தமிங்கில தேசிய அமைப்புக்களின் சனநாயகம்.

Home » homepage » தமிங்கில தேசிய அமைப்புக்களின் சனநாயகம்.

2009ம் ஆண்டு மே மாதத்தில் தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட படைக்கருவிகள் மௌனிக்கப்பட்டதும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்ததை முன்னெடுக்கும் கொள்கையுடன் பல தமிழ் தேசிய அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. இவற்றில் நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத்தமிழர் பேரவை மற்றும் புலம் பெயர் தமிழர்கள் வாழும் நாடுகள் தோறும் உருவாக்கப்பட்ட பேரவைகள் முக்கிய இடம் பெறுகின்றன.

உலகத்தமிழர் பேரவை

உலகத்தமிழர் பேரவை என்பது முற்றிலும் சனநாயகம் அற்ற முறையிலும் தமிழ் மொழி சரளமாக பேசத் தெரியாதவர்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. உலகத்தமிழர் பேரவை என்பது புலம் பெயர் நாடுகளில் ஏற்கனவே செயற்பட்ட சில தமிழ் அமைப்புக்களை அங்கத்தவர்களாக கொண்டுள்ளது. இந்த அமைப்பில் சனநாயக முறையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எந்த பிரதிநிதிகளும் இல்லை.

உலகத்தமிழர் பேரவையை உருவாக்குவதற்காக பிரான்சு நாட்டில் 2009 ஆண்டு கூட்டப்பட்ட கூட்டத்திலேயே கூட்டத்தை தமிழ் மொழியில் நடாத்த முடியாது நிலை காணப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட இளம்தலைமுறையினர் சரளமாக தமிழ் மொழியில் கலந்துரையாடிய போதும் கூட்டத்தை நாடாத்தியவர்களான முதலாவது தலைமுறையினரே தமிழ் மொழியில் தம்மால் சரளமாக பேசமுடியாது என்று வாதிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

இந்த வருட ஆரம்பத்தில் சேர்மனியில் நடைபெற்ற கூட்டமொன்றில் பிரித்தானிய தமிழர் பேரவையை சார்ந்த சென் கந்தையா தமிழீழத்தில் தமிழ் அழிவதாகவும் விரைவில் யாழ்பாணத்தில் சிங்களவர்களின் `பெரேரா´ நடைபெறும் அபாயம் உள்ளதாகவும் கண்கள் கலங்கிய நிலையில் ஆதங்கப்பட்டார். ஆனால் இந்த விடயத்தைக்கூட அவரால் தமிழ் மொழியில் கூறமுடியவில்லை என அங்கு கூடியிருந்த சிலர் ஆதங்கப்பட்டனர்.

உலகத்தமிழர் பேரவையின் தலைவராக இப்பொழுது இருக்கும் வண பிதா இமானுவேல் எந்த அமைப்பை பிரதிநிதிப்படுத்துகிறார் என்பது எவருக்கும் தெரியாது. அல்லது வண பிதா தான் சார்ந்த மத அமைப்பை பிரதிநிதிப்படுத்தினால் உலகத்தமிழர் பேரவை தமிழ்மொழி பேசும் ஒரு மதத்தை மட்டும் சார்ந்ததாக பார்க்கப்படும் அபாயம் உள்ளது.

உலகத்தமிழர் பேரவைக்கு தமிழ் மொழியில் இணையத்தளம் கிடையாது.

நாடு கடந்த தமிழீழ அரசு

நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்காக ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஒருவாக்கப்பட்ட தோதல் ஆணையங்களோ அதன் ஆணையாளர்களோ நடுநிலையாளராக இருந்திருக்கவில்லை. தேர்தலில் ஒரு சில நாடுகளில் தேர்தலில் போட்டியிட்ட ஒரு சிலரை தேர்தல் ஆணையாளராக இருந்தவரே ஆதரித்து பிரச்சாரங்களை செய்திருந்தார்கள். டென்மார்க்கில் தேர்தல் அறிவிப்பு துண்டுப்பிரசுரங்களுடன் தாம் விரும்பும் வேட்பாளர்களின் விளம்பரங்களையும் தேர்தல் ஆணைய செயர்பாட்டாளர்களே விநியோகித்துவந்தனர்.

கனடாவில் நாடுகடந்த அரசிற்கான தேர்தலை நடாத்திய இராசரட்ணம் கனடிய தமிழ் தொலைகாட்சியில் தோன்றி தேர்தலில் போட்டியிட்டவர்கள் குழுக்களாக போட்டியிட்டதாகவும் போட்டியிட்ட ஒரு குழு பிழையானது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஏந்தவொரு நாட்டிலும் தேர்தல் ஆணையாளராக கடமை புரிந்தவர் தேர்தலில் போட்டியிட்டவர்களை விமர்சிப்பதுவில்லை. சனநாயகமே அற்ற சிறிலங்காவிலும் கூட இப்படி தேர்தல் ஆணையாளர் நடந்து கொண்டது இல்லை.

நாடுகடந்த தமிழீழ அரசில் சட்ட மேதைகளென பலர் உறுப்பினராக இருக்கும் பொழுதும் அரசவையில் வாக்கெடுப்பு நடாத்தி யாப்பை அங்கீகாரம் பெற்றுக்கொள்ளவில்லை.

புலம் பெயர் தமிழர்கள் வாழும் பெரும்பாலான நாடுகளில் ஒரு சிறிய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது கூட வெளிப்படையான வாக்கெடுப்பு நடைபெறுவதை காணக்கூடியதாக இருக்கும். இப்படியான வாக்கெடுப்பு வெளிப்படையான வாக்கெடுப்பாக இருப்பதால் பாராளுமன்ற உறுப்பினர்களில் கருத்தை மக்கள் நேரடியாக காணக்கூடியதாகவிருக்கும்.

ஆனால் தமிழீழ அரசிற்கான யாப்பை அமுல்படுத்த வாக்கெடுப்பு நடாத்தப்படவில்லை என்பது இப்பொழுது வெளியிடப்பட்டுள்ள காணொளி வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. யாப்பில் உள்ள ஒரு சரத்தை மாற்றவே மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என்று கூறப்படும் யாப்பை நிறைவேற்ற கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை யாருக்கும் தெரியாது.

யாப்பு நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் பொழுது சகல உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவில்லை என்பது இங்கு மிகவும் கவனிக்கப்படவேண்டிய விடயம். யாப்பு நிறைவேற்றியதன் பிறகு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு யாப்பு உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கப்படவில்லை. குறிப்பாக நெதர்லாந்து பெல்லியம் மற்றும் சில நாடுகளில் தேர்தலே நடாத்தப்படாததால் அந்த நாடுகளில் வாழும் எமது மக்களின் கருத்துக்கள் யாப்பு அமைப்பதற்கு பெற்றுக்கொள்ளப்படவில்லை.

நாடு கடந்த தமிழீழ அரசின் இந்த சனநாயகம் என்னும் பெரும்பான்மையினரின் சர்வாதிகாரம் உலக நாடுகளால் நிச்சயமாக கண்காணிகப்பட்டே வரும்.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமானது தமிழ் மொழி தொடர்பானதாக மட்டும் இருக்கும் பொழுதும் தமிழ் மொழியை சரளமாக பேசத் தெரியாதவர்கள் தமிழீழ அரசில் அங்கம் வகிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுவா?. நாடு கடந்த அரசின் உறுப்பினர்களை தெரிவு செய்ய நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பவர் ஈழத்தமிழரின் வழித்தோன்றலா என மொழிபெயற்பாளர் ஊடாக உறுதிசெய்யப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலில் போட்டியிடுபவருக்கு தமிழ் சரளமாக பேசத்தெரிய வேண்டும் என எந்த அறிவுறுத்தலும் இல்லை.

நாடு கடந்த அரசின் யாப்பில் சகல தொடர்புகளும் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என ஒரு மிகவும் வரவேற்கவேண்டிய முக்கியமான சரத்து இருக்கின்றது. ஆனால் அந்த யாப்பை உறுப்பினர்களுக்கு அனுப்பி கருத்து கேட்கப்பட்டது தமிழ் மொழியில் அல்ல.

நாடு கடந்த அரசின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள வி ருத்திரகுமாரன் ஊடகங்களுக்கு செவ்வியளிக்கும் பொழுது முற்றுமுழுதாக தமிழ் மொழியில் உரையாடுவதில்லை அவரின் மொழியும் `தமிங்கிலம்´ ஆகவே இருக்கின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக நாடு கடந்த தமிழீழ அரசின் செயல்பாடுகளையோ அறிவுறுத்தல்களையோ தமிழ் மக்கள் அறிந்து கொள்ள தமிழ் மொழியில் ஒரு அதிகாரபூர்வ இணையத்தளம் நாடு கடந்த தமிழீழ அரசிற்கு இல்லை. சிறிலங்கா அரசுடன் சேர்ந்தியங்கும் கேபியின் உறவினர்களால் நடாத்தப்படும் நாடுகடந்த அரசின் சில இணையங்களில் தான் நாடு கடந்த தமிழீழ அரசின் அறிவித்தல்கள் பிரசுரமாகின்றன.

நாடுகடந்த தமிழீழ அரசு என்ற கவர்சியான சொற்பதத்துடன் தமிழீழ விடுதலை வேட்கையுடன் வாழும் தமிழினம் ஏமாற்றப்படுவதுதான் இப்பொழுது நடைபெறுகின்றது.

புலம் பெயர் நாடுகள் வாரியாக உருவாக்கப்பட்டுள்ள பேரவைகளும் உலகத்தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசு போன்று சனநாயக விரோத போக்கையும் தமிழ் மொழி புறக்கணிப்பையுமே கொண்டுள்ளன.

2002ம் ஆண்டு அனைத்துலக ஊடகவியளாளர் கூட்டத்தில் தமிழீழ தேசியத் தலைவரிடம் எதிர்கட்சி தொடர்பாக கருத்துக் கேட்கப்பட்ட பொழுது தேசியத் தலைவர் இப்பொழுது எதிர்கட்சி பற்றி பேச முடியாது என்பதை வெளிப்படையாக கூறியிருந்தார். சனநாயகம் என்ற மாயையை அவர் திணிக்கவில்லை. சனநாயகம் என்று கூறிவிட்டு ஒரு படைக்கருவி கொண்ட விடுதலைப் போராட்டத்தை நடாத்த முடியாது என்பதை தெளிவுபடுத்தினார். அதே நேரம் நடைமுறையில் இருந்த தமிழீழ நிர்வாகக்கட்டமைப்புக்களில் சனநாயகத்தை நிலைப்படுத்தினார்.

இன்று லிபியாவில் நடைபெறுவது போன்று தமிழீழத்தில் மக்கள் புரட்சி வெடிக்க அவர்களை தயார் படுத்துவதுடன் அதற்கான அனைத்துலக ஆதரவையும் பெற முனைவதே இன்றைய தமிழ் தேசிய விடுதலை செயற்பாடாகும். அப்படியான ஒரு காலப்பொழுதில் தமிழர் படையின் மௌனம் கலையும்! தமிழீழம் விடுதலை பெறும்.!

சனநாயக அமைப்புக்களாக தம்மை கூறுபவர்கள் வெளிப்படையான செயற்பாடுகளுடன் சனநாயக விழுமியங்களுடன் செயற்படாவிட்டால் அனைத்துலக நாடுகளால் இந்த அமைப்புக்கள் சனநாயக அமைப்புக்களாக ஏற்றுக்கொள்ளப்படாது என்பதுடன் தமிழினமே ஏமாற்றுபவர்களாக கணிக்கப்படும்.
வெறுமனையே பெரும்பான்மையினரின் சர்வாதிகாரமான சனநாயகத்தை தமிங்கிலத்தில் பேசிக்கொண்டு பதவி மோகத்தில் மக்களை ஏமாற்றுவது எந்த பயனையும் தராது.

நேர்மையுடன் ஒளிவுமறைவின்றி சகல விடையங்களையும் மக்களுடன் கலந்தாலோசித்து வெளிப்படையாக செயற்படும் பொது அமைப்புக்கள்  அனைத்துலகம் விரும்பும் சனநாயக அமைப்புக்களாக பார்க்கப்படுவதுடன் தமிழினமே பெருமை பெறும்.


%d bloggers like this: