செய்திகள்

பாலகுமார் உயிருடன் உள்ளாரா?

தமிழீழ விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் க.வே.பாலகுமார் அவர்கள் தனது மகனுடன் படையினரிடம் சரணடைந்ததை நிரூபிக்கப்படக் கூடிய புகைப்பட ஆதாரம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதிலிருந்து பாலகுமார் அவர்கள் உயிருடன் உள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகர அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் 11,686 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 737 போ் தீவிரமாக செயற்பட்ட போராளிகள் புலன் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களான க.வே.பாலகுமார் மற்றும் யோகரட்ணம் யோகி ஆகியோர் புனர்வாழ்வு அமைச்சு வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெறவில்லை எனவும், அவர்களின் மனைவியர் விதவைகளுக்கான நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க தகுதியுடையர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த புலிகளின் இரு சிரேஷ்ட தலைவர்கள் இருவரும் போரின்போது கொல்லப்பட்டதாக அமைச்சர் அவர்கள் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.

ஆனால் இப் புகைப்படத்தின் மூலம் க.வே.பாலகுமார் அவர்கள் தனது மகனுடன் கடந்த வருடம் மே மாதம் 17 ம் திகதி படையினரிடம் சரணடைந்தது நிரூபணமாகியுள்ளது தெளிவாகின்றது. அத்துடன் அமைச்சரின் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்பதும் வெளிப்படையாக அறியவந்துள்ளது.

இப்புகைப்படத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் பாலகுமார் அவர்கள், வலது முழங்கையில் காயத்துடனும் மகனுடன் இராணுவ நடமாட்டங்கள் காணப்படும் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகின்றதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.