தமிழ் புலம்பெயர்

விடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தவர்களின் தண்டனையை உறுதி செய்தது டச்சு உச்சநீதிமன்றம்

விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, தமிழர் ஒருங்கிணைப்பு குழு நபர்கள் நால்வருக்கான தண்டனையை நெதர்லாந்து உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

குற்றவியல் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்ற வகையில், ஐந்து பேருக்கு நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றத்தினால் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு ஆறு மாதங்கள் தொடக்கம் 19 ஆண்டுகள் 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
2003தொடக்கம் 2010 வரையான காலப்பகுதியில்  விடுதலைப் புலிகளுக்காக நெதர்லாந்தில் நிதி சேகரித்தார்கள் என்று இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
சட்டவிரோத சீட்டிழுப்புகளை நடத்தினார்கள் இவற்றின் மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தை சிறிலங்காவுக்கு அனுப்பினார்கள் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

தண்டனை விதிக்கப்பட்ட ஐவரில் நால்வர் தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக நெதர்லாந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த மேல்முறையீட்டை நிராகரித்துள்ள நெதர்லாந்து உச்ச நீதிமன்றம் நால்வருக்குமான தண்டனையை உறுதி செய்துள்ளது என்று டச்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.