அனைத்துலகம்

அன்னா ஹஸாரே மீண்டும் உண்ணாவிரதம்

இந்தியாவில் ஊழல் கண்காணிப்புக்கு எதிராக வலிமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்திவரும் காந்தியவாதியான அன்னா ஹஸாரே, இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒருநாள் உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார்.

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பான நாடாளுமன்ற குழுவின் வலுவற்ற யோசனைகளுக்கு எதிராக அன்னா இன்று அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார்.

புதுடில்லியில் ஆர்ப்பாட்டங்களுக்குப் பெயர்பெற்ற ஜந்தர்மந்தர் பகுதியில் காலை 10.15மணியளவில் அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

‘நான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளேன். இப்போது நான் அதிகம் பேசப்போவதில்லை’ அவர் கூறினார்.

அன்னா ஹஸாரே குழுவின் உறுப்பினர்களான அரவிந்த கேஜ்ரிவால், மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், குமார விஸ்வாஸ் முதலானோரும் உண்ணாவிரதத்தில் பங்குபற்றி வருகின்றனர்.

ஊழலுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் அன்னா ஹஸாரே மேற்கொள்ளும் 3 ஆவது உண்ணாவிரதப்போராட்டம் இதுவாகும்.

ஏப்ரல் மாதம் 5 நாள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை அவர் ஆரம்பித்தார்.

அதன்பின் கடந்த ஓகஸ்ட் மாதம் தொடர்ச்சியாக 13 நாட்கள் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டபோது இந்தியா முழுவதும் அன்னாவுக்கு ஆதரவான அலை பரவியது.

ஊழல் கண்காணிப்புக்காக வலுவான சட்டம் இயற்றுவதாக இந்திய அரசாங்கம் உறுதியளித்ததையடுத்து அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். எனினும் இதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் யோசனைகளில் தான் வலியுறுத்திய விடயங்கள் இடம்பெறவில்லை என அன்னா ஹஸாரே கூறுகிறார்.

டிசெம்பர் 27 ஆம் திகதி அவர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.