தமிழீழம்

மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்குரிய நிரந்தர தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்: யாழ்.ஆயர்

யாழ்.மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்குரிய நிரந்தரத் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரம் ஆண்டகை தெரிவித்துள்ளார். யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இலங்கைக்கான கனேடிய தூதர் மற்றும் தூதரக அதிகாரி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, அவர்களிடம் கருத்து தெரிவித்த ஆயர், ‘வடபகுதியில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மக்களின் வாழ்வியலில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருந்தும் மக்களின் மகிழ்ச்சிக்கான உரிய அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமானால் மக்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய வதிவிடப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டம், மீள்குடியேற்றம், மக்களின் வாழ்க்கை நிலை தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் ஆயர் மேலும் தெரிவித்துள்ளார்.