"இந்திய உளவுத்துறை நோர்வேயின் முகத்தில் கரி பூசிவிட்டது".: சொல்ஹெய்ம்"

Home » homepage » "இந்திய உளவுத்துறை நோர்வேயின் முகத்தில் கரி பூசிவிட்டது".: சொல்ஹெய்ம்"

2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்திற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்தியாவும் இரகசியமாக சந்தித்ததாக நோர்வேயின் சுற்றாடல் மற்றும் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

நோர்வேயில் இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியிலேயே சொல்ஹெய்ம் இவ்வாறு கூறியுள்ளார்.

எனினும் இச்சந்திப்பு எங்கு நடைபெற்றது என்பது குறித்தோ இதில் இரு தரப்பிலும் யார் யார் பங்குபற்றினார்கள் என்ற விபரத்தையோ வெளியிடுவதற்கு சொல்ஹெய்ம் மறுத்துள்ளார்.

இத்தகவல் உண்மையானால், ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தையடுத்து 1992 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியா தடை செய்தபின் அவ்வமைப்புடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்திய முதல் சந்தர்ப்பமாக இது இருக்கும்.

பலர் எண்ணுவதற்கு முரணாக, போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்குவதிலும் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான அப்போதைய இந்திய அரசாங்கம் திரைமறைவில் முக்கிய பாத்திரம் வகித்ததாக சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்திற்கு முன்னர்,  இந்தியாவின் அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இந்திய புலனாய்வு அமைப்பான றோ அதிகாரிகளுடனும் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் தான் பல்வேறு தடவை பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் கூறினார்.

றோ அதிகாரிகளுடனான சில சந்திப்புகள் புது டில்லி விமான நிலையத்தில் இடம்பெற்றது என அவர் கூறினார்.

இலங்கையும் இந்தியாவும் 2001- முதல் 2002 வரை போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அமைதியாக கலந்துரையாடியதாகவும் ஒவ்வொரு விடயமும் இந்தியாவுக்கு அறிவிக்கப்பட்டது எனவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்தியா சிறந்த சிறந்த ஆலோசனைகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

இச்சமாதான செயற்பாடுகளில் வேறெந்த பெரிய சர்வதேச செயற்பாட்டாளர் எதுவும் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை. இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் எந்தெந்த நாடுகள் இடம்பெற வேண்டும் என்றுகூட இந்தியா ஆலோசனை கூறியது. எனவும் சொல்ஹெய்ம் கூறினார்.

இலங்கை பிரிக்கப்படுவதை இந்திய அதிகாரிகள் கடுமையாக எதிர்த்தனர் எனவும் தமிழீழத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினர் எனவும் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.


%d bloggers like this: