இலங்கை தமிழ்

வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கில் பாதுகாப்பு நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முப்படைகளையும் விசேட அதிரடிப் படையினரையும் களமிறக்குவோம் என்று எச்சரித்த பொலிஸ் மா அதிபரைக் காப்பாற்றப் போய் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பொறியில் மாட்டிக்கொண்டிருக்கிறார்.
பொலிஸ்மா அதிபர் முப்படையினரையும் களமிறக்குவோம் என்று கூறவில்லை. விசேட அதிரப் படையினரையும் இராணுவத்தையும் மக்கள் விரும்பினால் களமிறக்குவோம் என்று தான் கூறினார் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளக்கம் கொடுத்திருந்தார்.

இத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் தப்பியிருப்பார்.

அதற்குமப்பால் போன அவர் வடக்கில் போர்ப் பயிற்சி பெற்றவர்கள் குற்றம் இழைப்பதற்கு வாய்ப்புள்ளது என்று முன்னாள் போராளிகளைக் குறிப்பிடும் வகையிலும் இராணுவத்தினரைக் களமிறக்குவதற்குச் சாதகமான வகையிலும் கருத்துக்களை வெளியிட்டு வம்பை விலைக்கு வாங்கியிருக்கிறார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தேர்தல் மேடையிலும் சரி அதற்குப் பிந்திய அரசியல் அரங்கிலும் சரி விடுதலைப் புலிப் போராளிகளைப் புகழ்ந்திருந்தாலும் இப்போது அவர் வெளியிட்டிருக்கும் கருத்து அதற்கு நேர்மாறானது.

இராணுவத்திலிருந்து தப்பியோடி தெற்கில் குற்றமிழைப்பவர்களுடன் வடக்கில் போர்ப் பயிற்சி பெற்ற போராளிகளை அவர் ஒப்பிடத் துணிந்துள்ளார்.

ஏற்கனவே தொட்டதற்கெல்லாம் முன்னாள் போராளிகள் என்று சரியான ஆதாரங்களை முன்வைக்காமல் அரசாங்கமும் பொலிஸாரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்ற ஒரு சூழலில் தான் முதலமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகியிருக்கிறது.

அண்மைய வடக்கு அரசியல் குழப்பங்களின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்த பலரையும் இந்தக் கருத்து அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

முதலமைச்சரின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல ஊடகங்கள் அவரது இந்தக் கருத்தை சுய தணிக்கை செய்து கொண்டதையும் காண முடிந்தது.

வடக்கில் நடக்கும் குற்றங்களுக்கு எல்லாம் முன்னாள் போராளிகள் மீது பழியைப் போடுவது அபத்தம். அது போலவே போர்ப் பயிற்சி பெற்றவர் குற்றச் செயல்களில் ஈடுபடும் வாய்ப்புள்ளது என்பதும் முற்றிலும் அபத்தமான கருத்தே.

தெற்கில் தப்பி ஓடிய படையினர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் தான். இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டு நடக்க முடியாதவர்கள் தான் பெரும்பாலும் படையை விட்டு தப்பியோடுகின்றனர்.

அவர்கள் தலைமறைவாக வாழ்கின்றனர். அதனால் அவர்களால் சட்டரீதியாக தொழில் செய்ய முடியாத நிலையில் குற்றச் செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். இத்தகைய ஒரு பிரிவினருடன் வடக்கில் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களை முதலமைச்சர் ஒப்பீடு செய்ய முனைந்தமை பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

வடக்கில் முன்னாள் போராளிகள் சிலரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கைதாகியிருக்கின்றனர் என்பது உண்மை தான். ஆனால் அத்தகைய நிலைக்கு அவர்களைத் தூண்டிவிட்டது யார்? என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.

வடக்கின் அண்மைய குற்றங்கள் அதிகரிப்புக்கு வடக்கு மாகாண சபையும் பொறுப்புக்கூற வேண்டும். என்றும் முன்னாள் போராளிகளுக்கும் இளைஞர்களுக்கும் தகுந்த வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்காதது மாகாண சபையின் குற்றமே என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சில நாட்களுக்கு முன்னர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் போராளிகள் தவறிழைத்திருந்தால் அதற்கு காரணம் யார்? பொறுப்பு யார்? என்பதைக் கண்டறியாமலேயே ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் குற்றமிழைக்க வாய்ப்புள்ளது என்று அபாண்டமான பழியைப் போடுவது ஒரு முன்னாள் நீதியரசரான முதலமைச்சருக்கு அழகல்ல.
போர்ப் பயிற்சிகளின் போது முதலில் ஒழுக்கம் தான் கற்பிக்கப்படும். அதுவும் உலகிலேயே மிகச் சிறந்த ஒழுக்கமான அமைப்பு என்ற பெயர் எடுத்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். விடுதலைப் புலிகளின் ஒழுக்கத்தை அவர்களை மோசமான பயங்கரவாதிகள் என்று கூறும் எந்தவொரு இராணுவ அதிகாரியும் கூட கேள்விக்குட்படுத்தியதில்லை.

எனவே வடக்கில் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களுக்கும் குற்றங்களுக்கும் தொடர்பை உருவாக்க முனையக்கூடாது. 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு முடித்து வெளியே வந்திருக்கிறார்கள். ஆனால் ஒருசிலர் தான் சிக்கல்களில் மாட்டியிருக்கிறார்கள்.
அதனை மாத்திரம் வைத்துக்கொண்டு ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் குற்றம் இழைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று பொதுவான மதிப்பீட்டை முதலமைச்சர் பொது அரங்கில் முன்வைத்திருக்கக் கூடாது.

முதலமைச்சர் ஏற்கனவே ஆயுதப் பயிற்சி பெற்றவர்களை மட்டமாகவே பேசி வந்தவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் அவர் தமிழரசுக் கட்சியின் முதலமைச்சராகவே நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு ஈபிஆர்எல்எவ் இனால் முன்வைக்கப்பட்டது.

அப்போது முன்னாள் ஆயுதக் குழுக்களுடன் சேர்ந்து செயற்பட முடியாது என்று பகிரங்கமாகவே கூறியவர் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

ஆனால் அண்மையில் வடக்கு அரசியலில் குழப்பங்கள் ஏற்பட்ட போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழரசுக் கட்சியினால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அதே ஆயுதக் குழுக்கள் தான் அவரைக் காப்பாற்றின.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்னொரு விடயத்தையும் கூறியிருக்கிறார். வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கோரி வந்தாலும் தேவைப்பட்டால் வன்முறைகளை கட்டுப்படுத்த இராணுவத்தை அழைப்பதற்கும் எதிர்ப்புக்காட்டப் போவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சராக அதனைச் செய்ய வேண்டியிருக்கும் என்று அவர் கூறியிருப்பதுதான் வேடிக்கை. சட்டம் ஒழுங்கு அமைச்சராக முதலமைச்சர் இதுவரையில் வடக்கின் நிலைமைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை.

அவசரத்திற்கும் இராணுவத்தை அழைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் குற்றச் செயல்களுக்கு ஒத்துழைப்பவர்களாகவே இருப்பார்கள். என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
இதன்மூலம் இராணுவத்தைக் களமிறக்குவதை எதிர்ப்பவர்கள் அனைவரையும் அவர் குற்றச் செயல்களுக்கு ஒத்துழைப்பவர்களாக அடையாளப்படுத்த முனைகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மிகவலுவான ஒரு பொலிஸ் படை இலங்கையில் இருக்கும் போதும் புலனாய்வு வலையமைப்பும் அதன் துணை இராணுவப் பிரிவான விசேட அதிரடிப் படையும் இருக்கும் போதும் வாள்வெட்டு போன்ற சிறியளவிலான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியாதா?

தேவையான அளவு பொலிஸாரைக் களமிறக்கி வாள்வெட்டுக் குழுக்களின் அடாவடித்தனங்களை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்காமல் இராணுவத்தை இறக்குவது பற்றிப் பேசுவதும் நியாயப் படுத்துவதும் தற்போதைய சூழலில் அவசியம் தானா?

பொலிஸாரைக் களமிறக்கி சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைளை யாருமே குறைகூற முடியாது. ஆனால் அவசர நிலைமை என்றோ வன்முறைகள் கட்டுமீறி விட்டன என்றோ இராணுவத்தைக் களமிறக்குவதற்கு துணை போவது பாரதூரமானது.
அதற்கு தமிழ் தலைமைகள் கூட தலையாட்டுவதற்கு தயாராக இருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஏனென்றால் இப்போது வடக்கில் நடக்கின்ற வன்முறைகள் இராணுவத்தைப் பெருமளவில் நிறுத்தி வைப்பதை நியாயப் படுத்துவதற்கான முயற்சிகளாக இருக்குமோ என்று கூட தமிழ் மக்களுக்கு சந்தேகங்கள் இருக்கின்றன.

நிலைமை கட்டுமீறிச் சென்றுவிட்டது. இராணுவத்தைக் களமிறக்கி கட்டுப்படுத்துங்கள் என்று கேட்கின்ற நிலை ஒருமுறை ஏற்படுத்தப்பட்டால் அதுவே நிரந்தரமாகி விடும் ஆபத்தும் உள்ளது.
இராணுவத்தினரைக் கொண்டு இத்தகைய குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முனைந்தால் அது 1980களின் தொடக்கத்திற்குத்தான் கொண்டுபோய் விடும்.

கண்மூடித்தனமான கைதுகள், காணாமல் போதல்கள், கொலைகள் என்று எல்லாமே மலிந்து போகும் நிலை உருவாகலாம். அத்தகைய அடக்குமுறைகளே தமிழ் இளைஞர்களை மீண்டும் ஆயுதம் ஏந்துகின்ற நிலைக்கும் கொண்டு செல்லக்கூடும்.

இப்படிப் பல தொடர் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இராணுவத்தின் களமிறக்கத்தை மிகச் சாதாரணமானதொரு விடயமாக எடுத்துக் கொண்டிருப்பது ஆச்சரியம். குற்றங்களைக் கட்டுப்படுத்துவது தான் முக்கியமாக இருக்கிறதே தவிர அதனை யார் செய்வது என்பது அவருக்கு முக்கியமான காரியமாகத் தெரியவில்லை.

இராணுவத்தை இத்தகைய செயல்களில் ஈடுபடுத்த முனையும் போது ஏற்படக்கூடிய விளைவுகளை அவர் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் குற்றம் இழைப்பதற்கு வாயப்புகள் உள்ளன என்று கூறும் முதலமைச்சருக்கு இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட குற்றங்கள் எப்படி மறந்து போனது என்று தெரியவில்லை.