போராளிகளுக்காக எழுதுகிறேன்…!- இ.உயிர்த்தமிழ்

Home » homepage » போராளிகளுக்காக எழுதுகிறேன்…!- இ.உயிர்த்தமிழ்

images3OYEMFF0“முள்ளிவாய்க்காலில் எம்மால் தவிர்க்க முடியாமல் போன அவமானகரமான தோல்வி, அதற்கடுத்து வந்த நாட்களில் எம்மீது தொடர்ச்சியான அவமானங்களை குவித்துகொண்டே இருக்கின்றது….” என குறிப்பிடுகின்றது முன்னாள் போராளிகளுக்கான ஓர் கடிதம்.

அன்பான உடன்பிறப்புக்களே,

2009 மே 18ம் நாளுக்கு முன்னர் நாம் உலகமே வியந்த ஒரு தலைவனின் தனிப்பெரும் வீரர்களாகவும், மாபெரும் தேசிய விடுதலை இயக்கம் ஒன்றின் போராளிகளாகவும் இருந்தோம்.

முள்ளிவாய்க்காலில் எம்மால் தவிர்க்க முடியாமல் போன அவமானகரமான தோல்வி, அதற்கடுத்து வந்த நாட்களில் எம்மீது தொடர்ச்சியான அவமானங்களை குவித்துகொண்டே இருக்கின்றது.

‘முன்னாள் போராளி என்று வெளிப்படையாக குறிப்பிடப்பட்ட நாம், உட்கிடையாக சயனைட் அருந்தாதவர்கள், மண்டை கழுவப்பட்டவர்கள், அரசாங்கத்தின் ஆட்கள், புலனாய்வு ஏஜெண்டுகள் இன்னொரன்ன ‘மகிமைக்குரிய நாமங்களினால் அழைக்கப்பட்டு வருகின்றோம்.

முன்னாள் விடுதலைப்புலிகள் ஒன்றிணையாமல் இருப்பதற்கான மூலோபாயமாக ‘சந்தேக நோயை பொது எதிரியின் முகவர்கள் பரப்பி வந்தார்கள்.

இந்த சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஒரு சில உள்ளூர், வெளியூர் சந்தர்ப்பவாதிகளும் அவர்களின் ஊதுகுழல்களும் முன்னாள் போராளிகளை வசைபாடும் பணியை தமது வாழ்நாள் கடைமையாக செய்து வருகின்றனர்.

சனநாயகப் போரளிகள் எனும் பெயரில் நம்மில் ஒரு சிலர் ஒன்று கூடி ஓர் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்த விடயத்தற்கு அனைத்து ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்தன என்பது உண்மைதான்.

ஆனால் நம்மவர் ஆனையிறவை வீழ்த்திய போது இருந்த வியப்பும் மதிப்பும் கலந்த தன்மை இம்முறை இருக்கவில்லை. சிறியளவான ஆதரவும், அதிகளவிலான வெறுப்பும் அனைத்திற்கும் அதிகமான சந்தேகமுமே மிஞ்சியிருந்தன.

முன்னாள் போராளிகள் அரசியல் பலிக்கடாக்களா?

முன்னாள் போரளிகளின் பின்னாள் உள்ள அரசியல் என்று சில தேசிய ஊடகங்கள் மென்மையான முறையில் கருத்தைச்சொல்ல பி.பி.சி தமிழோசை நிகழ்வில் பேசிய பத்துப்பேரில் ஒருவர் மட்டுமே மேற்படி அரசியல் இயக்கத்தை ஆதரித்துப் பேசியது கவனத்திற் கொள்ள வேண்டியதே.

மிக அண்மையில் புலம்பெயர் ஊடகம் ஒன்று ‘மகிந்த களமிறக்கி விட்டுள்ள முன்னாள் போரளிகள் என்று பச்சையாகவே தனது கருத்தை எழுதியிருந்தது.

சிறு குறிப்பு அல்லது இடைச்செருகல்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஏக போக பிரதிநிதிகளாக தம்மைக் காட்டிக்கொள்ளும் ஒரு சில செயற்பாட்டாளர்களும் கருத்துக்கூறுபவர்களும் இறுதிவரை களமாடிய போராளிகளை வசைபாடுவதிலே தமது பொழுதை போக்குகின்றனர்.

இவர்களின் வயதும் எம்மையொத்த வயதுதான். தமிழ்த் தேசிய விடுதலைக்காக நாம் நமது வீடு, பாடசாலை, உறவு என அனைத்தையும் துறந்து விடுதலைப்போருக்கு பங்களிக்க சென்றிருந்தோம்.

நம்மவர்கள் துருப்புகாவிகளில் தமிழீழ எல்லைகளை நோக்கி சென்று கொண்டிருந்த காலத்தில் இவர்கள் கொள்கலன்களில் ஒழித்து ஐரோப்பிய எல்லைகளை கடந்து கொண்டிருந்தனர்.

எனவே தமிழ் தேசம் எரிந்து கொண்டிருந்த போதே மனச்சாட்சியுடன் செயற்படாதவர்களிடமிருந்து இப்போது அதனை எதிர்பார்ப்பது மடமையல்லவா?

இப்படியானவர்களின் வஞ்சகத்தனமான கருத்துகளுக்கு செவிமடுக்க தேவையில்லை. ஆனால் எம்மை போன்றவர்களில் அன்பும், கரிசனையும் உடைய நம்மக்களின் கருத்துகளுக்கு செவிமடுக்க வேண்டியது நமது கடமையாகும்.

ஜனநாயக போராளிகள் பற்றிய கருத்தறிதல்

இன்றைய நாட்களுக்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி ஞாயிறு வார இதழில் திரு.வித்தியாதரன் அவர்களால் வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்று எனது கவனத்தையீர்த்தது,

அது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள், அதன் ஆதரவாளர்கள் நேரடியாக இலங்கை அரசியலில் பங்கெடுப்பது பற்றிய பொதுவான கருத்துக்கோரும் நோக்கமுடைய விளம்பரமாகவே இருந்தது.

அவ்விளம்பரத்தில் கூறப்பட்டுள்ள பிரதான பாத்திரமாக முன்னாள் போராளிகள் குறிப்பிடப்பட்டிருந்ததால் எனது தனிப்பட்ட ஆர்வம் காரணமாக இவ்விடயம் தொடர்பாக எனது தொடர்பு எல்லைக்குள் இருக்கக்கூடிய

1) முன்னாள் போராளிகள்
2) மாவீரர் குடும்பத்தினர்
3) முள்ளிவாய்க்கால் வரை நம்மை நம்பி வந்த நம் மக்கள்
4) இயக்கம் நெருக்கடிகளை சந்தித்த காலங்களில் கஞ்சிப்பானை சுமந்து காடுவரை வந்த உறவுகள்.
5) தமிழ்தேசிய விடுதலையை நேசித்ததால் வசதியான வாழ்விற்கான சந்தர்ப்பங்கள் அனைத்தையும் இழந்து புலம்பெயர் நாட்டிலும் வாழ்வியல் நெருக்கடிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் தேசாபிமானிகள்.

ஆகியோருடன் தொடர்புகொண்டு ‘எங்கட பொடியளின்ற அரசியல் பிரவேசம் குறித்து கலந்துரையாடினேன்.

அவர்கள் இதய சுத்தியுடன் கூறிய கருத்துகளால் நான் வியப்படைந்தேன். இந்த இடத்தில்தான் பிரான்ஸை தளமாக கொண்டு இயங்கும் மனிதாபிமான செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான திரு.ச.வே.கிருபாகரன் அவர்கள் அண்மையில் எழுதி தமிழ்வின் இல் வெளிவந்த கட்டுரையொன்று எனது கவனத்தையீர்த்தது.

ஜனநாயகப் போராளிகளுக்கான திறந்த மடல் என்ற தலைப்பிடப்பட்ட அந்த கட்டுரையை அனைவரும் வாசிக்க வேண்டும் என்பது எனது தயவான வேண்டுதல். – அக்கட்டுரையைப் படிக்க இங்கே அழுத்தவும்

ஏனெனில் முன்னாள் போராளிகள் தொடர்பில் அதிகளவு அன்பும் கரிசனையுமுடைய புலம்பெயர் தேசாபிமானிகளில் இவரும் ஒருவர். இக்கட்டுரை மூலம் திரு.ச.வே.கிருபாகரன் அவர்கள் நம்மவருக்கு சொல்ல வரும் சேதி என்ன?

ஜனநாயக போராளிகள் என்ற அரசியல் இயக்கம் தொடர்பில் நமது அபிமானிகளின் கருத்து என்ன? என்பது பற்றிய விரிவான தரவுகள் அடுத்த பகுதியாக தொடரவுள்ளது.

அதற்கிடையில் உங்கள் கருத்துகள் எதையாவது தெரிவிக்கவிரும்பின் அருள்கூர்ந்து எனக்கு அறியத்தருமாறு வேண்டுகின்றேன்.

தோழமையுடன்
இ.உயிர்த்தமிழ்
uyirththamilzh@gmail.com

Comments Closed

%d bloggers like this: