இந்தியா

பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா.

அதிமுகவின் பொதுச்செயலாளராக இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் சசிகலா முறைப்படி பொறுப்பேற்றார்.

போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து இன்று மதியம் ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் அதிமுக பொதுச்செயலாளருக்கான இருக்கையில் அமர்ந்து கோப்புகளை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, சசிகலா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போன்ற சிகை அலங்காரத்துடன் காணப்பட்டுள்ளார்.

இவரை பின்பக்கமாக இருந்து பார்த்த தொண்டர்களுக்கு ஜெயலலிதாவா, சசிகலாவா என சந்தேகத்தை வரவழைப்பதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை சசிகலா போயஸ் தோட்ட இல்லத்தை விட்டு வெளியில் வந்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, ஜெயலலிதா சமாதியில் சசிகலா மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, பொதுக் குழு தீர்மானத்தை வைத்து விழுந்து வணங்கி, ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தைச் சுற்றி வந்து, எம்ஜிஆரின் நினைவிடத்தில் வந்து மரியாதை செலுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் வியாழக்கிழமை நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், தேர்தல் மூலம் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படும் வரை, சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.