இலங்கை தமிழ்

வள்ளிபுனம் செஞ்சோலை வளாகம் எதற்காக இலங்கை படைகளால் இலக்குவைக்கப்பட்டது..? -எல்லாளன்

சிறப்பு கண்ணோட்டம்!

14-08-2006 அன்று முல்லை மாவட்டம் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறார்களுக்கான பிரத்தியேக வதிவிடம்மீது இலங்கை விமானப்படைகள் நடாத்திய அகோர குண்டுவீச்சுத் தாக்குதலில் சுமார் 54லு மாணவிகள் அந்த இடத்திலேயே உடல்சிதறி பலியாகினார்கள்.

இவர்கள் அனைவரும் 16-17 வயது நிரம்பிய பாடசாலை மாணவிகள் என்பது யாவரும் அறிந்தவிடையமே.

உண்மையில் எதற்காக இலங்கை விமானப்படைகள் இந்த பாடசாலை சிறுமிகள்மீது தாக்குதல் நடத்தின என்ற விடையத்திற்கு வருவோம்.

அதாவது இந்த தாக்குதல் நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர்தான் வடபோரரங்கான முகமாலை நாகர்கோவில் களமுனையிலிருந்து யாழ்நகரை கைப்பற்றுவதற்கான பாரிய திட்டத்தோடு புலிகள் 11-08-2006 மாலை மூன்று மணியளவில் முகமாலை முன்னரங்கை உடைத்து பாரிய தாக்குதலை தொடுத்திருந்தனர்.

புலிகளின் இந்த பாரிய அதிரடித் தாக்குதலை படையினர் எப்படியாவது தடுக்கவேண்டும் என்ற தீவிர முயற்சியில் இறங்கியதன் வெளிப்பாடே வள்ளிபுனம் செஞ்சோலை வளாகம்மீதான கோரத்தாக்குதலின் பிரதான நோக்கமாகும்.

உண்மையில் விடுதலைப் புலிகள் தாம் வடபோரரங்கை திறந்ததன் முழுமையான நோக்கமானது யாழ்நகரை குறிப்பிட்ட சில தினங்களிலேயே தாம் கைப்பற்றவேண்டும் என்ற பிரதான நோக்கத்தையே அடிப்படையாக கொண்டிருந்தது.

மேலும் விடுதலைப் புலிகளின் இந்த பாரிய படைநடவடிக்கைக்காக விடுதலைப் புலிகளின் தரை,கடல் மற்றும் வான் படையணிகளை உள்ளடக்கிய சுமார் ஐயாயிரம் வரையான போராளிகள் வடபோரரங்கின் களமுனைநோக்கி நிலைநிறுத்தப்பட்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் திட்டத்தின் அகோரநிலையை உணர்ந்த சிங்கள அரசபடைகளின் உயர்மட்டம் உடனடியாகவே கொழும்பிலுள்ள அதன் தலைமையகத்தில்கூடி தனது முப்படைகளையும் கடுமையான போருக்கு தயாராகுமாறு சிவப்புவிளக்கு எச்சரிக்கையை கொடுத்திருந்தது.

இது இவ்வாறிருக்க புலிகளின் சகல யுத்தப் படையணிகளும் யாழ்நகரை கபை்பற்றுவதற்கான இறுதி திட்டங்களுடன் முகமாலை முன்னரங்கை உடைத்து கடுமையான சமரை தொடுத்து தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தனர்.

புலிகளின் இந்த தாக்குதலானது யாழ்நகரை முற்றுமுழுதாக கைப்பற்றுவதை இலக்காகக்கொண்டிருந்ததனால் சிங்களப் படைகளும் மிகவும் கடுமையான எதிர்த்தாக்குதல்களை புலிகள்மீதும் இடைவிடாது தொடுத்தவண்ணமிருந்தனர்.

புலிகளின் கனரக பீரங்கிகளின் பிரதான சூட்டாதரவை நம்பியே இந்த தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக விடுதலைப் புலிகளின் ஆட்லறி மற்றும் மோட்டார் படையணிகளின் அகோர தாக்குதல்கள் முகமாலை இராணுவ முன்னரங்குகளை துவைத்துக்கொண்டிருந்தன.

