தலிபான்களின் சடலங்கள் மீது அமெரிக்கப் படையினர் சிறுநீர் கழிக்கும் வீடியோவினால் சர்ச்சை

Home » homepage » தலிபான்களின் சடலங்கள் மீது அமெரிக்கப் படையினர் சிறுநீர் கழிக்கும் வீடியோவினால் சர்ச்சை

ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட தலிபான் கிளர்ச்சியாளர்களின் சடலங்கள் மீது அமெரிக்கப் படையினர் சிறுநீர் கழிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்கப் படையினரின் இந்நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் லியோன் பனேட்டா, இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.

அமெரிக்க இராணுவ சீருடையணிந்த அமெரிக்கப் படையினர் நால்வர், தரையிலுள்ள 3 சடலங்கள் மீது சிறுநீர் கழிக்கும் காட்சி அவ்வீடியோவில் உள்ளது. அக்காட்சி படம்பிடிக்கப்படுவதை அவர்கள் உணர்ந்தவர்களாக தென்படுகின்றனர்.

‘இந்த வீடியோவை நான் பார்த்துடன் அதில் விவரிக்கப்பட்டிருந்த நடத்தையை முற்றிலும் விசனகரமானதென கண்டேன். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அவற்றுக்கு முழு அளவில் பொறுப்புடைமையாக்கப்படுவர்’ என அறிக்கையொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் படையினரின் இந்நடவடிக்கையை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் கண்டித்துள்ளார்.

அவரின் அலுவலகம் விடுத்த அறிக்கையில், “3 ஆப்கானிய சடலங்கள் மீது அமெரிக்கப் படையினரின் சிறுநீர் கழிக்கும் வீடியோ குறித்து ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மிக விசனமடைந்துள்ளது. அமெரிக்கப் படையினரின் இந்நடவடிக்கை மனிதத் தன்மையற்றதும் கடுமையாக கண்டித்தக்கதுமாகும். இந்த வீடியோ குறித்து அவசரமாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளாக காணப்படும் எவருக்கும் கடுமையாக தண்டனை வழங்குமாறு அமெரிக்காவை கோருகிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

தலிபான் பேச்சாளர் காரி யூஸுப் அஹ்மடி இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில், அமெரிக்கப் படையினர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவது முதல் தடவை அல்ல எனவும் அமெரிக்கப் படையினர் மீதான தலிபான்களின் தாக்குதல் தொடரும் எனவும் கூறியுள்ளார்.

தலிபான் அமைப்பின் மற்றொரு பேச்சாளர் ஸபிஹுல்லா முஜாஹித் இது தொடர்பாக ஏ.எப்.பியிடம் கூறுகையில், ‘இது காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கை. கடந்த 10 வருடங்களில் இடம்பெற்ற இவ்வாறான நூற்றுக்கணக்கான சம்பவங்கள் வெளிப்படுத்தப்படவில்லை’ என்றார்.

அதேவேளை, இந்த வீடியோ காரணமாக சமாதான பேச்சுவார்த்தைகள் பாதிப்படையாது எனவும் அவர் கூறினார். ‘இது ஓர் அரசியல் செயற்பாடல்ல. எனவே இந்த வீடியோ எமது பேச்சுவார்த்தையையோ கைதிகள் பரிமாற்றத்தையோ பாதிக்காது’ என அவர் கூறினார்

Comments Closed

%d bloggers like this: