“ஒன்றிணைந்து செயற்படுவோம்” மாவீரர் முன் உறுதியெடுத்து ஒன்றிணைந்த போராளிகள்.. சுவிசில் புதிய திருப்பம்!!

“ஒன்றிணைந்து செயற்படுவோம்” மாவீரர் முன் உறுதியெடுத்து ஒன்றிணைந்த போராளிகள்.. சுவிசில் புதிய திருப்பம்!!

“தமிழ் மக்களின் விடுதலைக்காக, நமக்கிடையில் இருக்கும் கருத்து முரண்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, ஒன்றிணைந்து செயற்படுவோம்” என வெவ்வேறு தளங்களில் செயற்பட்டுக்கொண்டிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள், மாவீரர்கள் வீரவணக்க நிகழ்வில் வைத்து, உறுதியெடுத்துக் கொண்டுள்ளனர். இந்நிகழ்வைக் கண்ணுற்ற தமிழ் மக்கள் கண்ணீர் மல்க கரகோசம் செய்து, தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

19/09/2021 அன்று மாலை,  சுவிட்சர்லாந்து நாட்டின் Zürcherstasse, Neuenhof எனும் இடத்தில், சிறப்பாக ஒழுங்கு படுத்தப் பட்டிருந்த, இறுதி யுத்த மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வுக்காக, பெருமளவு பொதுமக்களும், தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களும், வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஒன்று கூடியிருந்தார்கள்.

முள்ளிவாய்க்கால் காவிய சமர்க்களமதில், வீரகாவியமான மாவீரர்களுள் 25 பேரினது திருவுருவப்படங்கள் உணர்வெழுச்சியுடன் அலங்கரிக்கப்பட்ட நிலையில், போராளி சுஜீவன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

முதல் நிகழ்வாக, தமிழீழத் தேசியக் கொடியினை மாவீரர் கேணல் நாகேஸ் அவர்களின் துணைவியார் கெங்கா அவர்கள் ஏற்றிவைத்தார்.

பொதுச்சுடரினை தமிழ்மாறன், சந்திரகுமார் மற்றும் எழிலினி ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து விடுதலைப் புலிகளின் போராளிகள் கட்டமைப்பை சேர்ந்த செம்பரிதி, விடுதலைப் புலிகள் பத்திரிகையின் ஆசிரியர், திரு.ரவி, மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப்பொறுப்பாளரான திரு.ரகுபதி ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர்.

இதன் போது இவர்கள் குறிப்பிடுகையில், 2009ன் பின்னர் தமிழ் மக்களின் தேசியத் தளத்தில், துருவப் படுத்தப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு கட்டமைப்புகளை சேர்ந்த செயற்பாட்டாளர்கள், ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்வதாகவும், தமிழ் மக்களின் விடுதலை வாழ்வைக் கருத்தில் கொண்டு, எல்லோரும் ஒருங்கிணைய முன் வருவதாகவும் உறுதியெடுத்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்வானது புலம்பெயர் தமிழர் அரசியல் தளத்தில் புதிய திருப்பத்தை கொண்டுவரலாம் என நம்பப்படுகிறது.

Comments Closed

%d bloggers like this: