அனைத்துலகம்

மக்களின் ஆதரவு இல்லையென்றால் பதவி விலக தயார்: விளாடிமிர் புடின்.

ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மை பெற்றது. எனினும் கடந்த தேர்தலை விட வாக்கு சதவிகிதம் குறைந்தே காணப்பட்டது.
அத்துடன் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் தலைநகர் மாஸ்கோவில் பல லட்சம் பேர் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அமெரிக்காவின் வலையில் எதிர்க்கட்சிகள் விழுந்து விட்டதால், அப்பாவி ரஷ்யர்களை கிளர்ச்சி செய்ய அமெரிக்கா தூண்டி வருகிறது என புடின் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே தேர்தலுக்கு பின் நடந்த கருத்து கணிப்பில் புடினுக்கு மக்கள் ஆதரவு 60 சதவிகிதத்தில் இருந்து 35 சதவிகிதமாக குறைந்து இருந்தது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ரஷ்ய தொலைக்காட்சியில் நேரடி உரையாடல் நிகழ்ச்சியில் புடின் பங்கேற்று மக்களின் கேள்விகளுக்கு விரிவாக பதில் அளித்தார்.

அப்போது கூறியதாவது: மக்கள் ஆதரவுடன் கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறோம். அரசின் கொள்கை, செயல்பாடு எதிலாவது தவறு இருந்திருந்தால் இதுவரை ஏன் எதிர்ப்பு எழவில்லை.

இப்போது தேர்தல் முடிந்து மீண்டும் பெரும்பான்மை பெற்ற ஒரு ஆட்சிக்கு எதிராக எப்படி திடீரென கிளர்ச்சி வந்தது? எனவே அதில் வெளிநாட்டு சதி இருப்பதாக நினைக்கிறேன்.

மறுதேர்தல் நடத்துவது உட்பட எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரிக்கிறேன். எனக்கு உண்மையிலேயே ரஷ்யர்களிடம் ஆதரவு இல்லை என்று தெரிந்தால் ஒருநாள் கூட பதவியில் நீடிக்க மாட்டேன். விலகத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.