சிங்களச் சட்டத்தை தமிழருக்கெதிராக சிங்களவர் கையிலெடுத்தால்,தமிழீழச் சட்டத்தை மீண்டும் தமிழர்கள் தம் கையில் எடுக்க நேரிடும்! -எல்லாளன்-

Home » homepage » சிங்களச் சட்டத்தை தமிழருக்கெதிராக சிங்களவர் கையிலெடுத்தால்,தமிழீழச் சட்டத்தை மீண்டும் தமிழர்கள் தம் கையில் எடுக்க நேரிடும்! -எல்லாளன்-
சிங்களச் சட்டத்தை தமிழருக்கெதிராக சிங்களவர் கையிலெடுத்தால்,தமிழீழச் சட்டத்தை மீண்டும் தமிழர்கள் தம் கையில் எடுக்க நேரிடும்! -எல்லாளன்-

முன்னாள் போராளி திரு.கண்ணதாசன் அவர்களுக்கான இலங்கை நீதிமன்றின் அபத்தமான தீர்ப்பானது நம் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் சிங்களச் சட்டத்தால் விடப்பட்ட ஓர் இனரீதியான அடக்கியாளும் எச்சரிக்கையே!

அடிப்படையில் இலங்கை சிங்கள ஆட்சியாளர்களின் தம்மினம் சார்ந்த தமது பாரபட்சமான தமிழர் விரோத அரசியல் செயற்பாடுகள் காரணமாகவே தமிழர்கள் தம்மை தாமே ஆளவேண்டும் என்ற வைராக்கியத்தை தமக்குள் வளர்த்து கடந்த முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை சிங்கள அரசுக்கெதிராக தாம் நிகழ்த்தியிருந்தார்கள்.

உண்மையில் தமிழர்களுக்கான இந்த உளவியல் வைராக்கியத்தை சிங்கள ஆட்சியாளர்களே அடிப்படையில் அதை தமிழர்களுக்குள் புகுத்தி தமிழர்கள் சிங்களவர்களுக்கெதிராக தாம் போராடும் மனோநிலையை முதலில் உருவாக்கியவர்ளே இந்த சிங்கள ஆட்சியாளர்கள்தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

மேலும் இலங்கை சிங்கள அரசானது தனது இனம்சார்ந்த பிரிவினைவாத செயற்பாடுகளை சாதாரண சிங்கள மக்கள் மத்தியிலும் தாம் ஊக்குவித்து அதனூடாக தமிழர்களுடன் தனது இனத்தை மோதவைத்து சிங்களவருக்கும் தமிழருக்குமான நிரந்தர பகைமையை உருவாக்கியதன் உச்சகட்டமே, இனி ஒருபோதும் தம்மால் இலங்கையில் சிங்களவர்களுடன் சேர்ந்துவாழ முடியாதென்கிற இறுதி முடிவை தமிழிர்களை எடுக்கவைத்தது.

இதன் விபரீத விளைவே சிங்கள அரசுக்கெதிரான எமது இயக்கத்தின் உருவாக்கமும் அதன் ஆயுதப் போராட்டமும் ஆகும்.

உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதப் போராட்டம் என்பது சிங்கள அரசுக்கெதிராக மட்டுமே மேற்கொள்ளப்பட்டதேயன்றி,சாதாரண சிங்கள மக்களுக்கெதிராக அல்ல என்பதனை சிங்கள மக்கள் மட்டுமல்ல,விடுதலைப் புலிகளை ஓரங்கட்டி சிங்களவர்களோடு சேர்ந்துவாழ முற்படும் தமிழர்களும் இதை தாம் புரிந்துகொள்ளவேண்டும்.

சுருங்கக் கூறின் இலங்கை எனும் ஒற்றைத் தேசத்துக்குள் ஒற்றுமையாய் வாழ்ந்த இரண்டு இனங்களுக்குள் பிரிவினை வாதத்தை புகுத்தி தமிழர்களை சீண்டிவிட்டு தமிழன்,சிங்களவன் என்ற கருத்தை முதன்முதலாக உச்சரித்தவர்கள்கூட இந்த சிங்கள ஆட்சியாளர்களே.

அடிப்படையில் தமிழரை சிறுபான்மை என்றும்,காலப்போக்கில் சிங்களம் மட்டும் சட்டமென்றும் தம்மை சிங்களவர்கள் மேன்மைப்படுத்தி தமது மேலாண்மைப் போக்கினை தமிழர்களிடத்தில் தாம் காண்பித்து தமிழர்களை தமக்கெதிராக தாமே திருப்பியது மட்டுமல்லாமல், அவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களுக்கும்,சொத்துகளுக்கும் தாமே முதலில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி தமிழர்களை தமிழர்கள்தான் காக்கவேண்டும் என்ற மனோநிலையை அடிப்படையில் உருவாக்கியவர்களும் இந்த சிங்கள ஆட்சியாளர்களே.

ஆகமொத்தத்தில் தமிழனை இனி ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாதென்கிற ஒவ்வொரு தமிழனினதும் இறுதிமுடிவின் பிரகாரமே தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் சிங்கள அரசியல்பீடங்களுக்கு எதிராக மெல்ல மெல்ல வளர்ச்சியடைய ஆரம்பித்தது.

இந்த ஆயுதப்போராட்டத்தின் அவசிய தேவையை தமிழர்களுக்கு 100%வீதமும் உணர்த்தியவர்கள் சிங்கள பிரிவினைவாத இனத்துவேசம்மிக்க அரசியல்வாதிகளும், அதன் பௌத்த தீவிரவாதம்மிக்க பிக்குகளும்,இலங்கை சிங்ளவர்களுக்கு ஆதரவான நீதித்துறையுமென்றால், அது ஒருபோதும் மிகையாகாது.

அப்படியானால் தமிழர்களின் கைகளில் முதலில் ஆயுதத்தை ஏந்தவைத்தவர்கள் யார்? என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் யார் முதன்மையான குற்றவாளிகள் என்பதை நாம் இலகுவாக தெரிந்துகொள்ள முடியும்.

மேற்குறிப்பிட்ட தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் தமிழரை ஆயுதம் தூக்குவதற்கு உந்துசக்தியாக இருந்தவர்களே முதன்மையான குற்றவாளிகள்.

ஆகையினால் தமிழர்களை தமது பிரிவினைவாத கருத்துக்கள் ஊடாக அவர்களை ஆயுதம் தரிக்கவைத்து அவர்களை தாமே அழித்து அடக்கியாள முற்பட்ட குற்றத்திற்காக இலங்கை அரசியல்வாதிகளையும்,பௌத்த துறவிகளையும் இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்து அவர்களுக்கும் இலங்கை நீதித்துறை ஊடாக ஆயுள்தண்டனைகளை வழங்கவேண்டும் என்று தமிழர்கள் சார்பான அரசியல் சக்திகள் இலங்கை அரசை உலகம்தழுவி தாம் வற்புறுத்த முன்வரவேண்டும்.

மேலும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தொடர்பாக சகலவிதமான அரசியல் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசுடன் நடத்தி அவர்களுக்கான அடிப்படை பாதுகாப்பை பெற்றுக்கொடுக்கவேண்டிய ஒரேயொரு தரப்பென்றால் அது “இந்த மானங்கெட்ட தமிழ்த் தேசிய பைத்தியக்கார கூட்டமைப்பு மட்டும்தான்” ஆனால் அந்த பைத்தியக்காறர்கள் இப்போது எமது போராளிகளை முழுமையாக ஒதுக்கிவிட்டு தாமே எமது முன்னாள் போராளிகளை இலங்கை சட்டத்தின்முன் நிறுத்தி அவர்களுக்கு தாமே தண்டனைகளை பெற்றுக்கொடுக்கவே இன்றுவரை தாம் முண்டியடித்து வருகிறார்கள்.

உண்மையில் எமது முன்னாள் போராளிகளை இலங்கை அரசாங்கம் பொது மன்னிப்பு எனும் ஒரேயொது வார்த்தையை பயன்படுத்தியே எமது அனைத்து போராளிகளையும் பல வருடங்களாக தாம் தடுத்துவைத்து அவர்களுக்கு புனர்வாழ்வெனும் சிறைத் தண்டனைகளை மறைமுகமாகக் கொடுத்து அவர்களை தாம் வெளியில் விட விருப்பமின்றி பின்னடித்துவந்தபோதும், சர்வதேச நாடுகளின் போர்விதிகளுக்கு அமைவாக எமது போராளிகளை விடவேண்டும் என்ற உலகநாடுகளின் மறைமுக அழுத்தங்களின் பிரகாரமே அவர்களை தாம் வேறுவழியின்றி விடுவித்தார்கள் என்பதே உண்மை.

போர்விதி என்பது எமது போராளிகள் தாம் இலங்கை அரசுக்கெதிராக கடந்தகாலங்களில் மேற்கொண்டுவந்த எவ்வகையான சம்பவங்களாக இருந்தாலும் அவை அனைத்தும் அந்த போர்விதி எனும் பொதுமன்னிப்புக்குள் அவர்கள் அனைவரும் உள்ளடக்கப்பட்டு விடுவிக்கப்படவேண்டும் என்பதே உலக போர்விதியெனும் பொதுமன்னிப்பின் கருப்பொருளாகும்.

ஆனால் இலங்கையை பொறுத்தமட்டில் போர்விதி என்பது அது உலகத்தின் இறுக்கமாக பார்வை இலங்கைமீது இருக்கும்வரையே அமுலில் இருக்கும் என்பதுடன்,உலகம் சற்று கண்ணயர்ந்தால் இலங்கை அரசு அதுவரை தான் பேணிவந்த அனைத்து போர்விதிகளையும் மீறி எமது போராளிகளை மீண்டும் கைதுசெய்து அவர்களை தனது சிறைகளில் தள்ள முற்படும் என்பதே முற்றிலுமான உண்மை.

இந்த துற்பாக்கிய நிலையின் ஓர் முதல் வடிவம்தான் எமது முன்னாள் போராளி திரு.கண்ணதாசனுடைய ஆயுள் தண்டனை எனும் மறு கைதாகும்.

இங்கே திரு.கண்ணதாசன் அவர்களை பழைய குற்றத்திற்காக இலங்கை அரசு அவரை தான் மீண்டும் கைதுசெய்ய முடியுமென்றால், புனர்வாழ்வெனும் போர்வையில் சிறையில் அடைக்கப்பட்டு இலங்கை அரசினால் பொதுமன்னிப்பென்று சொல்லப்பட்டு விடுவிக்கப்பட்ட எமது அனைத்து போராளிகளையும் எந்நேரமும் பழைய குற்றங்களை அவர்கள்மீது சுமத்தி இலங்கை அரசானது அவர்களை தாம் கைதுசெய்ய முடியும் என்பதையே எமக்கு சொல்லிநிற்கின்றது.

மேலும் திரு.கண்தாசனை பிடித்து அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைக்கான குற்றமாக அவர் புலிகளின் உறுப்பினராக தான் இருந்தபோது செய்த ஒரு சிறிய குற்றத்திற்கே ஆயுள் தண்டனையென்றால், ஏனைய போராளிகளின் நிலையை எப்படியென்று ஊகித்துப்பார்த்தாலே புரியும் அவர்களுக்கு என்னென்ன தீர்ப்புக்களை இலங்கை அரசு கொடுக்கும் என்பதை.

உண்மையில் இலங்கைமீதான உலகின் பார்வை இருக்கும்பொழுதே எமது போராளிகளை இந்த சிங்கள ஆட்சியாளர்கள் மறுபடியும் அவர்களை கைதுசெய்து கிறைகளில் தாம் அடைக்கும்போது, சமநேரத்தில் இதை தட்டிக்கேட்க வக்கற்ற இந்த தமிழ்த் தேசியம் பேசும் துரோக அரசியல்வாதிகளை எமது மக்களும் போராளிகளும் இனியும் தாம் நம்பாது, நீங்களே உங்களை பாதுகாக்கவேண்டிய அரசியல் சக்தியை தாயகத்தில் உருவாக்கி உலகம் பூராகவும் குரல்கொடுத்தால் மட்டுமே இலங்கை அரசின் அத்துமீறும் போக்கினை நாம் கட்டுப்படுத்த முடியும்.

அத்துடன் எமது முன்னாள் போராளிகளுக்கான இந்த நெருக்கடியான தருணத்திலும் அதற்காக குரல்கொடாதிருக்கும் புலம்பெயர் சக்திகளையும் நாம் சந்தேகக்கண்கொண்டு பார்கவேண்டிய கட்டத்தில் இருந்துவருகின்றோம்.

இதற்குக் காரணம் புலத்திலுள்ள பழைய செயற்பாட்டாளர்களுக்குள் த.தே.கூட்டமைப்பின் அரசியல் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளமையே.

எனவே தமிழ்த் தேசியத்தை சொல்லி எமது போராளிகளையும்,போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களையும் கைவிட்டுவிட்டு இலங்கை அரசுடன் கூடிவாழ்ந்துகொண்டிருக்கும் தீயசக்திகளை நாம் தாயகத்திலும்,புலமம்பெயர் தேசத்திலும் இல்லாதொழித்து, எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் அரசியல் சக்திகளாக உருவெடுக்க எமது போராளிகளை உள்ளடக்கிய அரசியல் கட்சியான “ஜனநாயகப் போராளிகளை” பலப்படுத்தி நாம் அரசியலில் பலம்பெற்றால் மட்டுமே இலங்கை அரசின் கபடத்தனமான அரசியல் சட்டமீறல்களை நாம் தட்டிக்கேட்க முடியும் என்பதனை முதன்மையாக விடுதலையாகிய எமது போராளிகளும்,அவர்களின் குடும்பங்களும் மற்றும் மக்களும் இதை உணர்ந்துகொண்டு செயற்படுவது காலத்தின் தேவையாகும்.
நன்றி

Comments Closed

%d bloggers like this: