ஒலி-ஒளி

சனல் 4, பி.பி.சி தொலைக்காட்சி அறிவிப்பாளர் இலங்கை குறித்து கூட்டம்

கடந்த ஆண்டு நிறைவுக்கு வந்த போரில் 30,000 தமிழ்ப் பொதுமக்கள் இறந்தனர் என்று சர்வதேச நெருக்கடி குழு கூறுகிறது. ஆனால் இலங்கையோ அரச படைகள், மற்றும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை வெளிப்படுத்துவதற்கு உலகுக்கு விதித்துள்ள தடையால் அங்கு ஊடகச் சுதந்திரம் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த ஆண்டு நடந்த போரின் அட்டூழியங்கள் குறித்த செய்திகளைச் சேகரிக்க தமக்குத் தடைவிதிக்கப்பட்டதாக சனல் 4 ஊடகச் செய்தியாளர் ஜொனாதன் மில்லர் தெரிவித்தார். தமக்கும், பிறருக்கும் இலங்கை செல்வதற்கான வீசா இன்னமும் தரப்படாமல் மறுக்கப்படுவதாகக் கூறிய அவர், தமது செய்திகள் தவறானவை என்று பிரச்சாரம் செய்வதிலும் அரசு கவனமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களின் மோசமான நிலமைகளையும் விவரித்துள்ளார்:

“கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கையில் 15 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு 29 ஊடகவியலாளர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டனர். பிறரைக் கடத்தி, அடித்து சித்திரவதை செய்கிறார்கள்…தங்கள் அரண்களையும் தாண்டி நிமிர்ந்து நிற்கக்கூடிய தைரியமுள்ள சிலர் மட்டுமே உள்ளனர்” என்றார் அவர். ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தலான நிலமையுள்ள நாடு இலங்கை என்று சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை ஆய்வாளர் யோலந்தா போஸ்டர் கூறியுள்ளார்.

ஆனால் இங்கிலாந்திலுள்ள இலங்கையர்களின் சிங்களச் சங்கத்தின் தலைவரான டக்ளஸ் விக்கிரமரட்ண, இக்கருத்தை ஏற்காமல் முரணாகக் கூறுகிறார். இலங்கை அரசாங்கத்தை குற்றம் கூறுவதற்குக்கூட பயமற்ற ஒரு ஆரோக்கியமான ஊடகமுள்ள நாடு இலங்கை என்கிறார் அவர். சர்வதேச ஊடகங்களில் செய்தி ஆய்வுகள் இலங்கையின் மீள்கட்டுமானத்துக்குச் சேதமாக அமையும் என அவர் எச்சரித்துள்ளதோடு, மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசுக்கு விசாரிக்கும் திறனுள்ளது. எனவே இறைமையுள்ள ஒரு நாட்டுக்கு பிற தலையீடுகள் அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.