நோர்வே ஈழத்தமிழர் அவையின் நிலைப்பாட்டிற்கு வெற்றி

Home » homepage » நோர்வே ஈழத்தமிழர் அவையின் நிலைப்பாட்டிற்கு வெற்றி

நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான தேர்தலில், வட்டுகோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் உருவாக்கம் பெற்ற தனித்தமிழீழக் கொள்கையினை சுமந்து செல்லக் கூடிய வேட்பாளர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்கிற நோர்வே ஈழத் தமிழர் அவையின் நிலைப்பாட்டினை மதித்து நோர்வே வாழ் தமிழ் மக்கள் வாக்கிட்டமையைக் கண்டு நோர்வே ஈழத்தமிழர் அவை பெருமிதம் கொள்வதோடு நோர்வே வாழ் தமிழ் மக்களின் பெருமளவிலான பங்களிப்பினை ஈழத்தமிழர் அவை பாராட்டுகிறது.

அனைத்துவிதமான ஜனநாயக கட்டமைப்புகளையும் இரு கரம் கூப்பி வரவேற்கிறோம் என்று ஏற்கனவே தெரிவித்திருந்த நோர்வே ஈழத்தமிழர் அவை, அதற்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் முழு உரிமையும் மக்களுக்கே உரியதென்பதையும் சுட்டிக் காட்டி, தேசியக் கொள்கையில் உறுதியானவரைத் தெரிவு செய்யுமாறும் உரிமையுடன் வேண்டுகோள் விடுத்திருந்தமை இங்கு நினைவு கூரத்தக்கது.

மக்களிடம் வைத்த வேண்டுகோள் இன்று வெற்றி பெற்றுள்ளது என்பது எம் அரசியல் நிலைப்பாட்டிற்கு கிடைத்த வெற்றியாகவே நோர்வே ஈழத்தமிழர் அவை கருதுகிறது. தனித்தமிழீழக் கொள்கையில் உறுதியாகவும் மிகுந்த அர்ப்பணிப்போடும் செயலாற்றும் பிரதிநிதிகளை நாடுகடந்த தமிழீழ அரசில் பங்குபெற வைத்ததன் மூலம் எம் இனத்தின் ஒற்றுமையையும் எம் கொள்கையின் திடத்தன்மையும் தமிழ் மக்கள் உறுதிபடுத்தியுள்ளனர் என்பதை நோர்வே ஈழத்தமிழர் அவை உணர்கிறது..

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் முதன்முதல் தோன்றிய ஜனநாயக அமைப்பு என்ற வகையில், நாடுகடந்த தமிழீழ அரசின் வரவை எண்ணி நோர்வே ஈழத்தமிழர் அவை மகிழ்கிறது.

அப்பெரும் மகிழ்வோடு, நோர்வேயில் ஒற்றுமையுடனும் பெரும் ஆற்றலுடனும் செயல்பட நாடுகடந்த அரசாங்க நோர்வே பிரதிநிதிகளுக்கு இவ்வேளையில் நோர்வே ஈழத்தமிழர் அவை அழைப்புவிடுக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
நோர்வே ஈழத்தமிழர் அவை, நோர்வே


%d bloggers like this: