இந்தியா தமிழ்

விலைக்கு வாங்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்: வெளியான வீடியோ ஆதாரங்கள்

தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விலைக்கு விற்கப்பட்டதாக Times Now பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து சட்டமன்றத்திலும் அதிமுக கட்சியிலும் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன.
முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி வகித்தபோது அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா திடீரென அவரது பதவியை பறித்ததாக புகார் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து பன்னீர் செல்வத்திடம் இருந்த முதல்வர் பதவி எடப்பாடி பழனிச்சாமியிடம் சென்றது.

இந்நிகழ்வை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்து இரு அணிகளாக செயல்பட துவங்கின. அதேபோல், ஆட்சியை பிடிப்பதற்கும், ஆட்சியை தக்க வைப்பதற்கும் இரு அணிகளும் போராடி வந்துள்ளன.
இச்சூழலில் சட்டமன்றத்தில் ஆளும் கட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க பொறுப்பு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா தனது கட்சியை சார்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் கூவாத்தூர் விடுதியில் தங்க வைத்தார்.
மேலும், கூவத்தூர் விடுதியில் சட்டமன்ற உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ள பேரம் பேசப்பட்டதாகவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை ஆளுநர், சபாநாயகர் உள்பட அனைவரும் நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில், பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சியான Times Now தற்போது பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ள பேரம் பேசப்பட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியது உண்மை தான் என தனது புலன் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருங்கிய சட்டமன்ற உறுப்பினர்களான சரவணன் மற்றும் ஜி.கனகராஜ் ஆகிய இருவரும் இந்த மாபெரும் ஊழலை செய்தது உண்மை என வாக்குமூலம் அளித்துள்ளதாக Times Now செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.