நாங்கள் இருக்கின்றோம்!! இனியும் இருப்போம். – ஜனநாயகப் போராளிகள் கட்சி

Home » homepage » நாங்கள் இருக்கின்றோம்!! இனியும் இருப்போம். – ஜனநாயகப் போராளிகள் கட்சி

தளத்திலும் புலத்திலும் வாழுகின்ற எம் தேச உறவுகளே!!

cdfகடந்த ஆறு வருடகால இலங்கையின் அரசியல் களத்தில் இருந்து துடைத்தெறியப்பட்டிருந்த நாங்கள் என்றென்றும் உங்கள் மனத்திலே வாழ்ந்து கொண்டிருந்தோம். இருந்தும் எம் தாயகத்தில் காணப்படுகின்ற சுயநல தான்தோன்றித் தனமான எதேட்சை அதிகார போக்குள்ள அரசியல்வாதிகளிடம் இருந்து எமது மக்களையும் எமது உரிமைகளையும் பாதுகாத்து விடிவை நோக்கி நகர்த்துகின்ற அரசியல் களத்தில் பயணிக்கின்ற தேவை இச் சூழலில் காணப்பட்டதால் இத் தேர்தலில் எமது ஆறு வருட வனவாசத்தை முடித்து தற்துணிவுடன் இலங்கை ஜனநாயக அரசியலில் பிரவேசத்தை நிகழ்த்தியிருந்தோம். நாம் இத்தேர்தல் களத்தில் புதியதோர் அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்தியிருந்தோம்.

1. எம் உறவுகளுக்கும் உலகத்திற்கும் நாம் தொலைந்து போகவில்லை. மீண்டும் ஜனநாயக அரசியல் களத்திற்கு வந்திருக்கின்றோம் என்ற செய்தி சிறப்பாகச் சொல்லப்பட்டாயிற்றுது.
2. கீழ்த்தரமான சுயலாப, சுயநல வாக்கு வேட்டைகளில் நாம் ஈடுபடவில்லை.
3. தேர்தல் சட்ட விதிகள் எதனையும் நாம் மீறவில்லை.தேர்தல் வன்முறைகளில் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஈடுபடவில்லை. எம் மீதும் விதிமுறை மீறல்கள் நிகழ்த்தப்படவில்லை.
4. நாம் என்றுமே சுய ஒழுக்கம், தற்துணிவு, அச்சமற்றவர்கள் என்பதனை மீ்ண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளோம். பணபல பிரயோகம், தாக்குதல் முயற்சியினுாடாக அனுதாபத்தைத் தேடுதல், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை வழங்குதல் போன்ற மக்களை ஏமாற்றும் எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை.

எம் பாசத்திற்குரிய உறவுகளே!

இத் தேர்தலில் வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால் இனி வருகின்ற எல்லாக் காலங்களிலும் உங்கள் அச்சமற்ற சமாதான சம உரிமை வாழ்வியலுக்காய் என்றென்றும் தள அரசியலில் எமது இருப்புத் தொடர்ந்தே இருக்கும். நாங்கள் தொடர்ந்து உங்களுடன் இருப்பதன் பிரதி பலன்களை இனி வரும் காலங்களில் அனுபவத்தின் ஊடாக நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். தான் தோன்றித் தனமாகச் செயற்படும் அரசியல்வாதிகள் போதைப் பொருள் செயற்பாட்டு வர்த்தகர்கள், கலாச்சாரச் சீரழிப்பாளர்கள் தொடர்பில் உரிய முறையில் விரைந்த நீதி நிலைநாட்டப்பட நாம் உறுதுணையாக இருப்போம்.

பெண்களின் உரிமைகளையும் அவர்களின் பாதுகாப்பினையும் நாம் என்றென்றும் மதித்து அவை மேன்பட அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்.
எம் புலம்பெயர் உறவுகளே!

இன்று போராளியாகிய நாங்கள் உடலிலும் மனங்களிலும் ரணமடைந்தே வாழ்ந்து வருகின்றோம். எங்களில் சிலர் மனச் சோர்வடைந்து தம்மைச் சாகடித்துக் கொள்வதும் வறுமை காரணமாக பிறரிடம் கையேந்துவதுமான அவல நிலை மாற்றமடைய தெளிவான செயற்திட்டத்திற்குத் தயாராகியுள்ளோம். நம் எல்லோருக்குமாய் உயிரையும் மற்றும் தம் உடல் மீது குண்டுச் சிதறல்களையும் ஏற்றுக் கொண்ட உறவுகள் உங்களுக்கானவர்கள் அல்லவா.

அவர்களின் வாழ்வியலுக்காய் கௌரவமான எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர் கொள்ள, தொழில் முயற்சிகளுக்கும் கொடிய யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உளவியல் பாதிப்புக்கும் ஆலோசனை பெற்றுக் கொள்வதற்கு நாம் பக்க பலமாகச் செயற்பட உறவுகளே நீங்கள் பலத்தினைத் தாருங்கள். காயமுற்ற போராளிகளின் நீண்டதொரு வாழ்வுக்காய் எம் தலைவரின் மனதின் கனவுகளை நியமாக்க சிறப்பான செயற்திட்டத்தை ஆரம்பிக்க உங்கள் உதவிகளை நாடி நிற்கின்றோம்.

எமதருமை மக்களே!
என்றும் எம் அரசியல் இருப்பு எக் காலத்திலும் உங்களிடம் தொடர்ந்த வண்ணமே இருக்கும். இத் தேர்தல் களம் எமக்கான அறிமுகமாகும். இனி வரப்போகின்ற வட, கிழக்கில் உள்ள உள்ளுாராட்சிகள், மாநாகராட்சிகள் என்பன எமக்கான அங்கீகாரமாகும்.

அதனுாடாகப் பெறப்படுகின்ற எம் மக்களின் ஆதரவு அலை வட, கிழக்கு மாகாணசபை ஆட்சியினை நிச்சயம் நாம் கைப்பற்ற உறுதுணையாக இருக்கும். ஜனநாயகப் போராளிகளாகிய நாம் எங்கள் அனுபவத்தினதும், செயற்திறன் மீதும் நம்பிக்கை வைத்து வருகின்ற தேர்தல்கள் அனைத்திலும் நிச்சயம் வெற்றி கொள்வோம். இந்த நிமிடம் முதல் அதற்கான செயற்திட்டத்தை உங்களின் பங்களிப்புடன் ஆரம்பிக்கின்றோம்.

2015ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான எமது கட்சியின் மொத்தச் செலவீனம் 7 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இப்பணத்தினை எமக்குத் தந்துதவிய எமது உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

நன்றி

ஜனநாயகப் போராளிகள் கட்ச

Comments Closed

%d bloggers like this: