”எங்களையும் மீள் குடியேற்றுங்கள்”-யாழ்ப்பாணத்தில் ஒரு நாடகம்

Home » homepage » ”எங்களையும் மீள் குடியேற்றுங்கள்”-யாழ்ப்பாணத்தில் ஒரு நாடகம்

”1980 களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வாடகை வீடுகளில் வசித்து வந்தோம். நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தம் காரணமாக இங்கிருந்து இடம்பெயர்ந்தோம். சுமூகமான சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு மீண்டும் இங்கு வந்துள்ளோம்.
நாங்கள் இங்கு வாழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து தாருங்கள்” என்ற கோரிக்கையுடன் சிங்கள மக்களில் 200 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியுள்ளன.
இந்த விடயம்தான் யாழ்ப்பாணத்தில் இன்று பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. யுத்தம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் திடீரென மூட்டை முடிச்சுகளுடன் சிங்கள மக்கள் மீள்குடியேற்றத்திற்கு வந்துள்ளமை எல்லோரையும் சிந்திக்க வைத்துள்ளதுடன் அதன் பின்னூட்டல் என்னவாக இருக்கும் என்ற சந்தேகத்தையும் எல்லோருடைய மனங்களிலும் ஊடுருவச் செய்துவிட்டது.

யாழ்ப்பாணத்தில் 1983 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் ஆயிரக்கணக்கானோர் இங்கிருந்த இடம்பெயர்ந்தனர்.
சொந்தக் காணியில், சொந்த வீட்டில் வாழ்ந்த அந்த மக்கள் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடங்கள் கடந்த நிலையில் இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஆக 55 குடும்பங்கள் மட்டுமே மீளக்குடியமர்ந்துள்ளனர்.

தாம் தற்போது வாழ்கின்ற இடங்களில் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகின்ற அவர்கள் அந்தத் தொழில்களை கைவிட்டு யாழ்ப்பாணத்தில் என்ன செய்து உடனடியாக எந்தத் தொழிலை ஆரம்பிப்பது எப்படி. அதுவரைக்கும் தம்மைக் கட்டியெழுப்புவது எப்படி? அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எந்த வழி என்றெல்லாம் ஆற அமர சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் சொந்தக் காணிகளோ,வீடுகளோ இல்லாது வாடகை வீடுகளில் வாழ்ந்த இந்தச் சிங்கள மக்கள் எவ்வாறு? என்ன? துணிவுடன் எடுத்த எடுப்பில் இங்கு மீள்குடியேற வந்துள்ளார்கள் என்ற கேள்விக்கணைகளை அவர்களது வருகை எல்லோரது மனங்களிலும் ஏற்படுத்தியுள்ளது.

உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அரசு தம் வசப்படுத்தியுள்ள வலி. வடக்குப் பகுதியில் இன்னமும் தமிழ் மக்களை அதுவும் அவர்களது சொந்தக் காணியில் மீள்குடியேற்றம் செய்யாமல் 20 வருடங்களுக்கு மேல் இழுத்தடித்து வருகின்ற இந்த அரசாங்கம் சொந்தக் காணிகளோ, வீடுகளோ, இல்லாத இவர்களை குடியேற்றம் செய்யும் என்ற நம்பிக்கை இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? அந்த மன உறுதியை ஊட்டியவர்கள் யார்? என்ற சந்தேகங்களும் சாதுவாக எழுந்துள்ளது.

யாழ். புகையிரத நிலையத்தில் எந்த விதமான அடிப்படை வசதிகளோ இல்லை. இந்நிலையில் எவ்வளவு காலம் தான் தங்கியிருக்கப் போகிறீர்கள்? என்று அங்குள்ளவர்களிடம் கேட்ட போது “”எவ்வளவு காலமெண்டாலும் பரவாயில்லை. எமக்கு நல்ல பதில் கிடைக்கும் வரையும் நாங்கள் மீளவும் போகமாட்டோம். இறுதிவரை எமது உரிமைக்காக போராடுவோம்” என்று அங்குள்ள அதாவது அந்த மக்களை குறிப்பாக மீள் குடியேற்றம் தொடர்பான விடயங்களை ஒழுங்கமைத்து வருகின்ற மல்காந்தி என்ற பெண்மணி கூறினார்.

உங்களுக்கு உரிய தீர்வு கிடைக்குமா? நீங்கள் கேட்கின்ற அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறதா? என்று கேட்டதற்கு

“”நிச்சயமாக எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. இன்னும் ஓரிரு தினங்களில் பெரிய இடத்தில் இருந்து சரியான பதில் கிடைக்கும். அதற்காகத் தான் காத்திருக்கிறோம்” என்று உறுதிபடத் தெரிவித்தார். (அந்தப் பெரிய இடம்தான் எதுவோ?)

அத்துடன் தமது உடைமைகளையும் ஓட்டோ, மோட்டார் சைக்கிள், ரி.வி. போன்ற கூடவே கொண்டு வந்திருக்கிறார்கள். இதை வைத்துப் பார்க்கின்ற போது இவர்கள் மீளவும் திரும்ப மாட்டார்கள் போலத்தான் தென்படுகின்றது.

இங்கு வந்துள்ள மக்களில் அநேகமானவர்களுக்கு தமிழ் நன்கு தெரியும். சரளமாகக் கதைக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் பேசாமல் ஓரிடத்தில் பேசாப் பொருளாய் உள்ளார்கள். மல்காந்தி, சௌந்தலா மற்றும் இராணுவத்தில் கோப்ரல் தரத்தினையுடைய விக்கிர மசிங்க இந்த மூவரும்தான் அங்கு வருகின்ற ஊடகங் களுக்குக் கருத்துச் சொல்லுகின்றவர்களாக உள்ளனர்.
ஏனையவர்களுடன் கதைக்கவே விடமாட்டார்கள்! அப்படி மற்றவர்களுடன் கதைக்க முற்பட்டாலும் ”நீங்கள் அந்த மூன்று பேரிடமும் போய் எல்லா தகவல்களை யும் கேளுங்கள்”
என்று கூறி நழுவி வருகிறார்கள். ஏனையவர்கள் யாரும் எதுவும் கதைக்கக் கூடாதென்றும் அறிவுறுத்தியுள்ளார்களாம். இதில் 20 இற்கு மேற்பட்ட விதவைகள் அங்கு உள்ளனர். அவர்களில் போரில் இறந்து போன இராணுவ வீரர்களின் மனைவிமாரும் உள்ளடங்குவார்கள்.

மேசன், பேக்கறி, வியாபாரம் உள்ளிட்ட பல தொழில்களைச் செய்பவர்கள் எல்லாம் வந்துள்ளார் கள். அதில் அநுராதபுர வைத்தியசாலையில் அம்புலன்ஸ் சாரதியாகவுள்ள அரச ஊழியர் ஒருவர் விடுமுறையினை எடுத்து இங்கு வந்துள்ளதாகவும் பலாலி இராணுவ முகாமில் கோப்ரல் தரத்தில் உள்ள இராணுவ வீரர் ஒருவரும் தான் நீண்டதொரு விடுமுறையில் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள குடும்பங்களின் நிலைமைகளைப் பார்த்தால் பண வசதி படைத்தவர்கள் போலத் தெரியவில்லை. எல்லோரும் நடுத்தர மற்றும் மிகவும் மோசமான வறுமைக்கோட்டுக்குட்பட்ட நிலையினைச் சேர்ந்த மக்களாக உள்ளனர்.

வந்திருப்பவர்களில் வயது முதிர்ந்தவர்கள் தாம் முன்னர் யாழ்ப்பாணத்திலே வசித்ததற்கு ஆதாரமாக யாழ்ப்பாண முகவரிகளைக் கொண்ட “புத்தம் புதிய’ அடையாள அட்டைகளையும் காண்பிக்கிறார்கள். அந்த அடையாள அட்டைகள் ஒரு மாதகாலத் துக்குள்ளேயே பெறப்பட்டுள்ளன என்பதுவும் கவனத்தை ஈர்த்தன.

இந்த மக்களுடைய வாழ்வியல் எப்படித்தான் கடந்த நான்கு நாள்களாக நகர்ந்தது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இவர்களுக்குரிய குடிநீர் வசதிகளை யாழ். மாநகர சபையும் , மின்சார வசதிகளை மின்சார சபையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. அத்துடன் பொலிஸ், இராணுவப் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அங்கு செல்பவர்கள் ஊடகவியலாளர்கள் உட்பட எல்லோரும் பதிவு செய்யப்படுகின்றனர்.

அநுராதபுரத்தில், மிஹிந்தலை எனும் இடத்தில் இருந்து பல்வேறு தொழில்களை மேற்கொண்டு தமது வாழ்வியலை நகர்த்திக் கொண்டிருந்த இவர்கள் அங்கிருந்து திடீரென இடம்பெயர்ந்த மக்களைப் போல இங்கு வந்து மூட்டை முடிச்சுகளுடன் தங்கியுள்ளார்கள் என்று நினைக்கும் போது இதற்குப் பின்னால் பெரும் பலம் வாய்ந்த சக்தியொன்று இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இவர்கள் மீள்குடியேற்றத்திற்கு வந்த போது இவர்களுடன் செய்திகளைச் சேகரிக்க தென்னிலங்கையில் இருந்து வெளியாகும் சிங்களப் பத்திரிகைகளின் செய்தியாளர்களும் வந்துள்ளனர் என்றால் பாருங்களேன்.

தாம் முன்னர் வாழ்ந்த இடங்களைத் தருமாறு கோரவில்லை என்றும் தமக்கு அரச காணிகளைப் பகிர்ந்து தருமாறே அரச அதிபரிடம் மனுக் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் எங்கு அரச காணிகள் உள்ளன என்ற கேள்வியும் அடுத்த கட்டத்தில் எழுந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களில் அனேகமானவர்களுக்கே சொந்தக் காணிகள், வீடுகள் இல்லாத நிலையில் உள்ளனர். அவர்களில் பலர் ரயில் ஓடிய பாதைகளில் சிறிய கொட்டில்களை அமைத்து தமது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது ரயில் பாதைகள் புனரமைக்க வேண்டியுள்ளதால் அந்த மக்களும் அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டிய திரிசங்கு நிலையில் உள்ளனர். எங்கு போவது? என்ற செய்வது? என்ற தளம்பல் நிலையில் காணப்படுகின்றனர்.

காணிகளைப் பகிர்ந்தளிப்பது என்கின்ற விடயம் இன்றைய யாழ்ப்பாண சூழ்நிலையைப் பொறுத்தவரை சாத்தியப்படாது. ஏனெனில் இங்கு அரச காணிகள் எதுவுமே இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் கருத்துத் தெரிவித்துள்ளார்.

முன்னறிவித்தல் எதுவும் இன்றி திடீரென இங்கு வந்துள்ள சிங்கள மக்களால் யாழ்ப்பாண சிவில் நிர்வாகத்திற்கு சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது என்று யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் பி.பி.ஸிக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

யாழ். அரச அதிபருக்கு மட்டுமன்றி இங்குள்ள அனைவருக்குமே தர்ம சங்கடமான நிலையே தோன்றியுள்ளது.

இந்த மீள்குடியேற்ற நாடகத்தின் கருப்பொருள் என்ன? தயாரிப்பாளர்கள் யார்? என்பதெல்லாம் வேஷம் கலைக்கும் போது எல்லோரும் தெட்டத் தெளிவாக உணர்வார்கள். இதுவே உண்மையாகும்.


%d bloggers like this: