பொங்கலே புத்தாண்டு.

Home » homepage » பொங்கலே புத்தாண்டு.

வருகின்ற தை ஒன்று, தமிழர் திருநாள் மட்டுமன்று, தமிழர்களின் புத்தாண்டுப் புதுநாளும் அதுதான்.

ஜனவரி ஒன்றும், சித்திரை ஒன்றும் இதுவரை நமக்குப் புத்தாண்டுகளாக இருந்தன. ஏசுநாதருக்குப் பெயர் சூட்டப்பட்ட நாள் ஜனவரி 1. நாயக்கர்கள் காலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புத்தாண்டு, சித்திரை 1. இரண்டுமே தமிழர்களின் புத்தாண்டு அல்ல.

திருவள்ளுவர் ஆண்டுதான் தமிழர்களின் ஆண்டு என்றாலும், நடைமுறையில் ஆங்கில ஆண்டே வழக்கத்தில் இருந்து வருகிறது. வரலாற்று ஏடுகளிலும்,அனைத்து ஆவணங்களிலும் ஆங்கில ஆண்டுதான் இன்றும் காணப்படுகிறது. எனவே நடைமுறையில் அதனைப் புறக்கணிப்பது இயலாது. மேலும் நாடுகளின் எல்லைக் கோடுகளைத் தாண்டி, இனம், மதம், சாதி என்னும் எல்லா வரையறைகளையும் தாண்டி, உலகெங்கும் கொண்டாடப்படுகின்ற ஒரே நாளாகவும் அது இருக்கின்றது.

ஆனால் சித்திரை 1 எந்த விதத்திலும் புத்தாண்டிற்குப் பொருத்தமானதன்று. தமிழ் வருடங்கள் என்று சொல்லப்பட்ட அந்த 60 வருடங்களில் ஒன்றின் பெயர் கூட தமிழ்ப் பெயராக இல்லை. அனைத்தும் வடமொழிப் பெயர்கள். அந்த 60 ஆண்டுகளும் தோன்றியதற்கான பின்புலமாகச் சொல்லப்படுகின்ற புராணக் கதையோ ஆபாசமும், அருவெறுப்பும் நிறைந்ததாக உள்ளது. அந்த கதையை நம்பி நாம் இத்தனை ஆண்டுகள் அதனை புத்தாண்டாய்க் கொண்டாடினோம் என்பது வெட்கப்படத்தக்கதாகவே உள்ளது.

இழிவை நீக்கி, தை முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாக அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் நாம் நம் நன்றியைத் தெரிவிக்கின்றோம். உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள், இனி பொங்கல் நாளையே புத்தாண்டாகவும் கொண்டாட வேண்டும் என்று வேண்டி மகிழ்கின்றோம்.

சித்திரை முதல் நாளுக்கு எந்தச் சிறப்பும் இல்லையா என்று கேட்டால், ஒரே ஒரு சிறப்பு மட்டுமே உண்டு. அந்த நாள் (ஏப்ரல் 14) அறிவில் சிறந்த அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் என்பதுதான் அது.

– சுப.வீரபாண்டியன்

 

நன்றி : கீற்று இணையம்


%d bloggers like this: