தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியின் சமகால அரசியல் நிலைப்பாடு!!

Home » homepage » தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியின் சமகால அரசியல் நிலைப்பாடு!!
தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியின் சமகால அரசியல் நிலைப்பாடு!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாக நாங்கள் வாழ்ந்தபோது எப்படியான தனித்துவ பண்புகளோடு உறுதியாக நின்று போரிட்டுவந்தோமோ, அதிலிருந்து சிறிதளவும் எமது தனித்துவ பண்புகளை நாம் விட்டுக்கொடாது அரசியலிலும் மிகவும் உறுதியாக நின்று எமது மக்களுக்காக நேர்மையாக உழைக்கவேண்டும் என்பதே எமது குறிக்கோளாகும்.

எமது ஆயுதப்போராட்ட காலத்திலும்சரி, தற்போதைய அரசியல் போராட்டத்திலும்சரி நாம் நாமாகவே இருக்க விரும்புகின்றோம்.

புலிகளுக்கான அரசியல் பாதை என்பது கட்சிதாவும் பழக்கங்களை கொண்டதல்ல என்பதனையும் இங்கே நினைவூட்ட விரும்புகின்றோம். எமது தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியின் உருவாக்கமானது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் நாமத்திற்கு எக்காலத்திலும் களங்கத்தை ஏற்படுத்த இடமளிக்காதென்பதனையும் இங்கே உறுதிபட தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது கட்சியானது நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் தாமாக வலிந்துசென்று எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு அரசியல் பழுமிக்க தமிழ் அரசியல் கட்சிகளுடனும் கூட்டிணைந்து செயற்படாதெனவும் இங்கே மிகவும் தெளிவாக கூறிவைக்க விரும்புகின்றோம்.

கட்சிதாவும் கட்சிகளுக்கிடையே எமது தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியானது எப்போதும் நாம் “தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள்” என்பதை மறந்து ஒருபோதும் செயற்படாதென்பதனையும் இங்கே ஆணித்தரமா கூறிநிற்கின்றோம்.

போராளிகளாகிய எமக்கு மக்கள் பணியே எப்போதும் பிரதானமானதாகும். தற்போதைய எமது அரசியல் உருவாக்கத்தின் ஊடாக எம்மை எமது மக்கள் மற்றைய அரசியல் கட்சிகள்போன்று அப்பழுக்குள்ள கட்சியாக நினைப்பதற்கும் சந்தர்ப்பம் உள்ளது.ஆனால் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிகள்போன்றும் எமது போராளிகள் கட்சி ஒருபோதும் இருக்காது.

நாம் போராளிகள் என்பதற்கு அப்பால், எமது முன்னைய கட்டமைப்பின் ஒழுக்கத்தை தொடர்ந்து பேணுவது மட்டுமல்லாது, எப்போதும் மக்களுக்காக போராடும் அர்பணிப்புள்ள போராளிகளாகவே நாம் தொடர்ந்தும் செயற்பட விரும்புகின்றோம்.

எமது பலம்,பலவீனம் யாவும் எமது மக்களுக்கான எமது எதிர்கால அரசியல் பணிகள் ஊடாகவே பிறப்பெடுக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஆகவே நாம் ஓரிரு அரசியல் சலுகைகளுக்காக ஒருபோதும் எமது அடிப்படையான தனித்துவ பண்புகளை இழந்து அரசியலில் நடைபோடமாட்டோம் என்பதனையும் எமது மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.

போராளிகளாகிய நாம் எமது அடிப்படைகளை மறந்து அரசியலில் பயணித்தால் ஒருபோதும் எம்மை போராளிகள் என்று கூறமுடிாதென்பதை உணர்ந்தே எமது அரசியல் பயணத்தில் மிகவும் ஒழுக்கமுடன் செயற்படுவதென முடிவுசெய்து தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியாக எமது மக்களுக்காக புறப்பட்டுள்ளோம்.

எனவே தற்காலத்தில் சடுதியாக நடைபெறப்போகும் தேர்தல்களில் நாம் பங்கெடுக்காது, எமது மக்களுக்கான அரசியல் பணிகளை தொடர்ந்து நாம் முன்னெடுப்பதுடன் எமது அர்பணிப்புமிக்க அரசியல் பணிகள் ஊடாக எமது மக்கள் எம்மில் நம்பிக்கைகொண்டபிற்பாடே நாம் தனித்துநின்று சகல தேர்தல்களிலும் போட்டியிடுவோம் என்பதனையும் எமது மக்களுக்கு அறியத்தருகின்றோம்.
ஊடகப்பிரிவு
த.தே.ச.போ.கட்சி
நடுவப்பணியகம்
கிளிநொச்சி.

Comments Closed

%d bloggers like this: