இலங்கை தமிழ்

யாழில் இன்று நடந்த சோகம்: கைக்குழந்தையுடன் வீதியில் பெண்

வடக்கு மாகாணத்தில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பரவலாக ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில் கடைகள் பல மூடப்பட்டதுடன், கூலி வேலைகள் செய்வோரும் மற்றும் நோயாளர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
இந்த ஹர்த்தால் ஏற்பாடுகளானது முன்னறிவிப்பின்றி செய்யப்பட்டதால் தாம் இன்றைய தினம் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருந்ததாக ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலரும் விசனம் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் கை முடியாத மாற்றுத்திறனாளி கணவனுடன் கைக்குழந்தையுடன் பெண்னொருவர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களை ஏளனமாக நோக்கியுள்ளனர்.
இந்த காட்சியானது மிகவும் வேதனையாக காணப்பட்டதாக பலரும் தமது பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அவசரமாக எவ்வித முன்னறிவிப்புமின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த ஹர்த்தாலின் காரணமாக அந்த பெண் உட்பட அவளது குடும்பமும் இப்படியானதொரு நிலையினை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், விடுதலைப் புலிகளின் காலத்தில் பொங்கு தமிழ் என கூறப்பட்டாலும் சரி ஹர்த்தால் என்றாலும் அதற்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்படுவதுடன், பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்ளாத வகையில் ஹர்த்தால் மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.