கட்டுரைகள்

பிழையாக விளங்கிக்கொள்ளப்பட்ட ராஜதந்திரமும் தேசியக்கொடியும் – ஜனகன்

நாங்கள் மிகவும் ஆழமாகவும் அவசரமாகவும் ராஜதந்திரம் என்ற சொற்தொடரை பிழையாக விளங்கிக்கொண்டதற்கு ஊடாகவே நமது தேசியக்கொடியின் பாவனையையும் மிகமிக பிழையாக விளங்கிக்கொண்டுள்ளோம். இந்த ராஜதந்திரம்என்ற சொல்லும் உச்சரிப்புகளும் 2009 மேமாதம் 18ம் திகதியின் பின்னரே ஒரு அலைபோல பரவலாக ஒரு மந்திரம்போல உச்சரிக்கப்பட்டும், உபதேசிக்கப்படுவதும் ஆகும்.

2009 மேமாதத்துடன் முழுமையாக முழுநிலமும் சிங்களத்திடம் வீழ்ந்துபட்டுப்போகவும், தேசியவிடுதலைப்போராட்டத்தின் முக்கிய கட்டமைப்புகள் சிதைவுற்றுப் போகவும் ஏதோ ஒரு காரணத்தை தேடி அலைந்த நாம் இறுதியில் கண்டெடுத்த ஒரே முடிவாக ‘ராஜதந்திரத்தில் பிழை விட்டதால்தான் இவ்வளவு அழிவும் வந்ததென’ முடிவுக்கு வந்து எம்மையும் ராஜதந்திரிகளாக நினைக்கத் தோன்றி, அதன்படியே நடக்கவும்,கதைக்கவும்,கும்பிடவும்,குனியவும் தலைப்பட்டுவிட்டோம்.

உலகஒழுங்குமுழுவதும் தத்தமது தேசநலன்களையும்,அதன் பலாபலன்கள் மூலமான தமது சுயஅரசியல் எதிர்கால நலன்களுக்குள்ளாகவும்தான் நகர்ந்துகொண்டிருக்கிறது.இத்தகைய சுயநலஅரசியலுக்கு அழகாக ராஜதந்திரம் என்றும் அரசியல்மாண்புகள் என்றும் பெயரிட்டு அதற்குள்ளாகவே தொடர்ந்தும் தமது தேசநலன்களை காத்துவருகின்றன.2009 மேமாதம் 18ற்கு பின்னர், ஏதோ ஒருவிதத்தில் நாம் ஒட்டுமொத்தமாக முடிவும் எடுத்துவிட்டோம், ‘ராஜதந்திர’ தொழில்நுட்ப கோளாறு காரணமாகத்தான் எமது விடுதலைப்போராட்டம் மிக மோசமான பின்னடைவையும்,பொதுமக்களின் பேரழிவையும் சந்தித்ததென. ராஜதந்திர நெளிவு சுழிவுகளுக்குள் பாவிக்கும் உச்சரிப்புகளிலோ,கதையாடல்களிலோ நாம் விட்ட எழுத்துப்பிழைகளால்தான் வல்லாதிக்கமும்,மற்ற ஆதிக்க சக்திகளும் இணைந்து எம்மை அழித்தார்கள் என்ற முடிவுக்கு இந்த பதினேழுமாதங்களில் வந்துவிட்டிருக்கிறோம்.

எம்மை அழிப்பதற்கு குண்டுகளை கொட்டிக்கொடுத்தவர்களிலும்,வானத்தில் இருந்து கூர்ந்து பார்த்து செய்மதித்தகவல்களை அள்ளிக்கொடுத்தவர்களிலும், குஞ்சுகள்,முதியோர்,பெண்கள் என்று கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட பொழுதிலும் கண்பொத்தி நின்ற நீதிதேவன் வேடம்போடும் ‘வீட்டோ’ அதிகார நாடுகளிலும் எங்களுக்கு எள்ளளவும் கோபமோ,குறைகளோ இல்லை. எல்லாப்பிழையும் கோபங்களும்,ஆய்வுகளும் எம்மவர் தவறவிட்டதாக நாம் கருதும் ராஜதந்திரப்
பிழைகளில்தான்.ஆகையால் பலம்இருக்கின்றதோ இல்லையோ,பணியவைக்கும் வலு இருக்கின்றதோ இல்லையோ,’ராஜதந்திர’ உடைஉடுத்து கைகுலுக்கி பேச்சுக்களில் ஈடுபட்டால்,இன்னும் எம்மக்களின் ரத்தம் காயாத வாயுடன் வலம் வரும்நாடுகளை ராஜதந்திரவலைக்குள் வீழ்த்திவிடலாம் என்ற பெருங்கனவில் உலாவ தலைப்பட்டோம்.அதுபிழையே அல்ல. ஆனால்,ராஜதந்திரம் என்பதன் அர்த்தங்களைப் புரிந்துகொள்வதில்தான் நாம் இன்னமும் தவறாகவே இருக்கின்றோம்.புரிந்துதோ புரியவில்லையோ எமது இனத்தின் பெரும்பகுதியினர் ராஜதந்திரிகளாகிவிட்டோம்.எப்படித்தான் எங்களால் இப்படிமாறிவிடமுடிகிறதோ தெரியவில்லை.உயிரினங்களின் பரிணாமக்கொள்கையைக் கண்டறிந்த ‘சாள்ஸ்டார்வினின் ‘It is not the strongest of the species that survives, nor the most intelligent that survives. It is the one that is the most adaptable to change.

என்ற மூலத்தத்துவத்தை நாம் புரிந்துகொண்டுள்ள முறைபற்றி வானத்திலிருந்து பார்த்து டார்வின் நிச்சயம் சந்தோசப்பட்டுத்தான் இருப்பார்.

இந்த புதிய ராஜதந்திரபிறப்பிற்கு முதல்பலியாக ஆக்கப்பட்டிருப்பது எங்களின் தேசியக்கொடி என்பதுதான் இப்போதைய எல்லா முன்னெடுப்புகளிலும் மண்டபநிகழ்வுகளிலும் அப்படியே தெரிகின்றது. எப்படி ராஜதந்திரம் பிழையாகவும் மோசமாகவும் விளங்கிக்கொள்ளப்பட்டதோ
அதைவிட பலமடங்கு மோசமாக எங்களின் தேசியக்கொடிபற்றி நாம் விளங்கிஉள்ளோம்.தேசியக்கொடி பற்றிய எமது தவறான பார்வை 2009முள்ளிவாய்க்கால்
பொழுதுகளிலேயே வேர்விடத்தொடங்கிவிட்டது.

மாவிலாறு நீரை தடுத்ததால்தான் விடுதலைப்புலிகள்மீது போர் தொடுத்ததாக சிங்களமும் வல்லாதிக்கமும் வரிக்குவரி சொல்லிநிற்க இங்கு நாமோ புலிக்கொடியை புலத்துத்தெருக்களில் பிடிப்பதால்தான் அங்கு கொல்கிறார்கள் என வியாக்கியானம் எமக்கு நாமே சொல்லிநின்றோம்.
சிங்களப்பேய்களுக்கு பாராளுமன்றப் பிரேரணைகள்மூலம் ஆயுதத்தை அள்ளிக்கொடுத்து,இனஅழிப்புக்கு நாள்குறித்துக் கொடுத்த நாடுகள் எங்கள் ஆர்ப்பாட்டங்களையும், உண்ணாவிரதங்களையும்,ஊர்வலங்களையும் கண்டுகொள்ளாததற்கு நாம் தூக்கிய புலிக்கொடிதான் காரணமென புலம்பெயர்தேசத்து நாடுகளின்ஆளும், எதிர் கட்சிகளின் டமில் பிரமுகர்கள் சப்பைகூறி நின்றனர்.

ஆக மொத்தத்தில்முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு விமானக்குண்டுவீச்சோ, சேல் வீச்சுகளோ காரணம் அல்ல.இங்கு புலத்தில் தூக்கிப்பிடிக்கப்பட்ட தேசியகொடிதான் ஒரே காரணமென ஒரு கருத்து ஏதோ வேர்எறியச்செய்யப் பட்டது. எங்களின் தேசியஎழுச்சியின் ஒரே அடையாளமான தேசியக்கொடியை தூக்கி எறிந்துவிட்டு நிற்கிறோம்.

தேசியக்கொடி என்பது ஒரு துணி என்பதும் அதில்உள்ளவை நிறங்கள்,சின்னங்கள் என்பதற்கும் அப்பால் தேசியக்கொடி என்பது எங்கள் இலட்சியத்தினதும், எமது இழந்த தேசத்தை மீட்பதற்குமான ஒரு சக்திமிக்க அடையாளம்;. இந்தஅகண்ட உலகத்தில எங்களுக்கான குறியீடு எமது தேசியக்கொடி.
இப்போது எங்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தேசியக்கொடி வெறுமனே ஆகாயத்தில் இருந்தோ,மாநாட்டு மண்டபங்களிலோ உருவானதுஅல்ல நாற்பதினாயிரம் மாவீரர்களின் அதிஉயர் அர்ப்பணங்களாலும்,தியாகத்தாலும், லட்சக்கணக்கான எமது மக்களின் உயிரிழப்புகளாலுமே உருவானது.

(இன்னும் வரும்)
:இந்த ஆக்கம் இந்தவாரத்து (12.11.2010) ஈழமுரசில் வெளியானது.