அனைத்துலகம்

Wikileaks இணையத்தள நிறுவனர் லண்டனில் கைது.

அமெரிக்கா உட்பட பல நாடுகளின் பல முக்கிய இரகசிய ஆதாரங்களை வெளியிட்டுவந்த, விசில் ஊதும் இணையத்தளம் என மேற்குல ஊடகங்களால் வர்ணிக்கப்படும் Wikileaks இணையத்தளத்தின் நிறுவனர் Julian Assange லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலட்சக்கணக்கான முக்கிய ஆதாரங்களை வெளியிட்டு பல நாடுகளை இராசரீக சர்ச்சைக்கு உள்ளாக்கியதன் பின்னணில் 39 அகவையுடைய அவுஸ்திரேலியப் பிரசையான இவர் மீது சுவீடனில் இரண்டு பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து இவர் மீது பன்னாட்டு காவல்துறையான இன்ரர்போல் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில், லண்டனில் கைது செய்யப்பட்ட Julian Assange இன்று வெஸ்ற்மினிஸ்ரர் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட இருக்கின்றார்.

இது பற்றிக் கருத்துரைத்துள்ள Wikileaks இணையத்தளத்தின் பேச்சாளர் ஒருவர் Julian Assange கைது செய்யப்பட்டுள்ளமை ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என வர்ணித்துள்ள அதேவேளை, இருப்பினும் மேலும் பல இரகசிய ஆவணங்களை வெளியிடுவதை தமது இணையம் நிறுத்த மாட்டாது என சூழுரைத்திருக்கின்றார்.

Wikileaks இணையத்தளத்திற்கான Servar சேவையை வழங்குவதற்கு பல அமெரிக்க நிறுவனங்கள் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், அது தற்பொழுது Swiss நாட்டில் தளம் கொண்டுள்ள Servar மூலம் இயக்கப்பட்டு வருவதுடன், பல தடவைகள் சைபர் தாக்குதலுக்கும் உள்ளாகி உள்ளது.