பிரித்தானியாவில் இடம்பெற்ற “தேசத்தின் குரல்” மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு!

Home » homepage » பிரித்தானியாவில் இடம்பெற்ற “தேசத்தின் குரல்” மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு!
பிரித்தானியாவில் இடம்பெற்ற “தேசத்தின் குரல்” மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு!

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உட்பட இம்மாத(மார்கழி) மாவீரர்களுக்கும், மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் உட்பட இலங்கை படைகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது.
தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் அமைந்துள்ள (oxford) உலகத் தமிழர் வரலாற்று மைய மாவீரர் மண்டபத்தில் இந்த நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.
வேணுகோபால் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் பொதுச் சுடரினை கிலிங்டன் தமிழ் பாடசாலை நிர்வாகி (தமிழ் கல்விக்கூடம்) சசிகலா நிரூபன் ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமானது.

இதன் பின்பு, பிரித்தானிய தேசியக் கொடியை தொழில்கட்சி உறுப்பினரும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளருமான ஜீவா ஏற்றி வைக்க, தமிழீழத் தேசியக் கொடியை தமிழீழ மாவீரர் பணிமனையைச் சேர்ந்த சதா ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து மாவீரர்களுக்கான பொது நினைவுத்தூபிக்கான ஈகச்சுடரினை கிளி ஏற்றிவைக்க, மலர்மாலையினை மாவீரர் மலரவனின் தாயார் இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அணிவித்தார்.

“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க, மலர்மாலையினை உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் முக்கிய உறுப்பினரும், நீண்டகால தேசிய செயற்பாட்டாளருமான மயில்வாகனம் அணிவித்தார்.

மக்களுக்கான பொது நினைவுத்தூபிக்கான ஈகச்சுடரினை பவா ஏற்றிவைக்க, மலர்மாலையினை மாமனிதர் யோசப் பரராஜசிங்கத்தின் மகன் டேவிட் பரராஜசிங்கம் அணிவித்ததைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அரங்க நிகழ்வுகளாக, மாவீரர் வணக்க நடனத்தை 1992-12-08 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரன் மேஜர் இசைக்கோனின் மருமகளும், மாவீரர்களான லெப்.கேணல் பாமா, லெப்.கேணல் மாதவி, லெப்ரினன் வெங்கடேஸ் ஆகியோரின் பேத்தியுமான செல்வி. கலைநிலா இராகுலன் வழங்க, கவிதைகளை பிரவீனா விஜயகுமார், ஜெசிந்தா சுரேஸ், ஜெகதீஸ்வரன் நவரட்ணம் ஆகியோர் வழங்கினர்.

தலைமை உரையினை வேணுகோபால் ஆசிரியர் வழங்க, சாந்தி சத்தியேந்திரன், இன்பன் மாஸ்ரர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான இளையோர் விவகார அமைச்சர் அகிலன் ஆகியோர் நினைவுரைகளை வழங்கினர்.

எழுச்சி கானங்களை மைக்கல், சுரேஸ் ஆகியோர் வழங்க இன்றைய நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது. குறிப்பாக பலர் தமது குடும்பங்களோடு வந்து கலந்து கொண்டிருந்தமையும், அதிகமான சிறுவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை மகிழ்வையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியோடு தமிழீழ விடுதலையை நோக்கிய எதிர்காலத்தை குறித்துக் காட்டுவதாகவும் அமைந்திருந்தது.

மேலும் மண்டபம் நிறைந்த மக்களோடு நடைபெற்ற இந்த நிகழ்வில் உறுதி ஏற்போடு கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் மாலை நிறைவு பெற்றது.

Comments Closed

%d bloggers like this: