சிறீலங்கா அரசாங்கத்தில் கே.பி முதன்மையான பாத்திரம்! திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

Home » homepage » சிறீலங்கா அரசாங்கத்தில் கே.பி முதன்மையான பாத்திரம்! திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

நாடுகடந்த அரசாங்கத்தை அமைக்குமாறு வி.உருத்திரகுமாரனின் தலைமையிலான தனது குழுவினருக்கு பணிப்புரை வழங்கி விட்டு சிறீலங்கா அரசிடம் சரணாகதியடைந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் முதன்மையான – காத்திரமான பாத்திரத்தை வகித்து வருவதாக சிங்கள அரசாங்கத்தின் ஆலோசகர் பேராசிரியர் ரொஹான் குணரட்ண தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகச் செவ்வியை வழங்கியிருக்கும் பேராசிரியர் ரொஹான் குணரட்ண, சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து சத்தம் சந்தடியின்றி கே.பி பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

‘‘தமிழ் மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் ஒரு உறவுப்பாலமாக கே.பி திகழ்கின்றார். இன ஐக்கியத்திற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தனது தொடர்பாளர்கள் ஊடாக கே.பி பணியாற்றுகின்றார். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அவர் காத்திரமான பங்கை வகித்து வருகின்றார்.

வடக்குக் கிழக்கை சேர்ந்த பல தமிழர்களை கே.பி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அவரை நானும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளேன். எவ்விதமான சத்தம் சந்தடியின்றி அவரது பணி தொடர்கின்றது.

அவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறீலங்கா அரசாங்கம் சித்திரவதைக்கு உட்படுத்தவில்லை. நல்லதொரு பணியில் ஈடுபடும் கே.பி அவர்களை அரசாங்கம் ஏன் சித்திரவதை செய்ய வேண்டும்?

கே.பி அவர்களின் உதவியுடனேயே வெளிநாடுகளில் உள்ள புலிகளின் கட்டமைப்புக்களை சிறீலங்கா அரசாங்கம் உடைத்து வருகின்றது. விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்றை அவரது உதவியுடனேயே அரசாங்கம் கைப்பற்றியது.

சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கே.பி செயற்படுவதால் வெளிநாடுகளில் இருந்து ஆயுதக் கிளர்ச்சியை தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடங்க முடியாது.’’

இவ்வாறு சிறீலங்கா அரசாங்கத்தின் ஆலோசகரான ரொஹான் குணரட்ண தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பொழுதும், அதன் பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளும், போராளிகளும் சிங்களப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டதன் பின்னணியில் முதன்மையான பாத்திரத்தை வகித்த கே.பி, வெளிநாடுகளிலும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் ரொஹான் குணரட்ணவின் ஊடகச் செவ்வி கடந்த ஓராண்டாக தமிழீழ மக்களிடையே நிலவிய சந்தேகங்களை மெய்யுண்மையாக்கியுள்ளது.

அத்துடன், தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே குழப்பத்;தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் கே.பியின் அடியாட்களும், அவரால் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகளும் ஈடுபட்டு வருவதன் பின்னணியை ரொஹான் குணரட்ணவின் செவ்வி அம்பலப்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகச் செவ்வியை அளித்த பேராசிரியர் ரொஹான் குணரட்ண, அருட்தந்தை இம்மானுவேல் அடிகளாரை ஒரு இனவாதியாக வர்ணித்ததோடு, கே.பி அவர்களால் நியமிக்கப்பட்ட வி.உருத்திரகுமாரனுடன் பேசி சிறீலங்கா அரசாங்கம் சமரசம் செய்துகொள்ள முடியும் என்று கூறியிருந்தமை நினைவூட்டத்தக்கது.


%d bloggers like this: