குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஐ.நா : அனலை நிதிஸ் ச. குமாரன்

Home » homepage » குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஐ.நா : அனலை நிதிஸ் ச. குமாரன்

அநியாயமாக பல்லாயிரம் உயிர்கள் மண்ணோடு மண்ணாக சிதைந்து போக காரணமாக இருந்தவர்களில் முதன்மையானவர் சிறிலங்கா இராணுவத்தின் 58-ஆவது பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா. இவருடைய நேரடிக் கட்டளைக்கு அமைவாகவே பல பொதுமக்களும், புலிகளின் அரசியல் தலைவர்களும் வெள்ளைக்கொடியுடன்
சரணடைய வந்தபோது மான்களை வேட்டையாடச் சென்ற வேட்டையாளிகள் போன்று ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொலைசெய்யக் காரணமாக இருந்த இந்த சில்வா தற்போது ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றுகிறார். ஐ.நாவின் நம்பகத்தன்மையையே இது எடுத்துக்காட்டுகிறது.

ஐ.நாவின் உறுப்பு நாடுகளாக இருக்கும் 192 நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று. ஐ.நாவின் சட்டயாப்பை ஏற்றுக்கொண்டே இந்த நாடுகள் உறுப்பு நாடுகளாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் பல ஐ.நாவின் விதிமுறைகளை ஏற்று கையொப்பமிட்டிருக்கும் நாடுகளில் ஒன்று சிறிலங்கா. சிறிலங்கா அனைத்து ஐ.நாவின் விதிமுறைகளையும் மீறி பாரிய அளவில் போர் மேற்கொண்டு தனது சொந்த மக்களையே துடிக்கத் துடிக்க கொன்றது சிறிலங்கா இனவெறி அரசு.

புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து தமிழர்களை மீட்கப்போவதாகக் கூறி 40,000-க்கும் அதிகமான பொதுமக்களைக் கொன்றும், மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை சிறைப்பிடித்து கொடுமைப்படுத்தியது. பல்லாயிரம் இளைஞர்கள் மறைவிடங்களில் அடைத்துவைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். அரச சார்பற்ற நிறுவனங்களையோ அல்லது ஐ.நாவின் உதவி அமைப்புக்களையோ தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இவர்களின் நிலையை அறிய அனுமதிக்காமல் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.

பல்லாயிரம் இளைஞர்களுக்கு என்ன ஆனது என்றே தெரியாத ஒரு நிலையை சிறிலங்காவின் அரசு உருவாக்கியுள்ளது. காணாமல் போனதாக கூறப்படும் பல்லாயிரம் அரசியல் கைதிகளைப் பற்றிய எந்தவொரு தகவலும் தம்மிடம் இல்லையென கைவிரிக்கின்றனர் சிறிலங்காவின் இராணுவத்தினர். அப்படியானால் இவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டு விட்டதாகவே கருத வேண்டியுள்ளது என்று அலறுகின்றனர் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்.

இப்படியாக பல மனித நாகரிகமற்ற செயலுக்கு காரணமாக இருந்த நபர்களை கைது செய்து சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டுமென கதறுகின்றனர் உலகத் தமிழ் அமைப்பினர். சிறிலங்கா அரசோ அனைத்து குற்றங்களிளுமிருந்து தப்பிக்க ஒரே வழி ஐ.நாவிடம் போர்க்குற்றம் சுமத்தப்பட்டவர்களை அனுப்பி நல்ல பெயர் பெற்றுவிட வேண்டுமென திட்டத்தை போட்டு செயலிலும் காண்பித்தார் கடந்த வாரம் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட மகிந்த ராஜபக்ச.

அமெரிக்காவை வதிவிடமாகக் கொண்டு பல ஆண்டுகள் தமிழீழ ஆதரவாளர்களின் செயல்களை முடக்க பத்திரிகைத் தர்மத்திற்கே ஒவ்வாத கட்டுரைகளை எழுதி பிழைப்பு நடத்திவந்த பந்துல ஜெயசேகர என்கிற பத்திரிகையாளர் மகிந்தாவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகையாளராக செயற்பட்டுவந்த ஜெயசேகராவுக்கு சிறிலங்கா அரசின் உத்தியோகபூர்வமான ஆங்கிலப் பத்திரிகையான டெய்லி நியூஸ் என்ற பத்திரிகையின் பிரதான ஆசிரியராக நியமனம் கிடைக்கப்பெற்றது.

பின்னர் கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தின் தலைநகரான ரொறன்ரோவில் அமைந்துள்ள சிறிலங்காவின் பிரதித் தூதுவராலயத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டு பின்னர் ஐ.நாவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பதவி உயர்வுபெற்று பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவரை இப்பதவியில் இருந்து சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சினால் திருப்பி அழைக்கப்பட்டார். இவரினால் காலியான பதவிக்கு மகிந்தாவினால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டவர்தான் பாரிய போர்க் குற்றங்களைப் புரிந்த சில்வா.

ஐ.நாவின் பெயருக்கே களங்கம் ஏற்பட்டுவிட்டது

கடந்த காலங்களில் ஈழத்தமிழரின் போராட்டத்தை ஐ.நா.சபை கொச்சைப்படுத்தியே வந்துள்ளது. விடுதலைக்காகப் போராடிய விடுதலைப்புலிகள் நிரந்தர அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவே இருந்தார்கள் என்று அறிக்கைவாயிலாக தெரிவித்திருந்தது. வேடிக்கையென்னவெனில் பல மாணவர்கள் மற்றும் வயது முதிந்தவர்கள் சிறிலங்காவின் வான் படையினரின் குண்டுக்கும் இராணுவத்தினரின் எறிகணை வீச்சுக்கும் பலியான சமயத்தில் வாய் மூடி மௌனியாகவே இருந்தது ஐ.நா. சபை.

சிங்கள இராணுவக் காடையர்கள் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்து தமிழினத்திற்கு சொல்லொணாத் துயரை விளைவித்த வேளையில் எதுவித கண்டனத்தையும் தெரிவிக்காமல் ஐ.நா. சபை இருந்துள்ளது என்பது அவர்களின் கையாலாகத்தனத்தை உறுதிப்படுத்தியது.

உலக அரங்கில் பல சம்பவங்களில் ஐ.நா.சபை தீர்க்கமான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஐ.நாவுக்கு யார் அதிகமாக பணத்தை கொடுக்கின்றார்களோ அவர்களின் கைப்பொம்மையாகவே அது இருந்து வருகின்றது. அதிகப்பணம் கொடுக்கும் நாடுகளின் மக்களுக்கே இவ் அமைப்பின் வேலைத்தளங்களில் வேலைவாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது. இப்படியாக ஐ.நா தோற்றுப்போன ஒரு உலக மாயை அமைப்பாகவே இருந்துகொண்டிருக்கிறது. இருந்தும் இவ்வமைப்பினூடாக பல அனுகூலங்களை அடைகின்றார்கள் சில நாடுகள்.

உலகின் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பாகவே ஐ.நா இருக்கிறது. இந்த அமைப்பில் பேசினாலே போதும் உலக அங்கீகாரத்தைப்பெற என்ற நிலை பரவலாக அனைவராலும் சொல்லப்படுகின்றது. இப்படியாக இருக்கும் அமைப்பினூடாக தான் செய்த மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை மூடி மறைக்கலாம் என்பதே சிறிலங்கா அதிபரின் நோக்கம். இதில் அவர் வெற்றி கண்டுவிட்டார் என்பதும் உண்மையே.

கடந்த வருடம் முடிவடைந்த நான்காம் கட்ட ஈழப்போரின் போது சிறிலங்கா சென்று வன்னியின் மயான பூமியைப் பார்வையிட்டார் ஐ.நாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன். சிறிலங்காவின் மூத்த இராணுவ மற்றும் அரச அதிகாரிகளை மூன் சந்தித்தார் குறிப்பாக ஐ.நாவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் சில்வாவும் மூனைச் சந்தித்து போரில் நடந்த அனுபவங்களை விளக்கியதாக தகவல்.

சிறிலங்காவை விட்டு மூன் வெளியேறியவுடன் சிறிலங்காவில் போர் ஓய்ந்து விட்டதாகவும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டதாகவும் ஒரேயொரு பிரச்சனை மட்டும் தான் சிறிலங்காவில் இருப்பதாகவும் அதாவது யுத்தத்தினால் இடம்பெயர்ந்து முகாங்களில் இருக்கும் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார் பான் கீ மூன்.

சிறிலங்கா மனித உரிமைகள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கென மூன்று நபர்கள் அடங்கிய நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதாக அறிவித்தார் மூன். பல எதிர்ப்புக்களின் மத்தியில் இக்குழு தனது விசாரணையை வெகுசீக்கிரத்திலேயே முடிக்கவிருக்கும் தருணத்தில் சில தினங்களுக்கு முன்னர் திடீர் பல்டி அடித்தார் மூன். இவ் ஆலோசனைக் குழு எந்தவொரு காரணத்திலும் சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டாது என்று கூறி தனது சிங்கள-பௌத்த விசுவாசத்தை காட்டினார் மூன். தென் கொரியாவின் வெளிவிவகார அமைச்சராக இருந்த சமயத்தில் சிறிலங்கா சென்று சிங்கள அரச தலைவர்களுடன் நட்பை வளர்த்து பல களியாட்டங்களில் கலந்துகொண்டவர் தான் இந்த மூன். ஆகவே இவரிடத்திலிருந்து தமிழர்கள் நியாயத்தை எதிர்பார்க்க முடியாதுதான்.

தனிப்பட்ட காரணங்களுக்காக ஐ.நாவின் பெயரையே மாசுபடுத்துகின்றார்கள் அதன் தலைவர்கள் என்பது கவலைக்கிடமான விடயமே. நடுநிலையாக இருந்து உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அரணாக இருப்பதுடன் தேவைப்படும் பட்சத்தில் உலக நாடுகளின் அனுசரணையுடன் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட படைகளை அனுப்பி அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் மேலும் பல பணிகளைச் செய்ய உருவாக்கப்பட்டதுதான் இந்த அமைப்பு. பாவம் திசை தெரியாது பயணத்தை மேற்கொள்கிறது ஐ.நா. இவ்வமைப்பின் புனிதமான செயல்களை முடக்குகின்றனர் பல சக்திகள்.

போர்க்குற்றவாளிகளை விசாரித்து தண்டனை கொடுக்குமா ஐ.நா?

ஐ.நா.சபையினால் வரையறுக்கப்பட்ட நான்காவது ஜெனீவா சட்ட வரைமுறை 12 ஆகஸ்ட் 1949 இயற்றப்பட்டது. எந்த ஆயுதக்குழுவும் ஆயுதத்தை மௌனிக்கச் செய்தால் அவர்களை மதித்து எவ்வித கெடுதலும் செய்யக்கூடாதென்று கூறுகின்றது இச்சட்ட வரைமுறையின் மூன்றாவது சரத்து. கடந்த வருடம் விடுதலை புலிகள் தமது ஆயுதங்களை மௌனிக்கச் செய்த பின்னரும் சிறிலங்கா இராணுவம் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டு பல்லாயிரம் தமிழரை கொன்று குவித்தார்கள். வெள்ளைக்கொடியுடன் சரணடையவந்த விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்களான நடேசன் மற்றும் புலித்தேவனை அவர்களின் குடும்பங்களின் முன்னே சுட்டுக் கொன்று இந்த உலக சட்ட சரத்தையே மீறினார்கள். இப்படியாக ஐ.நாவின் சட்ட விதிமுறைகளை மீறி ஒரு விடுதலைப் போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் முடித்ததாக வெற்றிக்களியாட்டம் ஆடினார்கள் சிங்கள ஆதிக்க சக்திகள். மூனும் அதனை ஏற்றுக்கொண்டு சிறிலங்காவுடன் ராஜதந்திர நட்புறவை பேணுகின்றார்.

ஐ.நாவின் விதிமுறைகளையே மீறிய குற்றத்திற்காக அதன் உறுப்பு நாட்டை தண்டிக்க ஐ.நாவுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. தேவைப்பட்டால் சிறிலங்காவுக்கு உலக அமைதிப்படையையே அனுப்பி கடந்த வருடம் இடம்பெற்ற இனச் சுத்திகரிப்பை நிறுத்த அனைத்து உரிமையும் ஐ.நாவுக்கு இருந்தும் எதனையும் செய்யாமல் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கியது ஐ.நா. இந்தியாவின் விஜய் நம்பியார் போன்ற தமிழின விரோதிகள் மூனுக்கு அருகில் இருந்து ஆலோசனை வழங்க மூனும் தன்னாலான அனைத்து வழியிலும் சிங்கள ஆட்சியாளர்களின் இராணுவப் படையெடுப்புக்கு ஆதரவை அளித்தார்.

பாதுகாப்பு வலயமென்று அறிவிக்கப்பட்டு மக்களை அங்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் பல பொதுமக்கள் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார்கள். இப்படியாக உலகின் சட்டத்தையே மீறி தமிழ் மக்களை கொன்றார்கள் அத்துடன் லட்சக்கணக்கானவர்களை முள்வேலிச் சிறைக்குள் அடைத்து பல இன்னல்களை விளைவித்தார்கள். இவைகள் அனைத்துமே மனித உரிமை மீறல்களே.

எப்படி இராண்டாம் உலகப்போரில் ஹிட்லர் யூத இனமக்களை கொன்று மனித குலமே கண்டிராத பேரவலத்தை உண்டுபண்ணினார்களோ அதைப்போலவே சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது அடக்கு முறை போரை திணித்து பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் மனிதப் பேரவலத்தை உண்டுபண்ணியது. அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் சிறிலங்கா அரச தலைமையும் இராணுவத்தின் முக்கிய தளபதிகளுமே பொறுப்பு.

அரச பயங்கரவாதிகளை இனம் கண்டு உலக நீதிமன்றில் நிறுத்தி தண்டனை வாங்கித்தர ஐ.நாவினால் முடியும். ஐ.நா நேரடியாகவே நடந்த சம்பவங்களை விசாரித்து போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுத்தர முடியும். பலவீனமான ஐ.நாவினால் இதனை பெற்றுத்தர முடியுமா என்பதுதான் பலரிடத்திலுள்ள கேள்வி. முதலில் ஐ.நா.சபையின் மூத்த தலைவர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை புறம்தள்ளிவிட்டு உலகின் வறுமையொழிப்பு, அமைதி மற்றும் பாதுகாப்புத்தான் முக்கியம் என்ற கொள்கையுடன் நடுநிலையுடன் செயலில் இறங்கினால் நிச்சயம் சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற முடியும்.

ஒரு நாட்டுக்கு தூதுவரையோ அல்லது பிரதித் தூதுவரையோ அனுப்பும்போது அப்பதவிக்கான அத்தாட்சிப் பத்திரத்தை அந்நாட்டு அரசாங்கத்துடன் சமர்ப்பித்து அவ் அரசின் அனுமதியைப் பெற்ற பின்னரேதான் அந்தப் பதவிக்கானவர் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள முடியும். இதுவே இராஜதந்திர நடைமுறை. சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஐ.நா.சபைக்கு ஒருவரை அனுப்பும்போதும் ஐக்கிய நாடுகள் சபை அவரை நிராகரிக்கலாம். இதனை ஐ.நா செய்யாமல் படுபயங்கரவாத செயலில் ஈடுபட்ட ஒரு போர்க்குற்றவாளியை சபைக்குள்ளே அனுமதித்துள்ளதானது ஐ.நாவின் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கியுள்ளது.

சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இருந்து வரும் செய்திகளின்படி சில்வாவை இப்பதவிக்கு அமர்த்தியதன் மூலமாக சிறிலங்கா மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்க்குற்றவியல் குற்றத்தை இல்லாது செய்வது குறிப்பாக போர்க்குற்றம் சாட்டப்பட்டவர் மூலமாகவே இவற்றை உலக அரங்கிலேயே கூறி உலகை நம்ப வைக்கலாம் என்பதுதான் மகிந்தாவின் திட்டம். சில மேற்கத்தைய நாடுகளுடன் இருக்கும் முறுகல் நிலையை சமாளிக்க சில்வாவினால்தான் முடியும் என்கிற அபிப்பிராயம் கொழும்பின் அரசியல் வட்டாரத்தில் நிலவுகின்றது.

சில மேற்கத்தைய நாடுகள் ஐ.நா.சபை மீது அழுத்தங்களை பிரயோகித்து எப்படியேனும் கடந்த வருடம் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைப் பற்றிய விசாரணை செய்யவேண்டும் என்கிற நிலையில் இருப்பதனால், ஐநாவை சமாதானப்படுத்த சில்வாவினால்தான் முடியும் என்கிற நோக்கு சிறிலங்கா அரசியல் வட்டாரத்தில் நிலவுகின்றது. இப்படியாக பல காரணங்களை வைத்தே மகிந்தா இராஜதந்திர செயலில் ஈடுபட்டுள்ளார். அவரின் திட்டம் நினைத்தாற்போலவே வெற்றியும் அளித்துள்ளதென்பதை மறுப்பதற்கு இல்லை.

பெண்களுக்கு சமவுரிமை கொள்கையை பிரகடனப்படுத்திய ஆண்டு நிறைவு நிகழ்வின் போது சமீபத்தில் சில்வா உரையாற்றினார். ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன், அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் உட்பட்டவர்கள் உரையாற்றிய இந்நிகழ்வில் சில்வா உரையாற்றியதானது சிறிலங்காவின் செல்வாக்கு எந்தவகையில் ஐநாவில் உள்ளது என்பதை உணரக்கூடியதாகவுள்ளது. ஐ.நா.சபையின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன அன்றைய நிகழ்வில் பங்கேற்கவில்லை. இந்தநிலையிலேயே சில்வா உரையை நிகழ்த்தினார்.

தனதுரையில் சில்வா கூறியதாவது: “சிறிலங்காவில் யுத்தம் நிறைவடைந்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம் சரணடைந்த முன்னாள் புலிப்படையினரை புனர்வாழ்வளிப்பு மற்றும் சீர்த்திருத்தும் பணிகளில் ஈடுபடுத்துகின்றது. வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களில் இருந்த சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் 351 பெண் போராளிகளும் அண்மையில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வைத்து புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.”

அவர் மேலும் தெரிவித்ததாவது: “கடந்த காலங்களில் சிறுவர்கள் பலவந்தமாக ஆயுதத்தை ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் சிறிலங்கா அரசாங்கம் அவர்களை முறையாக கையாண்டு அவர்களின் தன்மைகளை மாற்றியமைத்து பெற்றோர்களிடம் ஒப்படைத்து வருகின்றது. அவர்களுக்கு வாழ்வாதார பயிற்சிகள், பௌதீக சமூகவியல் பாடங்கள் போன்றவற்றுடன் நீதியும் பயிற்றுவிக்கப்படுகின்றது.” இப்படியாக தனதுரையை நிகழ்த்தி தாம் செய்த குற்றத்தை முழுப் பூசனிக்காயை ஒரு கோப்பை சோற்றில் மூடி மறைக்க முயலுவதென்ற பழமொழிக்கேற்ப தானும் மூடி மறைக்க முயல்கின்றார் சில்வா.

உலக நாடுகளின் கொள்ளைக்காரர்களுக்கும் அரச பயங்கரவாதிகளுக்கும் புகலிடம் கொடுக்கப்படும் இடமாகவே ஐ.நா.சபை இருக்கிறது என்பதை அறிந்து அனைத்து மக்களும் கவலைப்பட வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை இன்று உள்ளது.

சில்வா போன்ற இராணுவ அதிகாரிகளும் அரச தலைவர்களும் செய்த குற்றங்களை மூடிமறைக்க ஐ.நா.சபை போன்ற உலக அமைப்பை கருவியாகப் பாவித்து நன்மதிப்பை எப்படியேனும் பெறுவதனூடாக உலக நாடுகளில் இருக்கும் அவப்பெயரை இல்லாதொழிக்கலாம் என்று கருதுகின்றது சிறிலங்கா அரசு.

தனது உறுப்பு நாடொன்று குற்றம் செய்துள்ளது என்பதை பல சாட்சிகள் மூலமாக தெரிந்தும் கொலைகாரர்களுடன் கைகோர்த்து நிற்கின்றது ஐ.நா. இவ் உலக அமைப்பின் மீது நிச்சயம் தமிழர் மட்டுமல்ல மனித உரிமைகளுக்காக போராடும் பல்லின மக்களும் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்பது மட்டும் திண்ணம்.

இதனைப் புரிந்தாவது செயற்படுமா ஜ.நா என்பதே பலரிடத்தில் எழும் வினா.

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்களை கட்டுரையாளர் வரவேற்கின்றார். தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com


%d bloggers like this: