நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது.- பாகம்-2

Home » homepage » நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது.- பாகம்-2

சென்ற வாரம் வரவேண்டிய எனது கதையின் இரண்டாம் பாகம் சில நாட்களைக் கடந்தே இப்பொழுது வருகின்றது. அதற்கான காரணம் எம்மக்களுக்குத் தெரியும். என்றாலும் சொல்ல வேண்டிய கடமை எனக்குண்டு. தமிழர்களின் சிறப்புக்கும், வணக்கத்துக்குமுரிய நாளான நவம்பர் 27இல் என்னோடு களமாடி வீழ்ந்த தோழிகளனதும், தோழர்களனதும் நினைவுகளையும், எமது தேசத்திற்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்த எமது மாவீரத் தெய்வங்களின் நினைவைத் தாங்கி, வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளினால் இத்தொடரினை உரிய நேரத்திற்குத் தர முடியவில்லை.

எனது குடும்பம் வறுமையான குடும்பமும் இல்லை. பணக்காரக் குடும்பமும் இல்லை. நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தது. வன்னி மண்ணில் சிங்களவனின் ஆக்கிரமிப்புக்கு முன்னர் எந்தவித துன்பமுமின்றி மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தோம். இப்போது தான் ஊரைவிட்டு இடம்பெயர்க்கப்பட்டு தடுப்பு முகாமுக்கு வந்ததன் பின்தான் மிகவும் வறுமையாக வாழ்கின்றோம்.

எவ்வளவு கஸ்ரப்பட்டு, துன்பப்பட்டு வாழ்ந்தாலும் எமது தாயக இலட்சியத்தில் இன்னும் மிக உறுதியாகவே உள்ளேன். நான் மட்டுமல்ல மக்களும் தான். தாயக விடுதலை என்ற இலட்சியம் நீறுபூத்த நெருப்பாகக் கிடக்கிறது. காற்று பலமாக வீசும்போது அது பற்றியெரியக் காத்திருக்கிறது என்பதனை மக்களின் சொற்களிலும் செயல்களிலும் இருந்து புரிந்துகொள்ளக் கூடியதாகவிருந்தது. ‘நாங்கள் எப்படிச் சிங்களவனிடம் தோற்றோம் என்ற தேடல் அவர்களிடம். அவனை ஏன் வன்னிக்குள் இயக்கம் வரவிட்டது.

ஏன் பெரிய எதிர்த்தாக்குதல் எதுவும் செய்யவில்லை. என்ன நடந்தது’ என்றெல்லாம் மக்கள் கதைக்கும் போது, நான் தலைமை எடுத்த முயற்சிகள் தெரிந்தும் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றிருக்கிறேன். சிங்களவனின் கட்டுப்பாட்டிற்குள் நின்று கொண்டு, சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டு இருக்கின்ற போதும், இயக்கம் வந்து தங்களின் நிலையை மாற்றும் என்ற நம்பிக்கையை அவர்கள் கைவிடவில்லை என்பது அவர்களின் புலம்பல்கள் மூலம் தெரிந்தது.

எனது அப்பா இப்போது நிரந்தரமாக எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார். எனது சகோதரர்கள் எவ்வளவோ சித்திரவதைகளுக்கும், விசாரணைகளுக்கும் மத்தியில் தடுப்புமுகாமுக்குள்ளேயே உள்ளார்கள்.

இனி……….
அன்று நடந்த நடவடிக்கை அணியில் நானும் ஒருத்தி. இங்கிருக்கும் சூழலில் எதுவும் நடக்கலாம். ஆனால் நடந்த சம்பவங்கள், தலைமை எடுத்த முயற்சிகள் போராளிகளின் வீரம், தற்கொடை என்பன யாருக்கும் தெரியாமல் புதைந்துபோய்விடக் கூடாது என்பதற்காகவே எழுதுகின்றேன்.

வகுக்கப்பட்ட தாக்குதல் திட்டத்தில் இரண்டாவது திட்டமே எங்கள் அணிக்கானதாகவிருந்தது. அதாவது அழித்தொழிப்பு நடவடிக்கை. ஊடறுப்பு அணிகள் விசுவமடுவிற்குள் நுழைந்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அந்த அணிகளுடன் இணைந்தே வந்த நாங்களும் தாக்குதலுக்கு முகம் கொடுத்தபடி, எங்களுக்கான இலக்கை நோக்கி புறப்படும் போதே, எமது அணியிலிருந்த ஒருவர் வீரச்சாவடைய நேரிட்டது. எதிரியின் மூர்க்;கத்தனமான தாக்குதலில் ஒருவர் காயப்பட்டார். பெண்போராளியொருவரின் தலைமுடி எதிரியின் முட்கம்பி வேலியில் சிக்குண்டதால் அவரால் அதிலிருந்து மீள முடியவில்லை. சண்டை மிக உக்கிரமாக நடந்துகொண்டிருந்தது. தொடர்ந்தும் நின்று சண்டை பிடிச்சுக் கொண்டிருந்தால் ஆட்களை இழந்து, தரப்பட்ட இலக்கைச் சென்றடைய முடியாது என்பதால், அதிலிருந்து அணியை ஒருங்கிணைத்து நகர முற்பட்டபோது ஒருவரைக் காணவில்லை.

இருப்பவர்களைக் மீளமைத்துக் கொண்டு நகரமுற்பட்ட போது, காயப்பட்டிருந்தவரை தளத்திற்கு திருப்பி அனுப்பிய போது அவர் திரும்பிப் போக மறுத்து ‘தலைமை என்னை நம்பித் தந்த பொறுப்பைச் செய்யாமல் திரும்பிப் போகமாட்டேன்’ என்று உறுதியாக மறுத்துவிட்டார். அவரையும் சேர்த்துக் கொண்டு, நாங்கள் தொடர்ந்தும் நகர்வில் ஈடுபட்டோம். இலக்கைச் சென்றடையும் வரை எதிரியுடன் முட்டுப்படுவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும் என்பது எமக்கு பணிக்கப்பட்டிருந்தது. நாம் ஒரு குறிப்பிட்ட தூரம் வந்ததும் இரு அணிகளாகப் பிரிந்து சென்றே நகர்வுகளை மேற்கொண்டோம். இடைவழியில் அவனுடன்(எதிரி) சண்டை ஏற்படாவண்ணம் செல்வதற்காக கூடியளவு நகர்வை இரவிலேயே செய்தோம். பகற்பொழுதில் எதிரியின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதும், வரைபடத்தைப் பார்த்து பாதையை பார்க்கும் ஒழுங்குகளையும் செய்தபடியே அடுத்து வரும் இரவு நகர்வுக்காக ஓய்வெடுப்பதுமாக எமது பயணம் தொடர்ந்தது.

எமது பயணம் என்பது மிகவும் கடினமானதொன்றாகவே இருந்தது. எதிரி தான் ஆக்கிரமித்த பகுதிகளிளெல்லாம் சென்றிகளைப் போட்டும், காலை மாலை என எல்லா நேரமும் கிளியறிங் செய்த படியும் இருந்ததோடு, ஆங்காங்கே கட்டவுட்டும் போட்டு வைத்திருந்தான். சகல பொசிசன்களிலும் ‘நைட்விசன்’ பொருத்தி வைச்சுப் பார்த்துக் கொண்டிருந்தான். அதைவிட எங்கட தலைகளுக்கு மேலே சற்றலைட் வேவு. இதுகளையெல்லாம் கவனிச்சுக் கொண்டு, மண்ணைத் தூவி உள்நுழைந்து நகரவேண்டும். நாள்கள் நகர, நாம் கொண்டு வந்த உணவுப் பொருட்களும் முடியத்தொடங்கியது. எனவே ஆங்காங்கு கிடைத்த காய்கள், பழங்கள், மக்கள் வீடுகளில் விட்டுச் சென்றவை என்பனவற்றைத் தேடியெடுத்து எமது வயிற்றை நிரப்பினோம்.

எமது அணி நகர்ந்து கொண்டிருக்கும் போது, எமக்கும் மெயினுக்குமான தொடர்பாக நவீன கருவிகளே இருந்தது. நாங்கள் அருவியைக் கடந்து நகர்ந்து சென்ற போது எமது தொடர்புக்கருவி தொலைந்துவிட்டது. எனவே எமக்கும் கட்டளைப்பீடத்துக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. (நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து வோக்கியில் தொடர்பு எடுக்க ஏலாது. ஏனென்றால் வோக்கி அலையை வைச்சு அவன் எங்கட இடத்தைக் கண்டிடுவான்.) எனினும் நாம் தொடர்ந்து எமது இலக்கை நோக்கி நகர்ந்த வண்ணமேயிருந்தோம். எதிர்பாராதவிதமாக எமது மற்றைய அணியைச் சந்தித்தோம்; அதன் பின்னர் இரு அணிகளும் இணைந்தே எமக்கான இலக்கின் இடத்திற்குச் செல்வதற்கு முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை.

குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றால், அங்கு எம்மவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் மக்களின் வீடுகளிலிருந்து கிடைத்த பொருட்களைக் கொண்டு உணவு தயாரித்து உண்டபடி, எதிரி அறியாமல் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம். 4ம் மாதம் 4ம் திகதி இரவு எமது நகர்வை ஆரம்பிப்பதற்காக, என்னையும் என்னோடு வந்த ஒரு பெண்போராளியையும், எமது லீடர் நிமல் அண்ணாவையும் வேவுபார்த்து வர அனுப்பி வைத்தார்கள். நாமும் போய் பார்த்துவிட்டு வந்து எமது அணியினரை அழைத்துக் கொண்டு ஓர் ஊர்மனைக்குள் நின்று நேரத்தைப் பார்த்தோம். நேரம் 4.30 ஐயும் தாண்டியிருந்தது. வரைபடத்தை எடுத்து நாம் நிற்கும் இடத்தைப் பார்த்தோம். எம்மைச் சுற்றி வயல் வெட்டைகள். நாம் நிற்பது ஒரு சின்ன ஊர்மனை. எனவே இப்போது எதுவும் செய்ய முடியாது. எனவே அன்று பகல் அங்கேயே தங்குவதாக முடிவெடுத்து, அங்குள்ள வீடுகளில் தங்கிக் கொண்டோம்.

எங்கள் ரீமில் ஒருவருக்கு ஏற்கனவே வந்த காய்ச்சல் அம்மன் வருத்தமாகியது. அவருக்கான சரியான பராமரிப்பு இல்லை. உணவு, குடிநீருக்கே கஸ்டம். இதில் எங்கு குளிப்பது. அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆட்களுக்கும் அம்மன் போடத் தொடங்கியது. திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. ஆமி கிளியறிங் செய்துகொண்டு நாங்கள் இருந்த பக்கத்தை நோக்கி வந்தான். இரண்டு ரீமும் அங்கேயிருந்த வௌ;வேறு வீடுகளுக்குள் ஒளிந்து கொண்டோம்.
சாதாரணமாக கதைப்பதாகவே எழுதுகின்றேன். ஆமி நாங்கள் இருந்த வீட்டுக்குக் கிட்ட வந்து நின்றாங்கள். பரவலாக ஐந்து (05) மீற்றருக்கு ஒருவராக நின்றார்கள். எம்மோடு இருந்த நிமல் அண்ணாவிற்கு நன்றாகச் சிங்களம் தெரியும். நான் அவரிற்குப் பக்கத்தில்தான் இருந்தேன். என்ன கதைக்கிறான் என்று கேட்டேன். அண்ணா சொன்னார் ‘ஆமிக் கொமாண்டர் சொன்னானாம் அங்கேயுள்ள ஆடு, மாடு, கோழிகளை பிடித்து வாகனத்தை வரவழைத்து ஏற்றும்படியும், நாய்களை மட்டும் விட்டுவைக்காது சுடச்சொல்லி கட்டளை போட்டானாம். ஒருத்தன் நாயைக் கலைக்க, கொமாண்டர் கெட்ட வார்த்தைகளால் பேசிவிட்டு சந்தேகமான இடங்களில் எல்லாம் சுடச்சொல்லிச் சொன்னான்.’ நாங்கள் நகர்ந்து வந்த பாதைகளெல்லாம் அவன் கிளியறிங் செய்து கொண்டிருந்ததோடு, தான் சந்தேகப்படும் இடங்களுக்கு குண்டும் அடித்தான்.

பிறகு மேலிடத்திலிருந்து தொடர்பு வந்தது. அதில் இன்னும் ஒரு கிலோ மீற்றர் இருப்பதாகவும் ஒருவரையும் சுட வேண்டாம் என்றும் முன்னுக்கு தங்கட ஆட்கள் கட்அவுட் போட்டு நிற்பதாகவும் சொன்னான். பின்பு பக்கத்தில் நிற்பவனைப் பார்த்து ‘டேய் இந்த வீட்டைப் பார்த்திட்டியா’ என்று, நாங்கள் இருந்த வீட்டைப் பார்த்துக் கேட்டான். அவன்………………… தொடரும்

தமிழ்க்குயில்.

thamilkuyil@gmail.com

நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது.- பாகம்-1


%d bloggers like this: