கட்டுரைகள்

நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது – பாகம்-6

உடனே எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டேன். பற்றைக்காடுதானே அவதானித்து நகருவமென்று. நகர்ந்து கொண்டு இருந்தேன். அப்போது நேற்று சம்பவம் நடந்த பக்கம் சத்தம் கேட்டது. நான் நிற்கிற பக்கமும் கேட்டது. ஆமி ‘கிளியறிங்’ செய்து கொண்டு போற சத்தம் அது.

நான் காட்டுக்குள்ளால் வந்து கொண்டிருந்தேன். பெரிய அருவியின் கிளைகள் நிறைய இருந்தது. முதல் அருவியிலும் மரம் ஒன்று விழுந்து கிடந்தது. அது மெல்லியமரம் கொடியொன்று தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு தடியை எடுத்து ஆழம் பார்த்தேன்.

இதுவும் ஆழமாகத்தான் இருந்தது. தடியை ஊன்றிக் கொண்டு மெதுவாக மரத்தில் காலை வைத்துப் போனேன். கொடிக்குக் கிட்டப் போக மாறி மாறி உருளப் பார்த்தது. நான் உடனே இடது கைக் கமக்கட்டுக்குள் தடியை வைத்துவிட்டு மற்றக் கையால் கொடியைப் பிடித்துவிட்டேன். மரம் அங்கே இங்கேயென்று ஆடியது.
ஒரு மாதிரி கொடியைப் பிடித்துப் பிடித்து கரைக்குக் கிட்டப் போக மரம் தூக்கிவிட்டது. உடனே தடியை ஊன்றி ஒரு காலை கீழே வைத்துப்பார்த்தேன். தாழம் இல்லை. உடனே இறங்கி நடந்து மேலே ஏறி நடந்தேன். பிறகுமொரு அருவி அதில் இடுப்பளவிற்கு தண்ணீர். கரையில் ஏறி பள்ளமான பக்கத்தில் காலை வைத்துவிட்டு முன்னுக்குப் பார்த்தேன் ஆமியுடைய ‘சூ’ (சப்பாத்து) அடையாளம் இருந்தது. நிலம் ஒரே சுரியாக இருந்தது. அப்பதான் அவ்விடத்தால் ஆமி போயிருக்கிறான். நான் அந்தக் காலடிக்கு மேலேதான் காலை வைத்திருக்கிறேன். உடனே அதை அழித்துவிட்டு எல்லா இடமும் சுற்றிப் பார்த்துவிட்டு வேகமாய்ப் போய் ஒரு பற்றைக்குள் இருந்துவிட்டேன். அருவிக்கரையோரம் ஆமியின் சத்தம் கேட்டது.

ஆமி அருவிக்கு அங்கால சத்தம் போட்டு ‘கிளியறிங்’ செய்து கொண்டு போனான். எல்லா ‘பங்கர்’களுக்கும் குண்டடித்தான். திடீரென்று மளமளவெண்டு ‘ரவுண்ஸ்’ சத்தம் கேட்டது. மாறிமாறிச் சத்தம் போட்டுக் கத்தினான். எங்களுடைய ஆட்களைக் கண்டு சுட்டிருக்கிறான். அதைத்தொடர்ந்து மாறிமாறி இருபகுதியினரின் ரவுண்ஸ் அடியும், குண்டெறிந்து, வெடித்த சத்தங்களுமாக அவ்விடம் அதிர்ந்து ஓய்ந்தது. பிறகு நெருப்பு எரிந்து புகைவது தெரிந்தது. எனக்கு இன்னும் கவலை கூடியது. எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்; கோபமும் கூடியது. கறள் படிந்த நாட்களும் சம்பவங்களும் என்று யாராவது பழைய கதைகள் சொன்னாலே நான் அழுதிடுவேன். இப்ப நேரே பார்த்து அழவேண்டிய நிலை. மனது சரியாக நோகிறது, பாரமாக இருந்தது. யாரிடமாவது சொல்லிப் பெரிதாக அழவேண்டும் போல இருந்தது. என்ன செய்வது. எதுவுமே செய்யமுடியாத பரிதாப நிலையில் நான். என்னுடன் இருந்து பலகாலமாகப் பழகி, ஒன்றாக உண்டு, பயிற்சி எடுத்து, படுத்து, விளையாடியவர்கள் எனக்கு முன்னாலேயே எரிந்து சாம்பலாகிவிட்டார்களே என்ற ஒரு வெறி. இப்ப போய் அவனைக் குத்திகிழிக்க வேண்டும் போல இருந்தது.

அந்தப் பற்றைக்குள்ளிருந்தே எடுத்துக் கொண்டுவந்த சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு இருந்தேன். இந்தச் சம்பவம் 4ஆம் மாதம் 6ம் திகதி நடந்தது. இரவு ஆனதும் அருவியால் இறங்கி திரும்பவும் அந்தப்பக்கம் வந்தேன். முழு வெட்டை. தூரத்தில் வாகனச் சத்தம் கேட்டது. பற்றை ஓரமாக நடந்தால் தூரத்தில் இருந்து பார்த்தால் அசைவு தெரியாது. நிலவாகவும் இருந்தது. கொஞ்சத் தூரம் நகர்ந்தேன். மிகவும் வெளிச்சமாக இருந்தது. அதனால் வெட்டையப் பாக்கக்கூடிய மாதிரி ஒரு பற்றைக்குள் இருந்து நித்திரை கொண்டேன். விழித்துப் பார்த்தபோது வெட்டையில் ஒரு 200 அடி தூரத்தில் வெளிச்சம் (‘டோச்’) தெரிந்தது.

திடீரென்று ஆமி கத்திச் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்துடன் துப்பாக்கிச் சத்தமும் கேட்டது. நேரத்தைப் பார்த்தேன் இரவு 2.20. பின்னர் ஆமிக்காரர் யாரோ ஒருவரை தரதரவென இழுப்பது போல தெரிந்தது. நிலவாக இருந்தபோதும் தெளிவாகத் தெரியவில்லை. நான் பற்றைக்குள் நன்றாக உட்புகுந்து ஒளித்தவாறே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தேன். அது எங்கட ஆட்களில் யாரோ தன்னைத்தானே சுட்டு வீரச்சாவடைந்திருக்கவேண்டும் அவருடைய உடலைத்தான் ஏதோ சொல்லி கத்திக் கத்தி இழுத்துக் கொண்டு வந்தார்கள். அடுத்து, எனது நிலையை எண்ணி, தயாராக குண்டை எடுத்து கிளிப்பைக் வாயால் கழற்றக் கூடியவாறாக வைத்தபடியே குப்பியையும் எடுத்து கடிக்கக் கூடியநிலையில் தயாராக வைத்தபடியே இருந்தேன்.

விடுபட்ட ஆக்கள் இரவுக்கு நகருவார்கள் என்று ‘கட்டவுட்’ போட்டிருந்தான். எனக்குப் பக்கத்தில் ஒரு 100 அடியில் இன்னொரு ஆமியின் ரீம் நின்றது. நாய் குரைத்துச் சத்தம் கேட்டது. நான் இனி இங்கே இருக்கக்கூடாது என்று நினைத்து அருவியைக்கடந்து அங்காலே போவமென்று எழும்பினேன். ஆமி அந்த உடலை இழுத்துக் கொண்டு போய் வெட்டையான பகுதியில் போட்டுவிட்டு தனது தொலைபேசியால் போட்டோ எடுத்தான்;. அதிலேயே வைத்து அந்த உடலை எரித்துவிட்டு, தான் வந்த திசைக்கு றவுண்ஸ் அடித்துப் பார்த்தான். நிலவுதானே எல்லாம் தெரிந்தது.

நான் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அருவிக்குள் இறங்கி நடந்து போனேன். பெரிய ஆழமில்லை. அங்கால் கரையில் எருமைமாடுகள் மேய்ந்து கொண்டு நின்றன. நான் வருவதைக் கண்டுவிட்டு, நான் கரையில் ஏற அதுவும் எனக்குக் கிட்ட வந்தது.

எனக்கு உடனே என்ன செய்வது என்ற தெரியவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் இது வேறு துன்பமா? இவ்வளவு றவுண்ஸ் அடிக்கும்போதும் ஒரு மாதிரி தப்பிவிட்டேன். இனி இந்த மாட்டைக் கலைக்கப் போய் அவனிட்டை அல்லது மாட்டிடம் அகப்படத்தான் போகிறேன் என்று நினைத்தவாறு ‘சூய்’ என்று கலைத்துப் பார்த்தேன். எல்லா மாடுகளும் கொஞ்சத் தூரம் ஓடின. நான் அதற்கிடையில் பக்கத்தில் உள்ள பற்றைக்குள் புகுந்துவிட்டேன்;.

எருமைமாடு வந்து பார்த்தது. நான் ஆடிஅசையாமல் அப்படியே இருக்க தன்பாட்டிலே போய்விட்டது. நிலவு மறையவில்லை நகர்ந்தால் தெரியும். அதனால் பற்றைக்குள்ளேயே இருந்தேன்.

நான் பகலில் நல்ல பற்றையாகப் பார்த்து புகுந்திருந்து நித்திரை கொள்வேன். அவதானிக்க வேண்டிய பிரதேசமென்றால் விழிப்பாக இருப்பேன். முழு நகர்வும் இரவில்தான். நாய்களால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. நிலவு மறைய எழும்பி அருவிக்கரை ஓரமாக நடந்து போனேன்.

புதுக்குடியிருப்புக்கும் கிளிநொச்சிக்கும் போய்வருகிற பிரதான தெரு அது. அதிலிருந்து ஒரு 100 அடி தூரத்தில் நின்று, எப்படியாவது றோட்டைக் கடக்கவேண்டுமென்று பார்த்தேன். நடமாட்டம் கூடவாக இருந்தது. உடனே தண்ணீருக்காலே இறங்கி நடந்தேன். மணியைப் பார்க்க மறந்திட்டேன். தடியொன்றையும் எடுத்துக்கொண்டு போனேன். விடிய வெளிக்கிட்டுவிட்டு என்ன செய்வது. பாலத்தால் போனால் ஆமி பாத்திடுவான் என்று நினைத்துவிட்டு திரும்பவந்து ஒரு பற்றையைப் பார்த்து இருந்துவிட்டேன்;.

அன்று மதியம் ஆமி வரும் சத்தம் கிட்டக் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன் எனக்கு நேரே ஒரு ‘பொசிசன்’ போட ஒருவன் கிடங்கு கிண்டுகிறான்;.

ஒருவன் தடி வெட்டுகிறான்.

தொடரும்….

tamilkuyil@gmail.com