இருந்தபோதிலும் முகமாலை முன்னரங்கானது சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி உலகப்படைகளின் திட்டமிடல்களுக்கு அமைவாக பல அடுக்கு முன்னரங்குகளாக படையினரால் வடிவமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டிருந்ததனால் புலிகளின் எறிகணைகளால் அவற்று முற்றுமுழுதாக தாக்கியழிக்க முடியாமல் இருந்தது.

இதன்காரணமாக காலால் படைகளாக உள்நுழைந்த பெரும் எண்ணிக்கையான எமது போராளிகள் அதிகமான இழப்புக்களை களமுனையில் சந்திக்கத்தொடங்கினார்கள். மேலும் யாழ் குடாநாட்டின் நில அமைப்பும்,அங்கு வாழ்ந்துவந்த இலட்சக்கணக்கான மக்களின் செறிவுமே விடுதலைப் புலிகளின் போர்நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருந்துவந்தது.

வழமையாக புலிகள் செய்துவந்த போர்நடவடிக்கைகள் யாவும் முற்றுமுழுதான இராணுவ வலையங்களுக்குள் நிகழ்திருந்ததனால் புலிகளின் முழுமையான போர் வியூகங்களும் படைகளுக்கெதிராக பயன்படுத்தப்பட்டு அவைகள் அனைத்தும் வெற்றிகொள்ளப்பட்டதென்பதே வரலாறு.

ஆனால் யாழ்குடாநாட்டின் களம் எனப்பது முற்றுமுழுதாக புலிகளுக்கு எதிராகவே காணப்பட்டிருந்தது. ஏனென்றால் புலிகளின் இடைமறிப்பு தாக்குதல்கள் எவையும் படையினருக்கெதிராக நடத்தமுடியாமல் இருந்ததற்கான அடிப்படை காரணம்கூட பொதுமக்களின் அதிக பிரசன்னமே.

இதன்காரணமாக முகமாலை களமுனையை எப்படியாவது உடைத்தெறிற்தால் மட்டுமே யாழ்குடாநாட்டு இராணுவப்படைகளை வெளியேற்றலாம் என்பதை புலிகளும் அறந்திருந்தனர். இதனால் மிகவும் கடுமையாக முகமாலை நாகர்கோவில் படைத்தளங்களை அழிப்பதற்காக புலிகள் முயற்சித்துக்கொண்டிருந்தனர்.

சிங்களப் படைகள்மீதான புலிகளின் பீரங்கித் தாக்குதல்கள் இடைவிடாது மழையாக பொழியப்பட்டுக்கொண்டிருந்தன. சமநேரத்தில் சிங்களப்படைகளும் புலிகளின் வன்னித் தளங்கள்மீது அகோர விமானத்தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டவண்ணமிருந்தனர்.

இதேவேளை முகமாலை களமுனையிலிருந்து நூற்றுக்கணக்கான போராளிகள் காயமடைந்தநிலையில் விடுதலைப் புலிகளின் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சையளிக்கப்பட்டு வந்தார்கள். எதிரியின் பிரதான இலக்குகளாக புலிகளின் பிரத்தியேக மருத்துவமனைகளே முதன்மையாக கணப்பட்டது’ இவற்றை எப்படியாவது வேவு விமானங்கள்மூலம் கண்டறிந்து அழிக்கவேண்டும் என்பதையே எதிரியும் குறிவைத்து வன்னியெங்கும் தேடிக்கொண்டிருந்தான்.

உண்மையில் வள்ளிபுனம் செஞ்சோலை சிறார்களுக்கான இல்லங்கள் என்பது ஒரேயிடத்தில் அதிகமாக காணப்பட்டதனால் அவற்றை உளவறிந்து வேவுபார்த்த இலங்கை விமானப்படை அங்கு புலிகள் தமக்கான தற்காலிக கள மருத்துவமனைகளை அமைத்து முகமாலையில் காயமடையும் போராளிகளுக்கு சிகிற்சை செய்யலாம் என்று ஊகித்துக்கொண்டது.

இது இவ்வாறிருக்க ஏற்கனவே வன்னியெங்கும் சாதாரண மக்களுக்கான விடுதலைப் புலிகளின் தற்காப்பு பயிற்சிகள் அனைத்தும் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டு ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டிருந்தன. இந்த தற்காப்பு பயிற்சியின் நோக்கமானது, எதிர்காலத்தில் வன்னியில் இலங்கைப் படைகளால் நடாத்தப்படவிருந்த உள்ளக தாக்குதல்களை சமாளிப்பதற்காகவும், குறிப்பாக மக்கள்மீது நடத்தப்படக்கூடிய சகலவிதமான தாக்குதல்களுக்கும் ஓரளவேனும் எமது மக்கள் தாம் கிலிகொள்ளாது முகம்கொடுக்க தயாராக இருக்கவேண்டும் என்பதற்காகவுமே இந்த பயிற்சிகள் யாவும் புலிகளால் வழங்கப்பட்டுவந்தன.

இவற்றில் பள்ளி மாணவர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தார்கள். குறிப்பாக 16-17 வயதுநிரம்பிய ஆண் பெண் மாணவர்களுக்கான தற்காப்பு மருத்துவம் அறிமுகப்படுத்தப்பட்டு வன்னியெங்கும் பரவலாக கொடுக்கப்பட்டுவந்தன.

ஒரு தேசம் தன் தேசத்தை எதிரிகளின் அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக இப்படியான தற்காப்பு பயிற்சிகளை அறிமுகப்படுத்தி தனது தேசமக்களை பாதுகாப்பதற்காக கொடுப்பதொன்றும் போர்க்குற்றமாக எவரும் தவறாக கருதிவிடமுடியாது.

மேலும் ஜனநாயகம்,போர்தர்மம்,போர் மரபு இவைகளெல்லாம் அதை உறுதியாக கடபை்பிடித்துவந்த நாடுகளுக்கே இவை பொருந்துமேயன்றி இலங்கைப் படைகளுக்கு இவை ஒருபோதும் பொருந்தவே பொருந்தாது.

ஏனென்றால் காலா காலமாக எமது அப்பாவி மக்கள்மீது மிலேச்சத்தனமாக குண்டுகளைப்போட்டு அதை தனது போர்வெற்றியாகக்கருதி திளைத்துவந்த சிங்களப் படைகளுக்கு, மனிதாபிமானம் என்பது எமது ஆயிரக்கணக்கான பிணங்களின் துர்நாற்றத்தை ஒரேநொடியில் முகர்ந்து பார்த்தால்கூட அது துளியளவும் வராதென்பதை நாம் இறுதிப்போர்வரை முள்ளிவாய்காலில் நின்று பார்த்ததன் அனுபவத்தில் இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றோம்.

இதன் அடிப்படையில்தான் இலங்கைப் படைகளின் வள்ளிபுனம் மாணவிகள்மீதான விமானத்தாக்குதலும் இடம்பெற்றிருந்தது. குறித்த இடத்தில், குறித்த நேரத்தில் அங்கு குழுமியிருந்த மாணவிகள்மீது தெரிந்தும் குண்டினைப்போட்ட இலங்கைப் படைகளை தெரியாமல் செய்துவிட்டார்கள் என்று கூறமுடியுமா?

இஸ்ரேலிய தயாரிப்பான ஆளில்லா வேவு விமானத்தின்மூலம் சுமார் 5000ம் அடி உயரத்திலிருந்து பார்க்கும்போதும் நிலத்தில் நடப்பவரின் முகத்தைகூட பார்கமுடியும் என்று கூறப்படுகின்றது’ இவற்றைவிட சமாதான காலத்தில் வள்ளிபுனத்தில் செஞ்சோலை சிறார்கள் இல்லம் இருப்பதை இலங்கை இராணுவம் தனது புலனாய்வு முகவர்கள் ஊடாக தாம் அறிந்திருந்ததும் யாவரும் அறிந்தவிடையமே.

அப்படியானால் எதற்காக செஞ்சோலை வளாகத்தை சிங்களப் படைகள் தனது இலக்காக கருதி அதை குண்டுகள்போட்டு அழித்தொழித்தார்கள்? இந்த கேள்விக்கான ஒரேயொரு உண்மையான பதில், அதாவது முகமாலை களமுனையை புலிகள் இடைநிறுத்தினால் மட்டுமே யாழ்குடாநாட்டை தம்மால் தக்கவைக்கமுடியும் என்று படைத்தலைமை திடமாக நம்பியது.

அத்துடன் யாழ்குடாநாட்டை புலிகள் கைப்பற்ற எடுத்த முடிவானது ஒருவேளை கைகூடினால் சர்வதேச அளவில் தமது படைகள் அவமானத்தை சந்திப்பதுமட்டுமல்லாமல், தமிழீழம் எனும் தனிநாட்டை புலிகள் தாமாகவே பிரகடனம் செய்வார்கள் என்பதையும் புரிந்துகொண்டே செஞ்சோலை வளாகத்தை இலங்கைப் படைகள் குண்டுகள்போட்டு அழித்தொழித்தார்கள்.

உண்மையில் செஞ்சோலை வளாகத்தை அழித்தால் புலிகளின் யாழ்நகர்நோக்கிய தாக்குதலை எப்படி தடுக்கமுடியும் என்று நீங்கள்கூட கருதலாம்.ஆனால் அதுதான் முழுமையான உண்மை.அது எப்படியென்றால், புலிகளின் உளவியல் சக்தியாக உரம்பெற்றிருந்த வன்னி மக்கள்ளின் மனங்களை சிதைத்து அவர்கள் ஊடாக புலிகளுக்கு நெருக்குவாரத்தை ஏற்படுத்தி புலிகளுக்கான உள்ளக பலவீனத்தை கொடுக்கவேண்டும் என்பதே வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தின்மீதான இலங்கை படைகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் உண்மையான நோக்கமாகும்.

அத்துதுடன் விடுதலைப் புலிகளின் கையிருப்பிலிருந்த மருந்துப்பொருட்களை இயன்றவரை விரையமாக்கி அதனூடாக புலிகளின் யாழ்நகர் நோக்கிய படைநடவடிக்கையை தடுப்பதற்கான இன்னொரு திட்டமாகவும் இந்த செஞ்சோலை வளாகம் படையினரால் குறிவைக்கப்பட்டதென்பதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.

மேலும் யாழ்நகர்நோக்கிய பாரிய படைநடவடிக்கையை புலிகள் ஆரம்பித்து நடத்திக்கொண்டிரு்தவேளை களமுனைக்கு சம்மந்தமே இல்லாத இலக்கொன்றை (செஞ்சோலை வளாகத்தை) இலங்கைப்படைகள் மிலேச்சத்தனமாக தெரிவுசெய்து தாக்கியழிப்பார்களென்று புலிகள் சிறிதளவும் எதிர்பார்த்திருக்கவில்லை.

உண்மையில் இந்த கோரமான விமானத்தாக்குதலின் பின்னர்தான் புலிகளுக்கான உள்ளக பலவீனம் வன்னியில் ஏற்படத்தொடங்கியதென்பதை களத்திலிருந்து அவதானித்தவன் என்ற அடிப்படையில் இதை பதிவுசெய்கின்றேன்.

இந்த தாக்குதலை இலங்கை விமானப்படை திட்டமிட்டு நடத்தியிருந்தாலும் அதன் ஊடாக புலிகளுக்கே சர்வதேசம் அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்திருந்தது. இந்த தாக்குதலின்பின்னர் வடபோரரங்கை புலிகளால் தொடர்ந்து நடத்தமுடியாத அளவுக்கு மருத்துவச்சேதம் ஏற்பட்டதுடன், வடபோரரங்கில் காயப்பட்டு வந்துகொண்டிருந்த போராளிகளை பராமரிப்பதிலும் புலிகளுக்கு சிக்கல்நிலை ஏற்படத்தொடங்கியது.

இதன்காரணமாகத்தான் யாழ்நகர்நோக்கிய புலிகளின் பாரிய படைநடவடிக்கை மெல்ல மெல்ல தணிக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைகளுக்கு புலிகளின் படையணிகள் திரும்பப்பெறப்பட்டார்கள் என்பதே களமுனை தகவல்களாகும்.