கட்டுரைகள்

நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – பாகம் 7

நான் ஆடி அசைந்தால் அவன்(ஆமி) கண்டுவிடுவான். அருவியின் மறுபக்கம் நான் எதிர்ப்பக்கம் அவன். எறும்புகள் நிறைய காயப்பட்ட கையை மொய்த்துவிட்டது. உள்ளுக்குள்ளே புகுந்து கடித்தது. தாங்க முடியாத வேதனையாக இருந்தது. ஒன்றும் செய்யமுடியவில்லை.
முன்னாலே ஆமி நிற்கிறான். வாயை இறுக்கிப் பொத்தியபடியே அழுதேன்.

அன்றைய பொழுதும் ஒருவாறாகக் கழிந்தது. நன்றாக இருண்டு நிலவு மறையும் வரைக்கும் இருந்தேன். பிறகு எழும்பிப்போய் கிளிநொச்சிப் பக்கமாக விலத்திப் பார்த்தேன். விடியப்போகுது ஓர் இடத்தில் கிணறு இருந்தது. அதைச்சுற்றிப் பற்றைகள் இருந்தது அதற்குள்ளேயே இருந்துவிட்டேன்.

விடிந்த பின்பு காயத்துக்கு கட்டிய துண்டை அவிழ்த்து காயத்தைச் சுத்தம் செய்தேன். விரல் தொங்கிக் கொண்டு இருக்க கஸ்ரமாக இருந்தது. கத்தரிக்கோலை எடுத்து வெட்டிப்பார்த்தேன். வெட்டுப்படவில்லை. பிறகு முழுப்பலத்தையும் கொடுத்து வெட்டிப் பார்த்தேன். வெட்டவே இயலாமல் கைதான் வேதனையில் வலித்தது. பின்பு காயத்தைக் கட்டிவிட்டு தடயங்களை மறைத்துவிட்டு அவ்விடத்திலேயே இருந்தேன்;. கதைத்துச் சத்தம் கேட்டது. நன்றாக மறைந்து இருந்தேன். எனக்கு முன்னுக்கு மெயின்றோட். வாகன நடமாட்டம் அப்படியே தெரிந்தது. ஆனால் ஆமி நின்று ‘பொசிசன்’ வேலை செய்து கொண்டிருந்தான்.

சற்று நேரத்தால் எனக்குப் பின்னால் சரசரவெனச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். பெரிய விரியன் பாம்பு ஒன்று என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதென்ன கொடுமை. எருமைமாடு துரத்தியது, இப்ப பாம்பு. கடித்தால் வீணாகச் சாகப் போகிறேனே என்று நினைத்துவிட்டு சின்னக் கல்லொன்றை எடுத்து எறிந்தேன். உடனே பாம்பு ஓடிவிட்டது.

அடிக்கடி கெலியெல்லாம் எனக்கு மேலாலே பறந்து போக கோபம்தான் வந்தது.(எங்கட ஆட்களின் எதிர்தாக்குதலில் காயப்பட்ட ஆமியை ஏற்றி இறக்கிக் கொண்டிருக்கிறாங்கள் என்று நினைத்தேன்.) என்ன செய்வது தனிய நின்று பிரயோசனமில்லை. இருட்டிய பின்பு எழுந்து ஒரு வீட்டினுள் போனேன். அங்கே கொய்யாக்காயும், மாங்காயும் இருந்தன. பிடுங்கி பையினுள் போட்டுக் கொண்டு வேறு பாதையால் போகலாமா என்று பார்ப்போம் என்று கொஞ்சம் பின்னுக்குப் போனேன். மழை தூறத்தொடங்கியது. பொலித்தீனால் காயத்தைக் கட்டிவிட்டு வெளிக்கிட்டுப் போனேன். முன்னுக்கு மூன்று பேர் வருவதைபோல் இருந்தது. நான் ஒரே கடவுளிடம் கேட்கிறனான். கடவுளே! எங்களுடைய அணியில் யாரையாவது சந்திக்க வேண்டும் என்று. முன்னுக்கு மூன்று பேர் வர மனதுக்கு சந்தோசமாக இருந்தது.

