டென்மார்க்கில் சாவடைந்த வசந்தன் அவர்களை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் என விடுதலைப்புலிகள் கௌரவிப்பு!

Home » homepage » டென்மார்க்கில் சாவடைந்த வசந்தன் அவர்களை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் என விடுதலைப்புலிகள் கௌரவிப்பு!
டென்மார்க்கில் சாவடைந்த வசந்தன் அவர்களை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் என விடுதலைப்புலிகள் கௌரவிப்பு!

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் மைக்கேல் வசந்தன் அவர்களுக்கு எமது வீரவணக்கம்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் விடுதலைப் பற்றுறுதியை வெளிப்படுத்தும் செயற்பாடுகளில் முன்னின்று உழைத்த ஒரு அற்புத மனிதனை நாம் இன்று இழந்திருக்கின்றோம்.

எமது இயக்கத்தின் முதல் மகளிர் படையணி தளபதியாகவிருந்த மேஜர் சோதியா அவர்களின் சகோதரனான வசந்தன் அவர்கள் எமது தேசியத்தலைவரின் நம்பிக்கையையும்,நன்மதிப்பையும் பெற்றிருந்தவர்.
மேஜர் சோதியா அவர்கள் எமது இயக்கத்தின் முதல் மகளிர் படையணித் தளபதியாக தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டிருந்தவர்.

இந்திய இராணுவத்துடனான போர்களில் மணலாற்றுக்காட்டுப்பகுதியில் தலைவருடன் நின்றிருந்து மகளிர் படையணியை வழிநடத்திய போர்த்தளபதி.போராளிகளால் நைற்றிங் கேள் என பெருமையாக அழைக்கப்படுமளவிற்கு தளபதியாக மட்டுமல்லாமல் ஒரு தாயாகவும் தாதியாகவும் இருந்து அனைவரையும் நேசித்தவர்.கொடிய கானகத்தில் விசக்காய்ச்சல் ஒன்றிற்கு மேஜர் சோதியாவை 1990 /01/11 அன்று நாம் பறிகொடுத்திருந்தோம். ஆனாலும் அவரின் பெயரோடு களம்புகுந்த
சோதியா படையணி பல போரியல் சாதனைகளைப் படைத்ததென்பது வரலாறாய் எம்முன்னே விரிந்துகிடக்கின்றது.

அந்தப் பெண்புலியின் உடன்பிறந்த சகோதரனைத்தான் நாம் இன்று இழந்து நிற்கின்றோம்.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயகத்தை நோக்கிய செயற்பாடுகளினூடே பயணித்துவந்த ஒரு மனிதநேயப் பண்பாளனாகவே வசந்தன் அவர்கள் வாழ்ந்துவந்தார்.

சிங்களப்பேரினவாதத்தின் திட்டமிட்ட இனவழிப்பின் தொடர்ச்சியின் உச்சநிலையான முள்ளிவாய்க்கால் படுகொலையின் கோரநிகழ்வானது வசந்தன் அவர்களின் மனதையும் வெகுவாகவே பாதித்திருந்தது.இறுதி யுத்தத்தின் பின்னர் புலம்பெயர் நாடுகளிற்குச் சென்றிருந்த எமது போராளிகளுடன் இணைந்து தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை முன்னெடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததை நாம் நன்றியுணர்வோடு எண்ணிப்பார்க்கின்றோம்.

எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பன்னாட்டு அரசுகளை நோக்கி நீதிகேட்கும் போராட்டங்களில் மக்களை ஒன்றிணைப்பதற்காகவும்.
இழந்துவிட்ட தமிழர் அரசியல் உரிமைகளை மீட்டெடுக்கும் அறப்போராட்டங்களை மேற்கொள்வதற்காகவும் எமது இயக்கத்தின் தலைமைச் செயலகத்தால் புலம்பெயர் நாடுகளில் உருவாக்கப்பட்ட தமிழர் அமைப்புக்கள்,ஒன்றியங்கள் ,நடுவங்கள் என்பவற்றில் தன்னை இணைத்துக்கொண்டு டென்மார்க் தமிழர் நடுவத்தின் இணைப்பாளராக பொறுப்பேற்று கடமையாற்றி தனது இறுதிமூச்சுவரை எமது இனத்திற்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக குரலெழுப்பி வந்த ஓர் ஒப்பற்ற விடுதலைப் பற்றுறுதியாளனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்வதோடு அவருக்கு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் எனும் தகுதியை வழங்குவதில் பெருமையடைகிறோம்.

“உலகில் எந்தப்பகுதியில் எந்தச்சூழலில் எந்தத்தகுதியுடன் நீங்கள் வாழ்ந்தாலும்
தமிழீழத்தில்தான்,அந்தத் தாயகப்பூமியில்தான் உங்களது வேர் ஆழப்புதைந்து கிடக்கிறது.இந்த மண்ணில்தான் உங்களது இனத் தனித்துவத்தின்
அடையாளம் பதிந்து கிடக்கிறது.

இந்தமண் உங்களது இரத்தத்தோடும்,ஆன்மாவோடும் உங்களது வரலாற்றோடும் ஒன்றுகலந்து கிடக்கிறது. இந்தத் தாயகதேசம் எதிரியின் ஆதிக்கப்பிடிக்குள்
சிக்கி அழிந்துபோகாது பாதுகாப்பதில் உங்களுக்கும் பெரும் பங்கு உண்டு: பொறுப்பு உண்டு: கடப்பாடு உண்டு”. என்கிற எமது தேசியத்தலைவரின் வேண்டுகோளுக்கு அமைவாக தேசிய செயற்பாட்டாளர் வசந்தன் அவர்கள் தனது கடமையை முடிந்தவரை செய்துள்ளார்.

இவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்,நண்பர்கள்,டென்மார்க் தமிழர் நடுவத்தினர் ஆகியோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் துயரில் நாமும் இணைந்துகொள்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.

இ.வீரப்பன்
இணைப்பாளர்
போராளிகள் கட்டமைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

Comments Closed

%d bloggers like this: