இலங்கை புலம்பெயர்

வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை நாட்டுக்கு கொண்டுவர புதிய திட்டம்

வெளிநாடுகளில் இருக்கின்ற விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதே பரிவர்த்தனை கட்டுப்பாட்டு திருத்தச் சட்டமூலத்தின் மறைமுகமான திட்டம் என கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
சட்டவிரோதமான முறையிலும் தற்போது வெளிநாடுகளில் தேங்கிக் கிடக்கும் அவர்கள் சம்பாதித்த பணத்தை நாட்டுக்கு கொண்டுவருவதே இந்த மறைமுகத் திட்டமாகும்.
இதனையடுத்து, புலம்பெயர் தமிழர்களின் இந்த முதலீடுகளுக்கு நாட்டின் பிரதான பொருளாதாரத் துறைகளில் சொந்தமாக கொண்டிருப்பதற்கு பின்னர் இடமளிக்கப்படும்.
குறித்த சட்ட மூலத்தில் வெளிநாடுகளில் உள்ள புலிகள் தொடர்பாக குறிப்பிடப்படவில்லை. எனினும், சட்டரீதியாக சம்பாதித்த பணத்தை அல்லது வேறு வழிகளில் சம்பாதித்த பணத்தை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு இடமளிக்கப்படும்.
அத்தகைய முதலீடுகளை விரும்பாதவர்களே இந்த சட்டமூலத்தை எதிர்ப்பார்கள் என முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் கருத்தானது பொருத்தமானதாக அமைந்திருக்கின்றது. இலங்கைக்கான சிறந்த முதலீட்டாளர்கள் சீனா அல்ல எனவும் வெளிநாடுகளிலுள்ள புலிகள் எனவும் எரிக் சொல்ஹிம் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கான காரணம், அவர்கள் பெருந்தொகையான பணத்தை வைத்திருப்பதாகும். அவர்கள் வர்த்தக ரீதியான அறிவைக் கொண்டவர்கள். அத்துடன் முகாமைத்துவ ஆற்றலையும் கொண்டிருக்கின்றார்கள்.
வெளிநாடுகளில் வசித்தாலும் அவர்கள் இலங்கையர்களாக உள்ளனர் என்ற அபிப்பிராயம் இலங்கையில் அவர்களின் பணம் அதிகளவுக்கு முதலீடு செய்வதை அதிகரிக்க வேண்டுமென்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கின்றது.
நாட்டில் துரிதமான அபிவிருத்தியை வென்றெடுப்பதற்கு இது சாத்தியமானதாகும் என்ற அபிப்பிராயத்தையும் சொல்ஹிம் கொண்டிருந்தார்.
அவரின் அபிப்பிராயமானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரின் திட்டங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் பொருந்துகின்றது.
ஆகையினால், இந்த சட்ட மூலத்தின் மூலம் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பை அளிப்பதற்கே எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், மத்திய வங்கியின் வெளிநாட்டு செலாவணி திணைக்களத்தின் பரிவர்த்தனை கட்டுப்பாட்டாளரின் அனுமதியின்றி சுதந்திரமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.