இலங்கை தமிழ்

-புலிச்சாயம்-

வடகிழக்கைப் பொறுத்தவரை போராட்ட காலத்தில் போராட்டத்திற்கு ஆதரவாக ஒட்டுமொத்த மக்களும் இருந்துவந்தனர். இதில் குறிப்பிட்ட ஒரு தொகையினரே ஆயுதமேந்திப் போராடினர். அவர்களுள் பெருமளவானவர்கள் உயிர்த்தியாகம் செய்து காவியமாகிவிட்டனர்.
எஞ்சியவர்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போக, புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்கள் ஒரு தொகையினர், அவர்களில் வசதிவாய்ப்புக் கிட்டியவர்கள் நாட்டைவிட்டுச் சென்ற நிலையில் எஞ்சியுள்ள ஒரு தொகுதியினர் அரசின் வாக்குறுதி தவறிய நிலையில் சுயமாக தம்மை வருத்தி உழைத்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வும் கண்காணிப்புக்குள் அடங்கியதாகவே உள்ளது.
யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு போகாமல் பெற்றோரால் பாதுகாக்கப்பட்டு வந்த ஒரு தலைமுறையில் சில நெறிமுறை பிறழ்ந்த பிறவிகள் சினிமாவின் தாக்கத்தாலும்,அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவழிப்புப் பொறிக்குள் சிக்குண்டு போதைக்கு அடிமையாகி சமூக சீர்கேடுகளை சாதனைகளாகச் செய்து வருகின்றனர்.
இவ்வாறானவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சட்டத்தின் பிடிக்குள் சிக்கும்போது, தமக்கு புலிச்சாயம் பூசிக்கொள்தல், அல்லது சட்டத்தினால் பூசப்பட்ட சாயம் வெளுக்காது பேணுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம், சமூகமயப்பட்டு அமைதியான முறையில் வாழ்க்கையை நடத்திச் செல்லும் முன்னைநாள் போர்வீரர்களை சீண்டி விரக்தியுறச் செய்கின்றனர்.
இன்றைய காலத்தில் சமூகத்தில் புலிச்சாயம் பூசுதல் சிலருக்கு சமூகத்தில் தாம் தேடும் ஓர் உயரிய நிலையாக இருக்கின்றது. மேலும் அரசால் பூசப்படும் சாயம் அதன் ஆட்சி நிலைப்பிற்கு துணையாகின்றது. இவ்வாறான நிலையில் குற்றவாளிகளுக்குப் புலிச்சாயம் புசுவதன்மூலம் ஏற்கணவே வதைபட்டு வாழ்பவர்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்க தென்னிலங்கை முயல்கிறது. இதனைப் புரிந்துகொள்ளாத வடக்கின் சில தமிழ்ப் பிரதிநிதிகளும் அரசு கொழுத்திய நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுபவர்களாக இருப்பது வேதனையான விடயம்.
விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அங்கத்துவத்தினை எவர் வேண்டுமானாலும் கற்பனையில் குறிப்பிட முடியும். இங்குதான் அரசின் புலிச்சாயம் பூசுதல் வலுப்பெறுகிறது. அதுபோலவே இன்றைய காலத்தில் பாரிய குற்றங்களுடன் தொடர்புபடுபவர்கள், தம்மைப் புலிகளாகக் காண்பித்து, அரசு தமக்கு மறுவாழ்வழித்து தம்மை சமூக மயமாக்கும் எனும் நம்பிக்கையில் புலிச்சாயம் பூசுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது முன்னைநாள் போராளிகளும் அவர்கள் மீதான சமுகப் பார்வையுமே.
(இயல்)