பிறகு யோசித்தேன் “சீ சிலவேளை ஆமியாக இருக்குமோ? எதற்கும் ஒளிந்திருந்து பார்ப்போம்” என்று ஒரு வீட்டு ஓரமாக ஒளிந்து நின்று பார்த்தேன். அது ஆமி. எனக்குச் சரியான கவலையாகப் போய்விட்டது. நான் எதிர்பார்த்தது ஏதோ நடந்தது ஏதோ. பிறகு கொஞ்சம் முன்னுக்குப் போய்ப் பார்த்தேன். யாரோ கதைக்கிற சத்தம் கேட்டது. ஆமி ‘கட்டவுட்’ போட்டு நிற்கிறான். வேகமாக திரும்பி, வந்த பக்கமே வந்து ஒரு வீட்டுக்குள் இருந்தேன். எனக்குத் தேவையான சில பொருட்களை எடுத்து பையினுள் வைத்தேன். மழைவரப் போகிறது எனவே அந்த வீட்டிலிருந்த ஒரு யூரியாப் பையையும் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தேன்;. மழை இரையும் சத்தம் கேட்டது. நான் ஒரு பாழடைந்த வீட்டைப் பார்த்து இருந்துவிட்டேன்.

திடீரென்று ஓடிச் சத்தம் கேட்டது. இருட்டவும் போகிறது. மெதுவாக எழும்பிப் பார்த்தேன் ‘கட்டவுட்’ நின்ற ஆமிக்காரர்கள் மழை என்றவுடனே ஒவ்வொரு வீட்டினுள்ளேயும் போய் இருந்தார்கள். நான் உடனே எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு பாழடைந்த கிணறு ஒன்று இருந்தது. கரையெல்லாம் மரங்கள் முளைத்திருந்தது. அதற்குள்ளே போய் இருந்துவிட்டேன்;. கிட்ட வந்து நன்றாக எட்டிப் பார்த்தால் மட்டுந்தான் தெரியும்.

பிறகு மழை அடிச்சு ஊற்றத் தொடங்கியது. ஆமிக்காரன் கதைக்கிற சத்தம் மட்டும் கேட்டது. மழை விடவேயில்லை. இரவாகிவிட்டது. எனக்கு நல்ல சந்தர்ப்பம்தானே உடனே எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டேன். மெயின்றோட்டைக் கடக்கலாமா என்று யோசித்தேன். பிறகு ‘சீ இதுக்கு நேரே கட்டாயம் ஒரு பொசிசன் இருக்கும்’ என்று நினைத்து முதல்நாள் இருந்த இடத்திற்கு வந்தேன்.
அப்படியே அருவிக் கரையைப் பிடித்து ‘பென்ற்’பண்ணிக் கொண்டு றோட்டைக் கடந்துவிட்டேன். ‘அப்பாடா இப்பதான் நிம்மதி’ என்று நினைத்தேன்;. முழுக்க வெட்டைவெளி. அருவிக் கரையோரமாக இருந்த வீடுகள் உடைந்து கிடந்தன.

ஆமி வெட்டை முழுவதிலும் 50 அடி தூரத்துக்கு ஒரு பொசிசன் படி போட்டிருந்தான். மழைத்தண்ணி ஓடிக்கொண்டிருந்தது. வயல் எது வரம்பு எது என்றுகூடத் தெரியவில்லை.
விழுந்து எழும்பி ஒருமாதிரி அருவிக்கரைக்கும் கிட்டப் போய்விட்டேன். அருவியில் இறங்கி ஆழம் பார்த்தேன். போகவே இயலாது. ஓர் இடத்தில் பையையும், றைபிளையும் வைத்துவிட்டு, ஆமியுடைய பழைய பொசிசன் இருந்தது. அதில் பெரிய நீல ‘லொக்ரீப்’ ஒன்று இருந்தது. அதை எடுத்து உருட்டிக்கொண்டு வந்தேன். அதுக்கு மேல் றைபிளையும் பையையும் வைத்து அதைப்பிடித்துக் கொண்டு நீந்திப் போவம் என்று நினைத்து இறங்கினேன். மற்றக் கரையில் ஆமியின் பொசிசன் இருந்தது எனக்குத் தெரியாது. எனது சத்தத்தைக் கேட்டு நாய் குரைத்தது. நான் சத்தம் போடாமல் நின்றேன். பின்பு இப்படிப் போக இயலாது என்று நினைத்து பையையும் றைபிளையும் எடுத்துக் கொண்டு அருவிக் கரையோரமாகப் போனேன்.

இடையிடையே இறங்கி ஆழம் பார்த்துப் பார்த்துப் போனேன். ஓர் இடத்தில் தென்னந்தோப்பு அதற்குள்ளே சின்னவீடு ஒன்று இருந்தது. அதில் ஒரு றபர் வாளி கிடந்தது. நான் அந்த வாளியை எடுத்துக் கொண்டு அருவிக்குள் இறங்கி ஆழம்பார்த்தேன். எல்லா இடமும் ஆழமாகத்தான் இருந்தது. எடுத்துவந்த வாளியைப் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். எனது பையையும் வடிவாக கொழுவினேன். றைபிளையும் முன்னுக்குக் கொழுவிவிட்டு மெதுவாக அருவிக்குள் இறங்கினேன். வாளியை கவிட்டுப் பிடித்துக் கொண்டு காயக் கையை வாளிக்கு மேல் விளிம்பில் வைத்தேன்.

அப்பிடியே மெதுவாக உந்தினேன். தண்ணி ஓடும் பக்கம் உந்தி உந்திப் போய் ஒருமாதிரி கரையில் இருந்த ஒரு மரத்தை எட்டிப் பிடித்து வாளியை அந்தக் கரையில் போட்டுவிட்டு, ஒருமாதிரி ஒற்றைக் கையாலே முயற்சி செய்து ஏறிவிட்டேன். ஏறியதும் எல்லாப் பக்கமும் சுற்றி அவதானித்து, இனி என்ன பெரிய தடை நீங்கின மாதிரி நினைத்துக்கொண்டு நகரத் தொடங்கினேன். வெறும் வயல் வெட்டை. உடையார்கட்டுக் கடைசிப்பகுதி. நான் அடிபட்டது இருட்டுமடுவில். ஒருமாதிரி எனது உறுதியால் இவ்வளவு தூரம் வந்துவிட்டேன். இனி வேகமாகப் போகவேண்டுமென்று நடந்தேன்.

இவ்வளவு துன்பங்களைத் தாண்டிக்கொண்டு எப்படி எங்கட ஆட்களிடம் போய்ச் சேர்வது என்று தெரியவில்லை. என்ன செய்வது என்று சோர்ந்து போனேன். அப்போது தலைவர் எங்களது அணிகளைச் சந்தித்த போது சொன்ன விடயங்கள் நினைவுக்கு வந்தது. அது மனதுக்கு உறுதியைத் தர, இங்கிருந்து தளத்திற்கு போகும் போது பிரயோசனமான தகவல்களைச் சேகரித்துக் கொண்டு போவது என்றும் அவனிடம்(ஆமியிடம்) பிடிபடக் கூடாது என்றும் அப்படி முட்டுப்படும் நிலை வந்தால் அவனையும் அழித்துவிட்டுத்தான் நான் சாகவேண்டும் எனவும் முடிவெடுத்தபின் நிம்மதியாக அடுத்துச் செய்ய வேண்டியது பற்றி திட்டமிட்டேன்.

தொடரும்.
thamilkuyil@gmail.com