் அல்லர். அவர்களுக்கும் அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகள் என ஏராளமான உறவுகள் உள்ளனர். அந்த உறவுகளிடம் சென்று உங்கள் மகன், மகள், சகோதரன், சகோதரி, தந்தை, தாய், கணவன், மனைவி போராளியாக இருந்து, இப்போதும் உயிருடன் இருந்தால் அவர்களை குப்பி கடித்து சாகச் சொல்லுங்கள் என்று கூறும் தைரியம் முன்னாள் எம்.பி. சிறிதரன் அவர்களுக்கு உள்ளதா?

புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளை போலிப் புலிகள் என்றும் கூறினாராம் அவர். இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போரின் மேம்பாட்டிற்காக உதவிகளை வாரி வழங்கி, நல்கி இன்றும் கடனாளிகளாக போரிலும் குளிரிலும் உழைத்து, உழைத்துப் பட்ட கடன் கட்டுகின்றார்கள். அந்த உன்னத உறவுகளைக் கொச்சையாக விமர்சிக்க முற்படுவது கண்டிக்கத்தக்கது. அதற்கான அருகதை அவருக்குக் கிடையாது.

எமது மக்களின் விடிவுக்காக விழித்திருந்தவர்கள் நாங்கள். இன்றும் எமது மக்களின் கௌரவமான – நிரந்தரமான – சமாதான – அமைதியான – வாழ்வு நிலைநிறுத்தப்பட நேர்மையுடனும், அரப்பணிப்புடனும் பற்றுறுதியோடும் உழைக்க நாம் முன்வந்துள்ளோம். அஹிம்சையின் சிகரம் தியாகி திலீபன் ஆகுதியாகிய இடத்திலிருந்து நாம் மீண்டெழுந்திருக்கிறோம்.

ஆயுதங்களைத் தவிர்த்து, அஹிம்சை முனைப்புடன், ஜனநாயகப் பாதையின் வழியில் நம்பிக்கையுடன் நேர்மையான – உண்மையான – வெளிப்படையான – அரசியல் தடத்தில் பயணிக்க வெளிவந்திருக்கிறோம். எனவே சிறிதரன் போன்றோர் எமது மக்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் பொதிந்த கடந்த கால அரசியல் போராட்டங்களை உரிமை கோரியோ அல்லது கொச்சைப்படுத்தியோ அரசியல் லாபம் சம்பாதிக்க முயலக்கூடாது என வேண்டுகின்றோம்.

முன்னாள் போராளிகள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்புகின்றமையை ஏற்காதவர்கள், அவர்களை அரசியலில் தீண்டத்தகாதவர்கள் என்ற சாரப்பட நெற்றிப் பொட்டில் அடிக்குமாறு நேரில் கூறி, புறம் ஒதுக்கியவர்கள், அந்தப் போராளிகளும் இணைந்து முன்னெடுத்த போராட்டங்களையும் அவற்றின் ஈகங்களையும் சாதனைகளையும் இனிமேலும் தங்களின் அரசியல் சுயலாபப் பிரசாரங்களுக்கு முன்னெடுக்கக் கூடாது எனக் கோருகின்றோம்.

இனிமேலும் அவர்களின் அத்தகைய அரசியல் ‘பாச்சா’ நமது மக்களிடம் எடுபடாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம். ஜனநாயக வழிக்குத் திரும்பும் முன்னாள் போராளிகளை ஒதுக்கும் நீங்கள் அந்தப் போராளிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னர், இந்த ஆறு வருட காலத்தில் நீங்கள் தனித்து நின்று சாதித்த அம்சங்களை மட்டும் மக்கள் முன் வைத்து அதன் அடிப்படையில் மட்டும் பிரசாரம் செய்வதே சிறிதரன் போன்றோருக்கு நியாயமானதும், சரியானதுமாகும்.

ஊடகப்பிரிவு
ஜனநாயகப் போராளிகள் கட்சி.
10-07-2015

Comments Closed

%d bloggers like this: