சிறிலங்கா

சர்வதேச அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியோம்; சம்பந்தனின் கருத்துக்கு பீரிஸ் பதிலடி.

எத்தனை அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் நமது உள்நாட்டு விவகாரங்களில் அந்நியத் தலையீடுகளுக்கு இடமளிக்கமாட்டோம். எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம். நமது பிரச்சினையை சர்வதேசப் பொலிஸாரிடம் ஒப்படைக்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று நாடாளுமன்றத்தில் சூளுரைத்தார்.

வெளிவிவகார அமைச்சு தொடர்பான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எனது அமைச்சு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மைகளைத் தேடித்தரும் கடப்பாட்டுடன் செயல்படுகின்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்தச் சபையில் பாரதூரமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். அதே போன்று ஐக்கிய தேசியக் கட்சியினரும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். இவர்கள் கூறுவது போல நாம் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை.

கடந்த செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டின் போது 31 நாடுகளில் ஒரேயொரு நாடு மட்டுமே எமக்குப் பிரச்சினை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது எனத் தகவல் கிடைத்தது. அதனை நாம் சாதுரியமாக முறியடித்தோம்.

அதே போன்று, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் சம்மேளனத்திலும் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டது.

ஆனால், நானும் ஜனாதிபதியும் இரவு பகலாக நேசநாடுகளுடன் பேசினோம். எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினோம். பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் அதனை ஏற்றுக்கொண்டனர். இதனால், நமக்கு எதிராகக் கொண்டுவரப்படவிருந்த பிரேரணை அப்படியே அடங்கிப் போய்விட்டது.

எங்களுடைய வெளிநாட்டுக் கொள்கை தவறானது. அதனால், சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை இலங்கை சம்பாதித்துள்ளது என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

அது தவறு. நேற்றுக்கூட கட்டார் நாட்டுப் பிரதமர் இங்கு விஜயம் செய்தார். ஆயிரம் மில்லியன் முதலீடுகள் தொடர்பான உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.

அதேபோன்று, சீன நாட்டுப் பிரதிநிதிகளும் கலை, கலாசார வளர்ச்சிக்கு உதவ முன்வந்துள்ளனர். எமது கொள்கை தவறானால் இந்த உதவிகள் கிடைக்குமா?

எங்களுடைய நாடு எவருக்கும் அடிமைப்பட்டதல்ல. அடிபணியவேண்டிய அவசியமும் இல்லை. நமது நாட்டின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும். இதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்றார்.