நாடு கடந்த தமிழீழ அரசில் கே.பி. குழுவின் பிடி இறுகுவது பெரும் ஆபத்தானது!- சுவிசிலிருந்து கதிரவன்

Home » homepage » நாடு கடந்த தமிழீழ அரசில் கே.பி. குழுவின் பிடி இறுகுவது பெரும் ஆபத்தானது!- சுவிசிலிருந்து கதிரவன்

சிறிலங்கா அரசு தனது புலனாய்வு நடவடிக்கைகளைப் புலம்பெயர் நாடுகள்மீது குவித்து வருகின்றது. இதற்காகப் பல திட்டங்கள் வகுக்கப்பட்டு, புலம்பெயர் தமிழர்கள் மீதான புலனாய்வு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத் தடுப்பு தொடர்பான பேராசிரியராகக் கடமையாற்றும் ரொஹான் குணரட்ன தலைமையில் ஒருங்கிணைந்த புலனாய்வுப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சிங்கள தேசத்தின் புலனாய்வுப் பிரிவு நீண்ட கால அனுபவமும், பலமான இயங்கு சக்தியுமாகப் பரந்து விரிந்துள்ளது. சிறிலங்காவின் இந்தப் புலனாய்வு விரிவாக்கமே விடுதலைப் புலிகளின் கள முனை இழப்பிற்கும் காரணமாக இருந்தது.

ஆரம்ப காலத்தில், விடுதலைப் புலிகளின் முழுக் கவனமும் சிங்கள தேசத்தின் புலனாய்வுப் பிரிவு மீதே குவிந்திருந்தது. அதனால், அவர்கள் பல திறமையான புலனாய்வாளர்களை அழிக்கவும், கள இலங்கையை விட்டுத் தப்பி ஓட வைக்கவும் முடிந்தது. சமாதான காலம் வரை இந்தப் புலனாய்வு யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் கையே ஓங்கியிருந்தது. விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்டத் தலைமைக்குரியவராகக் கணிக்கப்பட்ட கருணாவை வலையில் வீழ்த்தியதுடன் சிங்கள தேசம் விடுதலைப் புலிகளின் புலனாய்வாளர்களைக் குறி வைக்க ஆரம்பித்தது.

விடுதலைப் புலிகளின் உள் விவகாரங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்ட கருணாவின் காட்டிக் கொடுப்புகளால் தமிழீழ விடுதலைப் போரில் முக்கிய பங்கு வகித்த பல நூறு புலனாய்வாளர்கள் கள முனைகளிலும், கள முனைக்கு வெளியிலுமாகத் தேடி அழிக்கப்பட்டார்கள். இது விடுதலைப் புலிகளின் கள முனைப் பலத்தை வெகுவாகச் சீர்குலைத்தது. சிங்கள தேசத்தினால் விலை கொடுத்து வாங்கப்பட்ட கருணாவால், விடுதலைப் புலிகள் மத்தியில் சிங்கள தேசத்திற்கான பல புலனாய்வாளர்களை ஊடுருவ வைக்கவும் முடிந்தது. இறுதிக் கட்டப் போரின் இறுதி நாட்கள் வரை முள்ளிவாய்க்காலில் நின்று களமாடி, உயிர் தப்பிய விடுதலைப் புலிப் போராளிகள் பலர் இவற்றைக் கண்ணீர்க் கடிதங்களாகப் பதிவு செய்திருந்தனர்.

விடுதலைப் புலிகளின் கள முனைத் தோல்விக்கு கருணா உட்பட, பல தமிழர்கள் காரணமாக இருக்கும் வகையில் சிங்கள தேசத்தின் புலனாய்வு நடவடிக்கைகள் வேகம் பெற்றிருந்தது. சிங்கள தேசத்தின் இந்தப் புலனாய்வுப் பலம் முள்ளிவாய்க்காலுடன் ஓய்வுக்கு வந்துவிட்டதாக நினைத்து நாம் ஏமாந்து போய்விட முடியாது. தற்போது, களத்தில் விடுதலைப் புலிகள் இயங்கு சக்தியாக இல்லாத நிலையில் அவர்களது இலக்கு புலம்பெயர் தமிழர்கள் மீதே குவிக்கப்படும் என்பது புலம்பெயர் விடுதலைப் புலிகளின் கணிப்பாக இருந்தது.

இலங்கையில், கட்டுப்பாடற்ற, எல்லைகளற்ற அதிகாரங்கள் கொண்டவர்களாக சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்கள் தமிழர்கள் மீது மிகக் கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விடுதலைப் புலியாக இருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே பலர் வீதிகளில் வைத்தே வேட்டையாடப்பட்டனர். எண்ணற்ற தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர். சித்திரவதைகள் செய்யப்பட்டு கொன்று வீசப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வன்முறைகளுக்குட்படுத்தப்பட்டு, கொன்று புதைக்கப்பட்டார்கள்.

புலம்பெயர் தேசங்களில் சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் இருப்பதனாலும், தனி மனித சுதந்திரத்திற்கு மதிப்புக் கிடைக்கும் வகையில் மனிதாபிமான சிந்தனைகள் மக்கள் மத்தியில் பலம் பெற்றுள்ளது. இந்த நிலையில், சிங்கள தேசத்துப் புலனாய்வாளர்கள் மிரட்டியோ, அச்சுறுத்தியோ தமிழ் மக்களை அடி பணிய வைக்க முடியாது. எனவே, இரண்டகர்கள் துணையோடு தமிழ் மக்களைக் கருவறுக்கும் முயற்சி மட்டுமே சிங்கள புலனாய்வாளர்களுக்குச் சாத்தியமானதாகும். அது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்கள் மீதான தாக்குதல்களை சிங்களப் புலனாய்வாளர்களது தாக்குதல்கள் எப்போதோ ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. நம்ப முடியாத இடங்களிலெல்லாம் இருந்து தமிழீழ மக்களது புலம்பெயர் கட்டமைப்புக்கள் மீது சேறு வீசப்பட்டு வருகின்றது. கே.பி.யை கதாநாயகன் ஆக்கும் சிங்கள தேசத்தின் முயற்சி தோல்வியைத் தழுவியதால், நாடு கடந்த அரசாங்கத்தைப் பிடியில் வைத்துள்ள கே.பி. குழுவினர் மூலமான காய் நகர்த்தல்கள் கச்சிதமாக நடாத்தப்படுகின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசில் கே.பி. குழுவின் பிடி இறுகுவதையும், அதன் மூலம் புலம்பெயர் தமிழர்களது பலம் சிதைக்கப்படக் கூடிய ஆபத்து இருப்பதையும் உணர்ந்து கொண்ட புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களைச் சார்ந்த பலரும், திரு. உருத்திரகுமாரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு நிலமைகளைச் சீர் செய்ய முயன்றனர். திரு. உருத்திரகுமாரன் அவர்கள் நிலைமையின் விபரீதங்களை இறுதிவரை புரிந்து கொள்ள விரும்பாமலேயே விட்டுவிட்டார்.

இந்த நிலையில்தான், சிங்களப் புலனாய்வு நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் திரு. ரொஹான் குணரட்ன ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் பிரிவு ஐரோப்பாவில் மீள இயங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. புலிகளின் ஆயுத மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இயங்குவதற்கு முனைப்பு காட்டி வருகின்றனர்’ என்ற குற்றச்சாட்டுக்களுடன் புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்கள் மீதான தாக்குதலை ஆரம்பித்துள்ளார்.

ஒரு புலனாய்வு அமைப்பு தனது நடவடிக்கைகளையும், அதற்கான தனது செயற்திட்டங்களையும் ஒருபோதும் பகிரங்கப்படுத்துவதில்லை.

“ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் ஆயுதப் போராட்டத்தை நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் xxxxxx என்பவர் முயற்சித்து வருகின்றார். xxxxx மிகவும் ஆபத்தான நபர். கடந்த காலங்களில் தெற்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள், படுகொலைகள் போன்றவற்றை இந்த xxxxx வழிநடத்தியுள்ளார். XXXXXதின் நோக்கங்கள் மற்றும் இலக்குகள் குறித்து இலங்கை அரசாங்கம் விழிப்புடன் செயற்பட வேண்டும். ஐரோப்பாவில் சுதந்திரமாக சுற்றித் திரியும் xxxxxதை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என திரு. ரொஹான் குணரட்ன வெளிப்படையாகவே தெரிவித்துள்ளதில் பெரும் உள் நோக்கம் இருப்பதாகவே உணரப்படுகின்றது.

வெடிகுண்டொன்றைக் கொழுத்திப் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் போட்டுள்ளார். திரு. xxxxxதை மையப்படுத்திக் கொழுத்திப் போட்ட இந்த வெடி குண்டு வெடிக்கும்போது புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பாரிய சேதம் ஏற்பட வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருக்கும் என்பதே சிங்கள தேசத்தின் புலனாய்வு அணுகுமுறைகளைப் புரிந்து கொண்டவர்களது கருத்தாக உள்ளது.

விடுதலைப் புலிகள் விரும்பினாலும், தற்போது ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான சாத்தியம் உடனடியாக ஏற்படப் போவதில்லை. அதற்காக, ஆயுதப் போராட்டத்திற்கான அவசியம் இல்லாமல் போய் விட்டது என்று முடிவு கட்டிவிடவும் முடியாது. முள்ளிவாய்க்கால் தமிழினப் பேரவலத்திற்குப் பின்னர் சிங்கள அரசு மேற்கொண்டுவரும் அத்தனை நடவடிக்கைகளும் இன்னொரு ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாதது என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஆனாலும், அதற்குச் சாத்தியமான முடிவுகளை எடுப்பதற்குத் தமிழீழ மக்களுக்கு இப்போதைக்கு முடியாது என்பது மட்டுமே உண்மை.

இந்த நிலையில் ரொஹான் குணரட்ன விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க முயற்சிக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கும் கருத்தில் உண்மை இல்லாவிட்டாலும், அர்த்தம் எதுவாக இருக்கும் என்பதற்கு அதிகம் ஆராய வேண்டியதில்லை. அதை அனைத்துத் தமிழர்களும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
விடுதலைப் புலிகள் மீது மேற்குலகின் அழுத்தங்களை உருவாக்குவதும், அவர்களது ஒருங்கிணைவைத் தடுப்பது ஒரு நோக்கமாக இருந்தாலும் அவை மட்டுமே அவரது நோக்கமாகக் கருத முடியாது. அதற்கும் மேலாக, ஏற்கனவே கே.பி. குழுவினரின் தாக்குதல் இலக்காக இருக்கும் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்கள் மீது சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவு கருணா பாணியிலான ‘பிளவுபடுத்தி அழித்தல்’ நடைமுறையைச் செயற்படுத்த முனைகின்றது என்றே நம்பப்படுகின்றது.

எங்கள் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் களமாடிப் பலியான மாவீரர்களது உன்னத தினமான மாவீரர் நாளில் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கும் மாவீரர் தின உரை உலகின் கவனத்தை ஈர்க்கும் வல்லமை கொண்டது. தேசியத் தலைவர் அவர்களது வெளிப்படுதல் காலவரையற்றதாக உள்ள நிலையில், கடந்த வருடம் தேசியத் தலைவர் அவர்களது மாவீரர் தின உரைகளின் தெரிவுகளே ஒளிபரப்பப்பட்டது. இந்த வருடத்திலும் தேசியத் தலைவர் அவர்கள் உரை நிகழ்த்துவார் என்ற உத்தரவாதம் இதுவரை கிடைக்காத நிலையில், கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கடந்த வருடம் தளபதி ராம் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்த சிங்களப் புலனாய்வாளா்கள், இந்த வருடம் கே.பி. குழு மூலமாக திரு உருத்திரகுமாரன் அவர்கள் மூலம் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திரு. உருத்திரகுமாரன் அவர்களது உரையை ஜி.ரிவி. மூலம் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டார்கள் என்று சிங்கள தேசமும், முள்ளிவாய்க்காலின் பின்னர் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களை அழிக்கத் துடிக்கும் கே.பி. குழுவுக்கும் அதிக வித்தியாசங்களை உணர முடியவில்லை. களத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தை அழிக்க முடிந்த சிங்கள அரசுக்கு, புலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகளின் பலத்தை நெருங்க முடியவில்லை. விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்காக சிங்கள அரசு எப்படி ஒட்டுக் குழுக்களைக் கையாண்டதோ, அதே அணுகுமுறையில் புலம்பெயர் தமிழர் கட்டமைப்புக்களைச் சிதைப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களுக்கு இது பெரும் சோதனை காலம். சிங்கள தேசம் புலம்பெயர் தமிழர்கள் மீது நடாத்தும் உளவியல் யுத்த நெருப்பில் புடம் போட்ட தங்கமாகத் தகதகக்கப் போகின்றோமா, அல்லது எரிந்து சாம்பலாகப் போகின்றோமா? என்ற முடிவில்தான் தமிழீழத்தின் எதிர்காலமும் தங்கியிருக்கின்றது. விடுதலை வேள்வியில் வித்தாகிப்போன எங்கள் மாவீரர்களின் கனவு நனவாகும் நாட்களின் தொலைவும் நாங்கள் எடுக்கும் முடிவில்தான் தங்கியுள்ளது.

– சுவிசிலிருந்து கதிரவன்


%d bloggers like this: