இலங்கை தமிழ்

மாவீரர் நாள் நிகழ்வினை மாற்றியமைக்க முனையும் கஜேந்திரகுமாரை கண்டிக்கும் போராளிகள்.

தமிழீழவிடுதலைப் போராட்டத்தில் வித்தான போராளிகளை நினைவுகூறுவதற்காக தமிழீழ தேசியதலைவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மாவீரர்நாளில் மாற்று இயக்கத்தினரையும் நினைவுகூறப்போவதாக அறிவித்த கயேந்திரகுமாரின் கருத்தை வன்மையாக கண்டித்து தம்ழ்த்தேசிய சனநாயக போராளிகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. கயேந்திரகுமாரின் கட்சியினருக்கு என கூறி ரிசிசி வன்முறைக்குழுவினர் நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டன அறிக்கை!
தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சி.
எமது மாவீரர் நாள் நிகழ்வினை மாற்றியமைக்க முனையும் அ.இ.த.கா.கட்சியின் தலைவரான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்!
எமது தேசியத் தலைவர் அவர்களால் எமது மாவீரர்கள் கெளரவிக்கப்பட்டு அவர்களை தனித்துவமாக நினைவு கூர்ந்த மகத்தான நாளே மாவீரர் நாள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாக தம்மை அர்பணித்த ஒவ்வொரு போராளிகளும் தமது மாவீரம் எனும் இறப்பை மட்டுமே தமக்கான புகழாகவும்,கெளரவமாகவும் ஏற்றுக்கொண்டு தமது தேசம்,தமது மக்கள் என்ற பொதுவான உன்னதமான அர்பணிப்புமிக்க முழுமையான சேவையின் நிமித்தம் தமது உயிர்களை கொடைசெய்தார்கள்.
இப்படிப்பட்ட புனிதமான தனித்துவம்மிக்க எமது தியாகிகளை எமது விடுதலைப்போராட்ட காலத்தில் இலங்கை அரசபடைகளின் மனிதாபிமானமற்ற தாக்குதல்களில் அனியாயமாக மரணித்த சாதாரண பொதுமக்களுடன் இணைத்து அதை ஒரு சாதாரண மரண நிகழ்வாக மாற்றியமைக்க அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரான தங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார் இதை மாற்றியமைக்கும்படி?
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு மட்டுமே தமது அமைப்பின் செயற்பாடுகள்,திட்டங்கள் தொடர்பாக எதையாவது பரிசீலிக்க முடியும் என்பதை தாங்கள் மறந்துவிட்டீர்கள்போல் தெரிகின்றது.
புலிகளின் வேலையை சாகமல் எஞ்சியிருக்கும் புலிகள் இருக்கத்தக்கதாக நரிகளை பார்க்கும்படி யார் அதிகாரம் கொடுத்தார்? என்பதே எமது கேள்வியாகும்.
திருவாளர் கஜேந்திரகுமார் அவர்களிடம் நாங்கள் ஒன்றை கேட்கிறோம்.அதாவது உங்கள் கட்சியை கலைத்துவிட்டு எமது போராளிகளின் அரசியல் கட்சியில் உங்களால் இணைய முடியுமா என்று?
அதை முதலில் நீங்கள் செய்துவிட்டு பின்னர் வாருங்கள் எதையாவது இணைந்து பேசுவோம்.
எமது தமிழ்த்தேசிய அரசியலில் உங்கள் கட்சியானது ஒரு தனித்த மூஞ்சூறாகவே தற்போதுவரை உலாவருகின்றது.நிலமை இப்படியிருக்க, எமக்கே உரித்தான எமது அமைப்பின் பணிகளை உங்கள் மூஞ்சூறுகளுடன் கூடி நீங்கள் முடிவெடுக்க முனைவதானது எமது அமைப்பின் போராளிகளை நீங்கள் சீண்டிப்பார்க்க எத்தனிப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது.
எமது தேசியத் தலைவர் அவர்களால் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட எந்தவொரு நிகழ்வுகளையும் அவர் வளர்த்த எமது போராளிகளால்கூட அதை மாற்றியமைக்க முடியாதென்றபோது, அதற்கு சம்மந்தமே இல்லாத உங்கள் கட்சியினர் எமது மாவீரர்கள் தொடர்பாக தாம் கூடிக்கதைப்பதானது பெரும் நகைப்பிற்கிடமானதாகவே எம்மால் நோக்கப்படுகின்றது.
ஆகவே எமது இனத்தின் தேசிய வீரர்களின் தனித்துவத்தில் அதற்கு உரித்தான எமது போராளிகள் தவிர்ந்து யார் யார் முடிவெடுக்க தமது கட்சிகள் சார்ந்து முற்பட்டாலும், அவர்களை எமது தமிழ் தேசிய அரசியலிலிருந்து அப்புறப்படுத்துவதே எமது முதற்பணியாக இருக்கும் என்பதனை இங்கே தங்களுக்கு காட்டமாக கூறிவைக்க விரும்புகின்றோம்.
ஊடகப்பிரிவு
த.தே.ச.போ.கட்சி
நடுவப்பணியகம் கிளிநொச்சி.