மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர் வசந்தனுக்கு டென்மார்க் தமிழர் நடுவத்தின் கண்ணீர் அஞ்சலிகள்.

Home » homepage » மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர் வசந்தனுக்கு டென்மார்க் தமிழர் நடுவத்தின் கண்ணீர் அஞ்சலிகள்.
மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர் வசந்தனுக்கு டென்மார்க் தமிழர் நடுவத்தின் கண்ணீர் அஞ்சலிகள்.

கண்ணீர் அஞ்சலி
அமரர் வசந்தன் Grindsted, Denmark

மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் என்ற இயற்பெயரை கொண்ட திரு வசந்தன் அவர்கள் சாவடைந்த செய்தி எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது.

வசந்தன் அவர்கள் மூத்த போராளி மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர். அவருடைய சகோதரர் ரூபகுமாரும் தமிழீழவிடுதலையை நெஞ்சினில் சுமந்து ஆரம்பகாலத்தில் ஈபிஆர்எல்எப் அமைப்புடன் தன்னை இணைத்து செயல்பட்டிருந்த நிலையில் விபத்து ஒன்றில் சாவடைந்திருந்தார்.

வசந்தனின் தாய் தந்தையினர் தமிழீழ தேசியதலைவர் மேதகு பிரபாகரனின் நன்மதிப்பை பெற்றிருந்ததுடன் அவரின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்தனர். வசந்தனின் தந்தையார் தமிழீழவிடுதலைப்புலிகளினால் சமாதான காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட பல மக்கள் பிரதிநிதிகள் குழுக்களில் தமிழீழவிடுதலைப்புலிகளினால் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.

வசந்தன் அவர்களும் கறுப்பு யூலையில் தமிழ்மக்கள் மீது நடந்த இனப்படுகொலையை தொடர்ந்து ரெலோ அமைப்பில் இணைந்து செயற்பட்ட போதும் பின் அதில் இருந்து விலகி டென்மார்க் நாட்டிற்கு புலம்பெயர்ந்திருந்தார். டென்மார்கில் நடைபெற்ற தமிழீழவிடுதலைக்கு ஆதரவான அனைத்து போராட்டங்களிலும் தன்னை இணைத்துக்கொண்டிருந்த வசந்தன் அவர்கள் தான் வாழ்ந்த நகரத்தில் அமைந்த அனைத்து தமிழ் அமைப்புகளிலும் தன்னை இணைத்து செயல்பட்டதுடன் நகரசபையால் அமைக்கப்பட்ட இணைவாக்க சபையிலும் உறுப்பனராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

தாயகம் சென்று தேசியதலைவருடன் இணைந்து சோதியா படையணியின் 10 வது அகவை நிகழ்வில்
கலந்து கொண்டிருந்த வசந்தன் அவர்கள் 2009 ஆம் ஆண்டு ஆயுத மௌனிப்பை தொடர்ந்து புலம்பெயர்ந்த போராளிகளை இன்முகத்துடன் அரவணைத்து அவர்களின் அரசியல் செயல்பாடுகளுக்கு உறுதுணையாகவிருந்தார்.

புலம்பெயர்ந்த போராளிகளின் அரசியல் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக செயல்படுவதர்காக அமைக்கப்பட்ட தமிழர் நடுவத்தின் மாவீரர்களுக்குக்கான செயல்பாடுகளுக்கு இணைபாளராகவும் வசந்தன் அவர்கள் பல்வேறு குறுக்கீடுகளுக்கு மத்தியில் சிறப்பாக செயல்பட்டார்.

போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மாவீரர் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு நம்பிக்கைஒளி, அன்னை அறக்கட்டளை போன்ற அமைப்புக்கள் ஊடாகவும் தனிப்பட்ட முறையிலும் பல்வேறு உதவிகளை வசந்தன் அவர்கள் தான் நோய்வாய்பட்டடிருந்த காலத்திலும் செய்திருந்தார்.

தற்போது தாயகத்தில் ஏற்ப்பட்டுள்ள அரசியல் இடைவெளியை தலைவரின் பாசறையில் பயின்ற முன்னாள் போராளிகளினாலேயே நிரப்பமுடியும் என்றதால் ஜனநாயக போராளிகள் கட்சியை வலுப்படுத்த எமது அமைப்பு முடிவெடுத்த போது எமக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை தந்ததுடன் தானும் தனது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் கூறியிருந்த நிலையிலேயே வசந்தன் அவர்கள் சாவடைந்துள்ளார்.

விடுதலை வேட்கையை மட்டுமே நெஞ்சினில் சுமந்து தலைவருக்கு உறுதுணையாக போராடி போராட்ட வடுக்களுடன் தாயகத்தில் ஜனநாயக வழியில் போராடும் ஜனநாயக போராளிகள் கட்சியை பலப்படுத்துவதே வசந்தன் அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.

சாவடைந்த வசந்தன் அவர்களின் துயரில் வாடும் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நாமும் கனத்த இதயத்துடன் இணைந்துகொள்கின்றோம்.

ஐந்தரசன்

இணைப்பாளர்
தமிழர் நடுவம் டென்மார்க்
23.08.2017

Comments Closed

%d bloggers like this: