தமிழீழம்

தமிழ் பெண்கள் மீது வன்முறைகளை தொடரும் சிறீலங்காப்படை

முல்லைத்தீவின் அளம்பிலில் மீள்குடியேறியுள்ள மக்களின் வீடுகளுக்கு செல்லும் ஸ்ரீலங்காப்படையினர் பெண்கள் மீதான வன்முறைகளில் ஈடுபட்டுவருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர கிராமமாக அளம்பில் கிராமம் காணப்படுகின்றது. கடல்தொழிலினை முதன்மைத்தொழிலாக கொண்ட மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றார்கள்.

ஸ்ரீலங்காப்படையினரின் போர் நடவடிக்கையினாலும் கடல்தொழில் செய்யும்போது ஸ்ரீலங்காப்படையினர் மேற்கொண்ட தாக்குதல்களினாலும் துணைவன்மார்களை இழந்த விதவைகளே பெருமளவில் காணப்படுகின்றார்கள். இவ்வாறு கடந்த மாதம் 19ம் 20ம் நாட்களில் அளம்பில் வடக்கு பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களின் வீடுகளில் ஸ்ரீலங்காப்டையினர் புகுந்து சேட்டைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு நேரங்களில் இரண்டு பெண்பிள்ளைகளும் பெற்றோர்களையும்கொண்ட வீடு ஒன்றினுள் புகுந்த இரண்டு ஸ்ரீலங்காப்படையினர் அங்குள்ள இளம்பிள்ளைகள் மீது கொடுபிடியினை மேற்கொண்டுள்ளனர். இதேபோல் அதே பகுதியில் துணைவனை இழந்த மூன்று பெண்களை கொண்ட குடும்பத்தின் வீட்டுக்குள் நுளைந்தும் இவ்வாறான சேட்டைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் படை அதிகாரிகளிடம் முறையிட்டபோது அது விடுதலைப்புலிகள் வந்துள்ளதான சந்தேகத்தில்தான் படையினர் அவ்வாறு ஈடுபட்டார்கள் என்றும், அந்த படைசிப்பாய்களை படைமுகாமில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றிவிட்டதாகவும் அவ் அதிகாரிகள் மக்களுக்கு கருத்தினை வழங்கியுள்ளார்கள்.

வன்னிப்பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள் வாழ்விடங்களில் அண்மைய காலங்களில் இரவு நேரங்களில் சோதனை நடவடிக்கை என்ற பெயரில் வீடுகளுக்குள் நுழையும் ஸ்ரீலங்காப்படையினரும் புலனாய்வாளர்களும் ஆண்கள் இல்லாத பெண்களை கொண்ட வீடுகளில் தகாத முறையில் நடந்துகொள்வதாகவும் இதனை வெளியில் செல்ல அச்ச உணர்வுடனும், சமூகத்துடன் ஒத்துப் போகவேண்டிய நிலையில் தாங்கள் வாழ்ந்துகொண்டிருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

அண்மைய காலங்களில் விசுவமடு றெட்பான பகுதியில் நான்கு ஸ்ரீலங்கா படையினர் இரண்டு குடும்பப் பெண்கள்மீது பாலியல் வல்லுறவு கொண்டமையும், அண்மையில் பூநகரியில் குடும்ப பெண்ணினை ஸ்ரீலங்காப்படையினர் பாலியல் வல்லுறவு கொண்டமையும் வன்னியில் நடைபெறும் நிகழ்வுளை சுட்டிக்காட்டுகின்றன.