செய்திகள்

தமிழகத்தின் காரூர் இலங்கை அகதி முகாமில் பாலியல் துன்புறுத்தப்பட்ட பெண் தீயிட்டு தற்கொலை!

தமிழ்நாடு காரூர் மாவட்டத்தில் இலங்கை அகதி முகாமில் வசித்துவந்த பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பலனளிக்காது உயிரிழந்துள்ளார். கடந்த வாரத்தில் குறித்த 28 வயதுடைய பத்மாவதி என்ற பெண்ணின் கணவரான குமார் என்பவரை காவற்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து சென்றனர்.

இந்த நிலையில் அவரைக் பார்வையிட அனுமதிப்பதாகக் கூறி பத்மாதேவியை முகாமில் இருந்து காவற்தறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

முகாமிற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியும் காவற்துறையினருடன் காவற்துறை நிலையத்திற்குச் செல்ல அனுமதித்த நிலையில் அவரை அழைத்துச் சென்ற காவற்துறையினர் காவற்துறை நிலையத்திற்குச் செல்லாது தனியார் வீடொன்றிற்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுத்திருந்தன.

இதுதொடர்பான தகவல்களை வெளியிடுமிடத்து கணவரைச் சுட்டுக் கொல்லப்போவதாக பத்மாவதியைக் காவற்துறையினர் மூவர் எச்சரித்து இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் வீடு திரும்பிய இந்தப் பெண் தனக்குத் தானே எண்ணை ஊற்றி தீமூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

கடுமையான காயங்களுடன் க~ரூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பத்மாவதி சிகிச்சை பலனளிக்காது நேற்று மாலை உயிரிழந்தார். உயிரிழப்பதற்குச் சற்று முன் மனித உரிமைவாதியும் பெண்ணிலைவாதியுமான ஒருவரிடம் தனது இறுதி வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
அந்த வாக்கு மூலத்தில் முக்கிய விடயங்கள் உள்ளடங்கி இருப்பதாக தெரிவித்துள்ள பெண்ணிலைவாதி அதன் சிறு பகுதியை வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவரை காட்டுவதாகக் கூறி தன்னையும் தனது தாயாரையும் காவற்துறையினர் அழைத்துச் சென்றதாகவும் எனினும் காவற்துறை நிலையத்திற்கு அழைத்துச் செல்லாது தனியான கம்பவுண்ட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியதுடன் அங்கு தனது கணவரைக் காட்டவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை இந்தப் பெண் வயிற்றுவலிகாரணமாகவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக இன்று அவசர அவசரமாக பெண்ணின் சடலத்தை காவற்துறையினர் தகனம் செய்துள்ளனர்.

இது குறித்து இந்தியாவின் மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் பெண்ணுரிமை அமைப்புக்கள் கடுமையான விசனங்களை வெளியிட்டுள்ளனர்.