அனைத்துலகம்

ஈரான் கார் குண்டுவெடிப்பில் அணு விஞ்ஞானி பலி

ஈரானில் புதன்கிழமை காலை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் அணு விஞ்ஞானியும் நட்டான்ஸ் யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் பணி புரிந்தவருமான முஸ்தபா அஹ்மடி ரோஷன்(32 வயது) கொல்லப்பட்டார். குறித்த காரின் சாரதியும் உயிரிழந்துள்ளார்.

தலைநகர் தெஹ்ரானின் வடக்கு வீதியில் இடம்பெற்ற இத்தாக்குதலில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

பலியான விஞ்ஞானி முஸ்தபா ஈரான் எண்ணெய்த் தொழிற்றுறை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமாவார்.

அண்மைய ஆண்டுகளில் ஈரானிய அணு விஞ்ஞானிகள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவும் இஸ்ரேலும் இவற்றைச் செய்வதாக ஈரான் குற்றம்சாட்டிய போதிலும் இரு நாடுகளும் குற்றச்சாட்டை மறுத்து வருகின்றன.

ஈரான் துணை ஜனாதிபதி முகமட் றீசா றஹிமி, “அஹமடி ரோஷன் மீதான தாக்குதல் மூலம் நாட்டின் அணுசக்தி திட்டத்தின் முன்னேற்றத்தை நிறுத்தி விட முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் இப்படுகொலை ‘வெளிநாட்டு அரசு ஆதரவு பயங்கரவாதத்திற்கான ஆதாரம்’ என வர்ணித்துள்ளார்.