தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர் மீது ஜெனீவாவில் தாக்குதல் – மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்.

Home » homepage » தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர் மீது ஜெனீவாவில் தாக்குதல் – மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்.
தினேஸ்

சுவிஸின் யெனீவா மாநிலத்தில் தமிழர் இயக்கத்தின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் மீது இன்று காலை (09.05.2018) தினேஸ் எனும் நபர் தாக்குதலை நடாத்தியுள்ளார்.

இந்நபர் இதற்கு முன்னரும் தமிழர் இயக்கச் செயற்பாட்டாளர்கள் மீது நேரடியாகவும், சமூக வலைத்தளங்களிலும் அநாகரீகமான முறையில் வார்த்தைப்பிரயோகங்களைப் பாவித்து அச்சுறுத்தியிருந்தார் எனவும் அறியமுடிகிறது.

இது தொடர்பாக தமிழர் இயக்கம் கருத்துக் கூறுகையில், சம்பந்தப்பட்ட நபரிற்கு தமது வேலைத்திட்டங்கள் சார்ந்து நேர்மையான முறையில் தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

இதே வேளை தமிழர் இயக்கமானது தமிழீழத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டும், தமிழீழத்திற்கான சர்வதேச அங்கீகாரம் வேண்டியும் அனைத்துலக ரீதியாக சர்வதேச இராசதந்திர, மனிதநேயத் தளங்களில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வேலைத் திட்டங்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடிதாயுமுள்ளது.

இச் செயற்திட்டங்களை முடக்கும் உத்தியுடன் தமிழர் இயக்கச் செயற்பாட்டாளர்களை குறி வைத்து தாக்கும் இந் நபர் யாருடைய பின்னணியில், எவ் அந்நிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகின்றார்? எனும் கேள்வியை சுவிஸ் வாழ் புலம் பெயர் ஈழத் தமிழர்கள் எழுப்பியுள்ளனர். இம் மர்ம நபர் சார்ந்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது பற்றி எமது ஊடகவியலாளர், தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் குருசாமி குருபரன் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் பின்வருமாறு தெரிவித்தார்:
மனித உரிமைத் தளங்களில் நேர்மையாகச் செயற்பட முன்வருபவர்களை அச்சுறுத்துவதும், அவர்கள் மீது தாக்குதல் புரிவதும், சமூக வலைத் தளங்களில் அவர்களை அநாகரீகமாகத் தாக்கி எழுதுவதும் கடந்த சில காலங்களாக இடம்பெற்றுவருகின்றது. இவ் அராஜகச் செயற்பாடுகள் மனித உரிமைச் செயற்பாடுகளை முடக்கும் நோக்கத்துடனேயே நடைபெறுவதுடன் இச்செயல் சனனாயக விழுமியங்களிற்கு விடப்படும் பாரிய சவாலாகவும் அமைகின்றது. தமிழர் இயக்கமானது இச் செயலை மேற்கொண்ட குறித்த நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்துள்ளதாகத்தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் “ இலட்சியப்பற்றுடன் நேர்மையாகவும் சனனாயக வழியிலும் செயற்படும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் இத்தகைய அனைத்துச் செயற்பாடுகளையும் தமிழர் இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாகவும்” மேலும் இப்படியான மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் விட எத்தனிப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இச் செயலை பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வன்மையாக கண்டித்துள்ளதாகவும், இது போன்ற வன்முறைகளுக்கு எதிராக இறுக்கமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தாம் சேர்ந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளதாக குருபரன் அவர்கள் குறிப்பிட்டார்.

Comments Closed

%d bloggers like this: